imb39

ஓவியம் : இளையராஜா

நேற்று குலதெய்வமான அங்காளம்மன் கோவில் கெடாவெட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். மாமாவீட்டு அழைப்பு என்பதால் கட்டாயத்தின் பேரில் கோவிலுக்குச் செல்லுவதாக இருந்தது. பொதுவாக இந்தமாதிரி கும்பல் சேருமிடத்திற்குச் செல்வது எனக்குப் பிடிக்காது. தவிர எனக்குத் தெரிந்தவர்கள் அல்லது சமவயதுடைய இளைஞர்கள் யாரும் இருக்கமாட்டார்கள், இருந்தாலும் என்னுடன் பேசமாட்டார்கள். நானும் தம்பியும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு யாராவது தெரிந்தவர்கள் வந்திருக்கிறார்களா என்று பார்த்தோம். கோவில் வாசலில் மாமாவும் அக்காவும் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தனர். கோவிலுள் நுழையுமுன்னர் என் மாமாவைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு மாமா பொண்ணை மட்டும் அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தேன். அட..... அவசரப்படாதீங்க... அந்தப் பொண்ணுக்கு வயசு ஒன்றரைதான் ஆகிறது. குழந்தையைத் தூக்கிக் கொண்டே உள்ளே நுழைந்தேன். என்னைமாதிரி வயதிலுள்ளவர்கள், கையில் குழந்தையுடன் இருப்பதைப் பார்த்தால் எல்லாரும், கல்யாணமாகி குழந்தை பெற்றவன் எனும் நோக்கில் பார்க்கக் கூடும். ஆனால் இதற்கெல்லாம் நான் அலட்டிக் கொள்வது கிடையாது. நீங்கள் எல்லோரும் நினைப்பீர்கள், என்னை “ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்” என்று... நிச்சயமாக இல்லை.. கோவிலுக்குள் இருக்கும் பெண் சிலைகள் முதற்கொண்டு சைட் அடிக்கும் பலே பேர்வழி நான். பக்தியை பூசிக் கொண்டு நிற்கும் ஒரே இடம் சாமி தரிசனத்தின் போது மட்டும்தான்.

கோவிலில் நீண்ட வரிசை இருந்ததால் வரிசையில் நின்றுகொண்டு மாமா குழந்தையுடன் விளையாடிக்கொண்டே நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னே ஒரு பெண்ணும் அவள் கையில் ஒரு குழந்தையும் இருந்தது. அந்த பெண்ணருகே தான் நின்று கொண்டிருந்தேன். மாமா குழந்தையிடம் “சூடு... சூடு...” என்று அந்த பெண்ணின் குழந்தையைப் பார்த்து விளையாடிக் கொண்டிருக்கையில் அந்த பெண் மெல்ல திரும்பினாள்...

பொன்னியின் செல்வன் படித்திருப்பீர்கள், அதில் நந்தினியை கல்கி அவர்கள் விவரித்திருப்பாரே... வட்டவடிவிலான முகம், நல்ல பெரிய கண்கள், விழியோரம் கறுத்த மை, அளவான மூக்கு, அதில் பொட்டுவைத்தமாதிரி மூக்குத்தி, சின்னதாய் சின்ன வாய்... உங்களுக்கு எந்த பெண்ணிடமாவது பேசவேண்டும் என்றால் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு தைரியமாகப் பேசலாம். என் மாமா பையனிடம் ஏதாவது ஒரு பெண்ணைக் காட்டி ”போய் பேசுடா” என்பேன். அவனுக்கு வயது நான்கு.. (என்னைப் போட்டுக் கொடுக்கமாட்டான் என்று நினைக்கிறீர்கள்... அங்கேதான் மிஸ்டேக் செய்கிறீர்கள்) ஆனால் அவன் போய் பேசமாட்டான்... எனக்கு என்னவென்றால், அவன் போய் பேசினால் அந்த சாக்கில் பேசலாம் பாருங்கள்!! ( அவனிடம் தமன்னாவின் போட்டோவைக் காட்டி “ யாருடா இது என்று கேட்டால் “அத்த” என்பான். யாருக்கு அத்தை என்றால், ”நவி மாமாகு” என்பான்.. அப்படி பழக்கி வைத்திருக்கிறேன் ) சரி நாம் மேட்டருக்கு வருவோம். அந்த பெண்ணிடம்

“உங்க பொண்ணா ?” என்று ஆரம்பித்தேன்.

“இல்ல இல்ல.. இது எங்க அக்கா பொண்ணு” என்று அவசராவசரமாக மறுத்தாள்.

“மீரு மனிவாரா?” கேட்டேன் தெலுகில்....

“ம்ம்... ” என்றாள்

”ஏமி குலம்?”

சொன்னாள்.. இதை எதற்காகக் கேட்கிறேன் என்றாள், எங்கள் வழக்கத்தில் ஒரு குலத்திற்கும் இன்னொரு குலத்திற்குமிடையேதான் திருமணம் நடக்கும். நாங்கள் ”மஞ்சாளூர் வார்ளு”.. நான் திருமணம் செய்து கொள்ளவேண்டுமெனில் “கதிரூர் வார்ளு” அல்லது அந்த குலத்தின் அண்ணன் தம்பிமுறை குலங்களிலிருந்துதான் திருமணம் செய்து கொள்ள முடியும். அப்படியே, அப்போஜுலு, பெத்த கொண்டோஜுலு என்று பல குலங்கள் உண்டு. ஒருமுறை என் அவ்வாவிடம் இதைப் பற்றி கேட்டபொழுது, ஆந்திராவில் ஒரு கிராமத்திற்கும் இன்னொரு கிராமத்திற்குமிடையே திருமணம் நடக்குமாம், ஒரு கிராமத்தினர் மஞ்சாளூர் வார்ளு என்றால் இன்னொரு கிராமத்தினர் கதிரூர் வார்ளாக இருப்பார்கள்... மஞ்சாளூரு வார்ளுவில் பிறந்த எல்லாரும் எனக்கு அண்ணன் தங்கச்சியாக இருப்பார்கள் அதேசமயம் கதிரூர் குலம் எனக்கு முறைப்பெண்கள்!! அந்த பெண் குலத்தின் பெயரைச் சொன்னதும் உடனே என் மாமாவுக்குப் போனடித்து எனக்கு தங்கச்சி முறையா அல்லது முறைப்பெண்ணா என்று கேட்டேன்... முறைப்பெண் தான் வரும் என்றார்.. பிறகென்ன??? அந்த பெண்ணும் வேறு தனியாக வந்திருக்கிறாள், பேச இதைவிட நல்ல வாய்ப்பு இருக்காது.

“எந்த ஊர்ல இருந்து வந்திருக்கீங்க?”

“திருப்பூர்தான். நீங்க”

“நானும் திருப்பூர்தான்... ஆனா உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததேயில்ல.. கருவம்பாளையத்துக்காரங்களா?”

“அவ்னு..”

“பொண்ணு நல்லா துறுதுறுன்னு இருக்கா... பேர் என்னங்க?”

உடனே அவள், குழந்தையிடம் பார்த்து, “ பேர் அடிகேரு சூடு, பேரு செப்பிடு சாமி...” என்று கட்டாயப்படுத்தினாள். சொல்லவேயில்லை, பிறகு என்னிடம் “ இப்போதான், ஒருவருஷம் தான் ஆச்சு” என்றாள். பெயர், தீபிகா.. (படுகோனே?) மெல்ல மெல்ல கூட்டம் நகர்ந்ததும் சாமி தரிசனம் முடிந்து வெளியே சென்றுவிட்டாள். நான் கொஞ்சம் பொறுத்து வெளியே சென்றேன். கோவிலை ஒருமுறை சுற்றிவிட்டு ஓரிடத்தில் அமர்ந்து தீபிகாவை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள்... எனக்கோ இவளிடம் எப்படி பேசுவது என்று யோசனை... வலிய பேசினாள் என்னை “ஜொள்ளன்” என்று நினைக்கமாட்டாளா? ஆனால் வேறு வழியுமில்லை, இன்றைக்கு விட்டால் பின்னொருநாள் கிடைக்க வாய்ப்பேயில்லை. சொல்ல மறந்துவிட்டேனே... அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. பொதுவாக கல்யாணம் ஆகியிருந்தால் தனியே கோவிலுக்குள் வரவாய்ப்பில்லை, கூடவே கணவனும் வந்திருக்கவேண்டும். அதைவிட அவளது கழுத்தில் தாலியுமில்லை. ஒரே ஒரு சின்ன கோபிச்செயின் அணிந்திருந்தாள். மீறிப்போனால் இரண்டுபவுன் வரும். எங்கள் வீட்டு புதுப்பெண்கள் ஒரு கிலோ தாலிக்கயிறு அணிந்திருப்பார்கள்.. கழுத்து முழுக்க மஞ்சக்கயிறாகத்தான் இருக்கும்.. காதுக்குக்கூட சின்னத் தோடு, அவ்வளவுதான்.. அனார்கலி சுடிதார் அணிந்திருந்தாள். கிளிப்பச்சை வர்ணம் என்று சொல்வார்களே, அந்த இளம்பச்சையில், கொஞ்சம் இறுக்கமான ஆடை, தலையைச் சீவி பின்னாமல், ஒரே ஒரு பேண்டு மட்டும் அணிந்து ஹாயாக விரித்துவிட்டிருந்தாள். அந்த பேண்டையும் எடுத்துவிட்டால் இன்னும் தேவதைமாதிரி கேசம் பரந்து இருந்திருக்கக் கூடும். கையில் கூட சின்னதாக கடிகாரமும் இன்னொரு கையில் ஒரேஒரு கண்ணாடி வளையலும் அணிந்திருந்தாள். பார்ப்பதற்கு எந்த ஆடம்பர தோற்றமுமின்றி வெகு எளிமையாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சட்டென எனக்கு ஒன்று தோணவே, என்னுடன் இருக்கும் மாமாவின் குழந்தையை தீபிகாவுடன் நிற்கவைத்து போட்டோ எடுக்கும்படி கேட்டேன்.. சரியென்று சிரித்தாள்... (சத்தியமாக இந்த சிரிப்பை நான் எதிர்பார்க்கவேயில்லை) போட்டோ எடுத்து முடிந்தபிறகு என்னிடம் காட்ட, நான் எடுக்கட்டுமா என்றேன். ம்ம் என்றவளிடம் இரு குழந்தைகளும் நின்று கொண்டிருக்கும்படி ஒரு போட்டோவை எடுத்து பெரிமிதத்துடன் காண்பிக்க, “இதேமாதிரிதான் நானும் எடுத்தேன்” என்றாள்.. நம்ம போட்டோகிராபி மூலைதான் சும்மா இருக்குமா? இரு போட்டோக்களையும் பொருத்திப் பார்க்கச் சொல்லி அவளது போட்டோவில் “தலை கொஞ்சம் கிராப் ஆயிடுச்சு, குழந்தைகளைத் தவிர இன்னொருத்தரும் ப்ரேமில் வரார், தீபிகாவோட கைக் அசைஞ்சதாலே நல்லாயில்ல,” என்று குறைகளை அடுக்கினேன்.. சொல்லச் சொல்ல என் உள்மனம் ஓவரா சொல்லி சொதப்பிடாதே என்று எச்சரித்தாலும், என் அறிவு அதற்கு வழிவிடவில்லை. ஆனால் நிகழ்ந்ததோ வேறு... “என் கிட்ட டிஜிகேம் இருக்கு, அதில எடுத்திருந்தா நல்லா வந்திரும்” என்று சப்பை கட்டு கட்டினாள்... இது கேமரா மேல தப்பில்ல, எடுத்தவங்க மேலதான் தப்பு என்று சொல்லவந்தேன்... பென்ஸின் அறிவுரைப் படி பொண்ணுங்க கிட்ட குறையையும் அதிமேதாவித்தனத்தையும் காட்டவும் கூடாது, கண்டுக்கவும்கூடாது... ஆனால் அந்த சப்பகட்டுதான் பெரிய திருப்புமுனையாக இருந்தது எங்கள் நட்பில்... ஆமாங்க, என்ன டிஜிகேம் இருக்கிறது என்று வினவினேன்.

“நிகோனில் XX கேம்” அந்த XX மாடல் எண்.. மறந்துபோட்டது!

“என்கிட்டயும் இருக்குங்க, நானும் கொண்டுவரலை, ஆனால் என்னோட கேனன், DSLR” என்று ஒரு பிட்டு போட்டேன்...

அவளிடம் ஆர்வம் தொத்திக் கொண்டது. உண்மையில் போட்டோகிராபி பற்றிய ஆர்வம் அவளது கண்களில் மிதப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இதற்குப் பிறகு நாங்கள் பேசிய டயலாக்குகளை இங்கே இரைத்தால் கொட்டாவி விட்டு நீங்கள் கழண்டுகொள்வீர்கள் என்பதால் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். அவளுக்கு போட்டோகிராபி என்றால் இஷ்டமாம், அப்பாவிடம் ரொம்ப நாட்களாக டி.எஸ்.எல்.ஆர் கேட்டு அவர், பொண்ணுங்களுக்கு எதுக்கு அந்த விலையில கேமரா என்று சொல்லி ஒரு வேலைக்காகத டிஜிடல் கேமராவை வாங்கித் தந்தாராம். நிறைய புகைப்படங்கள் எடுத்து வைத்திருப்பதாகச் சொன்னாள். எங்களது பேச்சு அப்படியே கேமராவின் டெக்னிகல் விஷயத்திற்குள் நுழைந்து, கோவிலில் இருந்த காட்சிகளின் வழியாக இறங்கி, போர்ட்ரைட்களுக்குப் போஸ் கொடுப்பவர்களைப் பற்றிய கிண்டல்களைக் கடந்து “கோ” வில் வந்து முடிந்தது. சத்தியமாக எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. நாங்கள் எடுத்துவந்த அவரவர் அக்கா குழந்தைகள் ஓரிடத்தில் நின்றுகொண்டு அவர்களைக் கவனிக்கமாட்டாமல் அழுது கொண்டிருந்தனர். எனக்கோ இன்னும் பேசிக்கொண்டேயிருக்கலாம் என்றுதான் தோணியது.. என்னிடம் பேச நிறைய மேட்டர்கள் இருந்தாலும் சென்னை மெரினாவில் மதிக்கு தாமரை அண்ணா கொடுத்த அட்வைஸ் ஞாபகம் வந்தது... “ பொண்ணுங்க கிட்ட பேசறப்போது, அவங்களை அதிகம் பேசவிடு”

”எனக்கு நேரமாச்சு” என்று கோவிலை விட்டு விருந்து மண்டபத்திற்கு விரைந்தாள். இப்பொழுது அவளைப் பின் தொடர்ந்து செல்வதா, இல்லை பொறுத்துப் போவதா? பின் தொடர்ந்தால் தவறாக நினைப்பாளோ? என்மீதுள்ள ஜெண்டில்மேன் மரியாதை கெட்டுவிடுமோ என்ற சந்தேகம்... ”கோ” படத்தில் பியா சொல்வதைப் போல, ”எத்தனையோ பேர் என்னைப் பார்த்து ஜொள்ளு விடறாங்க, ஆனா அஸ்வின் (ஜீவா) மட்டும் டிஃப்ரண்ட்”... இப்போதுள்ள பெண்களெல்லாம் ஜொள்ளர்களைப் பார்க்கிறார்களா இல்லை தவிர்க்கிறார்களா?? நீயா நானாவில் கோபிநாத்தை பேசச் சொல்லவேண்டும்!

மண்டபத்தில் நிறையபேர் இருந்ததால் அவளை என் கண்கள் தேடி சலித்தது.. குழந்தையை அக்காவிடம் கொடுத்துவிட்டு, தேடிக் கொண்டிருந்தேன். அதற்குள் பந்திக்கான அழைப்பு வந்தது. இந்தமாதிரி பந்தி விருந்து சமயங்களில் என்னுடைய சுபாவம் என்னவெனில் அருகே மிகப் பழக்கமான ஒருவரை வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவேன்.. இல்லாவிட்டால் தெரியாதவர்களோடு ஏதோ ஹோட்டலில் தனியாக அமர்ந்து சாப்பிடுவதைப் போல இருக்கும். மண்டபத்தில் எனக்குத் தெரிந்தவர்களான மாமாவும் அக்காவும் நான் கோவிலுக்குச் சென்ற நேரத்தில் சாப்பிட்டுவிட்டதால் நானும் தம்பியும் உள்ளே நுழைந்தோம். அதுவரையிலும் அவளைத் தேடிய கண்கள் பிறகு பல்பு அடித்தது... அவளும் சாப்பிட வந்தமர்ந்தாள்.. என்னிடம் சைகையிலேயே சாப்பிட்டாச்சா என்று கேட்டாள். நான் புன்னகைத்துக் கொண்டே இல்லை இனிமேதான் என்றேன். மீண்டும் சிரித்தாள்.. Sands of time ன் காலக்கத்தியொன்று என்னிடம் இருந்திருந்தால் கண்டிப்பாக 2 நிமிடங்களைப் பின்னோக்கி மீண்டும் ரசித்திருப்பேன். அவளுக்கு எதிரேயே அமரும்படியான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவள் இருந்த வரிசை முழுக்க சைவம், எனது அசைவம். விருந்துகளில் அசைவம் மிக அளவோடுதான் சாப்பிடும் பழக்கம். ஆகையால் அவள் எழும் வரை சாப்பிடப்போவதாக முடிவெடுத்து மெல்ல மெல்ல காலத்தை இழுத்துத் தின்றேன்... அவளைப் பார்ப்பது போல பார்த்து பிறகு வேறிடத்தில் கருவிழிகள் கழண்டோடியது. அவளுக்கு என் மேல் பார்வை சுத்தமாக இல்லை, அருகில் அமர்ந்து கொண்டிருந்த இன்னொரு பெண்ணிடம் பேசியபடியே சாப்பிட்டாள், ஒருவேளை அவள் என்னைப் பற்றிக்கூட பேசிக் கொண்டிருந்திருக்கலாம். இதில் என்னவொரு கொடுமை என்றால், இழுத்து இழுத்து தின்ற எனக்கே வயிறு நிரம்பிவிட்டது, அவளோ மாங்கு மாங்கென்று உண்டுகொண்டிருந்தாள், பொதுவாக பெண்கள் எப்பொழுது ஏதோ டயட்டில் இருப்பதைப் போல இத்துனூண்டு சாப்பிடுவார்கள், இவளோ அதற்கு நேர்மாறு.. இவளையெல்லாம் கட்டிக்கொண்டால் ஒருமூட்டை அரிசி அதிகமாகத்தான் வாங்கணும்போல..

அப்பாடி!! முடித்துவிட்டாள்.. ஆனால் அதன்பிறகு எனக்கு பேச வாய்ப்பே கிடைக்கவில்லை. கும்பல் கும்பலாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்... நல்ல வாயாடியாக இருக்கவேண்டும் என்றாலும் இவளிடம் விஷயஞானம் இருக்கிறது. எந்த டாபிக் ஆரம்பித்தாலும் அதில் ஓரளவு அறிவைத் தேக்கி வைத்திருந்தாள். நாம் ஏன் நம் அம்மா அப்பாவிடம் இந்தப் பெண்ணையே கட்டிவையுங்கள் என்று சொல்லக்கூடாது?? சேசே,,, தங்கச்சி வேறு இருக்கிறாள். பின்னர் நம்மை என்ன நினைப்பார்கள்? கல்யாணத்துக்கு இப்பவே உனக்கு அவசரமா என்று கடிந்து கொள்ளமாட்டார்கள்?? ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக நினைத்துக் கொண்டேன். மண்டபத்தை விட்டு வெளியேறும்பொழுது அவளது அலைபேசி எண்ணையாவது வாங்கிக் கொள்ளவேண்டுமென்று.. போகிறபோக்கைப் பார்த்தால் முடியாது போல இருந்தது. தனியாக இருக்கும்பொழுதே கேட்டுத் தொலைத்திருக்கலாம். அவளிருந்த அந்த கும்பலில் யார் யார் அண்ணனோ, தங்கையோ, அக்காவோ, அம்மாவோ? ஏதாவது கேட்கப்போயி ஏடாகூடம் ஆகிவிட்டதென்றால், பணால் தான்.

கிட்டத்தட்ட அவள் கிளம்பும் நேரம்... என்னிடம் வந்தாள், இது எதிர்பார்க்காத நிகழ்வு!!

“உங்க செல்போன் நம்பரைத் தரீங்களா?” என்று தைரியமாகக் கேட்டாள். இத்தனைக்கும் என்னுடன் மாமா, அக்கா, ஏன், அம்மா அப்பாகூட அமர்ந்திருந்தார்கள். எனது அலைபேசி எண்ணைத் தந்தேன்.

“கோவில்ங்கிறதால பத்திரிக்கை கொண்டுவரலை, அடுத்தமாசம் XX தேதி எனக்கு கல்யாணம். நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும்” என்று சொல்லிவிட்டு எனது பதிலை எதிர்பார்க்காமல் வெடுக்கென திரும்பினாள்.. எப்படிச் சொல்லுவது? ஒரு சினிமாத்தனமான முடிவாகிவிட்டது. எனக்கு முகமே இல்லை. ஒருமாதிரியாக ஆகிவிட்டேன். பேசாமல் இப்பொழுதே போய் “என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?” என்று கேட்டுவிடலாமோ என்றுகூட தோணியது.. பிறகு அந்த நினைப்பிலிருந்து வெளியேறிவிட்டேன். சுமார் மூன்று மணிநேர சந்தோஷம், மிகப்பெரிய பலூனை நன்கு ஊதி ஊதி குண்டூசியால் குத்தி வெடிக்க வைத்ததைப் போல இருந்தது. என்னிடம் மாமா “யார் அந்த பொண்ணு” என்று கேட்டார்... ”தெரியலை” என்றேன். உண்மையில் எந்தவகை சொந்தம் என்று அறிந்து கொள்ளவுமில்லை... பிறகு அவரே புரிந்து கொண்டதைப் போல ”குலம் கேட்டது இந்த பொண்ணுக்காகத்தானா?” என்று கேட்டபடி சிரிக்க ஆரம்பித்தார்... சிரிக்காதீங்க மாமா என்று டென்ஷன் ஆனேன். அவரது செல்போனில் தேடிப் பிடித்து  “போனதே,,,, போனதே... என் பைங்கிளீ... வானிலே” என்ற பாடலைப் போட, கடுப்பானேன்

“என்னங்க மாமா... சிச்சுவேஷன் சாங்கா??”... தம்பி வேற ஏற்றிவிட.... உண்மையில் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவியலாத தொண்டையடைப்பு ஏற்பட்டது.. ஏமாற்றத்தின் வலி வலியது.

”எங்கிருந்தாலும் வாழ்க!!”

பிகு: அந்த பெண்ணின் பெயரை நான் கேட்கவேயில்லை. என்னுடைய பெயரையும் நான் சொல்லவில்லை!!

25.4.11

ஜெஸிகாவின் தலை

|

Female Head

என் வீட்டு அலமாரியில்
ஜெஸிகாவின் தலையை எப்போதும் காணலாம்
இரத்தம் இறுகி, உறைந்து போய்
நெடியடிக்காத வண்ணம் பாதுகாத்து வருகிறேன்.
சிலசமயம் கடவுள் பொம்மையைப் போல
பூஜித்தும் வருகிறேன்
எதற்காக என்று கேட்டு
நச்சரித்தாள் மனைவி
ஒரு சொல்லில் எந்த அர்த்தமும் சொல்லமுடிவதில்லை
சொல்லமுடியாத தருணங்களிலெல்லாம்
இவள் என்னைத் தழுவிக் கொள்கிறாள்
வெதுவெதுப்பான
ருசியற்ற முத்தங்களைத் தருகிறாள்
நீர்மங்களாலான உடலாக மாறி
எனது ரகசியங்களைத் தோண்டி
மெல்ல மெல்ல புசிக்கிறாள்
ஒரு காட்டு மானைப் போல
பொறுக்கமாட்டாது
முற்கள் தாங்கும் படுக்கையொன்றில்
திருகி வீசியெறிகிறேன் இவளை
தின்றுவிடும் தாபத்தோடு
தலை பொருந்தச்
சுழன்று விழுந்துகிடக்கிறாள்
ஜெஸிகா.

ஓவியம் : டாவின்ஸி

70465_gal

Direction

Carlos Saldanha

Starring

Jesse Eisenberg, Anne Hathaway, George Lopez

Cinematography 

Renato Falcão

Studio

Blue Sky Studios

Year

2011

Language

English, Portuguese

Genre  

Animation, Comedy

Blue Sky Studio இன் ஐஸ் ஏஜ் படங்களில் பெரும்பாலும் தேடலும், தவிப்பும், இடப்பெயர்ச்சியும் முக்கிய கதைக்காரணிகளாக இருக்கும். தேடலின் வழியே நகைச்சுவையும் பரிதவிப்பும் மிக அழகாகப் பொருத்தி திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஐஸ் ஏஜின் மூன்று திரைப்படங்களும் ஒன்றையொன்று விஞ்சியதாகவே இருக்கும். ப்ளூ எனும் ஒரு அரிதான பறவையைச் சுற்றி நிகழ்வும் வாழ்க்கையும், அன்பும் பாசமும் தேடலுமே ரியோ படத்தின் மொத்தக் கதையுமே,

74429_galசெம்மூக்குப் பறவை, ப்ளூ, மற்றும் ஜ்வெல்.

புக்ஸ்டோர் நடத்தும் லிண்டாவுக்கு (Linda) ப்ளூ எனும் அரிதான பறவை கிடைக்கிறது. அந்த பறவைக்கோ பறக்கத் தெரியாது. பறக்க முயற்சித்தும் பலனில்லை. இச்சூழ்நிலையில் டுலியோ (Túlio) எனும் ப்ரேசில் நாட்டு பறவைகள் ஆராய்ச்சியாளர் லிண்டாவைத் தேடி வருகிறார். ப்ளூ தான் அதன் இனத்தின் கடைசி ஆண்பறவை என்றும், அதனை தன்னுடன் இருக்கும் பெண்ணுடன் சேரவிட்டால் இனம் செழிக்கும் என்று மன்றாடுகிறார். கொஞ்சம் யோசித்து பிறகு ஒத்துக்கொண்டு லிண்டாவும் ப்ளூ பறவையும் ப்ரேசிலுக்குச் செல்லுகிறார்கள்.

டுலியோவின் ஆராய்ச்சிக் கூடத்தில் வனச்சூழ்நிலைமிக்க ஒரு அறையில் அடைபட்டு வெளியே போகத்துடிக்கும் பெண் பறவை ஜ்வெல் (Jewel) உடன் ப்ளூவுக்கு சினேகம் கிடைக்கிறது. பார்த்தவுடனேயே காதலில் மயங்கி விழும் ப்ளூவை ஜ்வெல் கண்டுகொள்ளாமல் வெளியே போகத் துடிக்கிறது. இவர்கள் இருவரையும் தனித்துவிட்டு லிண்டாவும் டுலியோவும் டின்னருக்குச் செல்கிறார்கள். இச்சமயத்தில் பறவைகளைக் கொள்ளையடிக்கும் கும்பலொன்று ப்ளூ மற்றும் ஜ்வெல் பறவைகளைத் தூக்கிக் கொண்டு செல்கிறது. இதை ப்ரேசில்நாட்டு சிறுவன் ஒருவனும்  வெண்கிழட்டுப் பறவை ஒன்றும் ஈடுபடுகிறது. கொள்ளையர் தலைவன் பல அரிதான பறவைகளைத் திருடிக் கொண்டு வந்து வெளிநாட்டுக்கு விற்பவன்!!

1புல்டாக், மஞ்சள் குருவிக்குஞ்சு, மற்றும் செந்தலைப் பறவை

கொள்ளையர் கூண்டில் ஒன்றோடொன்று சங்கிலியால் கட்டப்பட்டு கிடக்கும் ப்ளூவும் ஜ்வெல்லும் அங்கிருந்து தப்பிக்க முயலுகின்றன. அவைகளை வெண்கிழட்டுப் பறவை துரத்துகிறது. முடிவில் ஒரு காட்டினுள் தஞ்சமடைய, அங்குள்ள செம்மூக்குப் பறவையை சந்திக்கின்றன. தங்களது காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை அவிழ்த்துவிட உதவிசெய்யுமாறு இருபறவைகளும் கேட்கின்றன. அச் செம்மூக்குப் பறவையோ தன்னால் முடியாது என்றூம் தனது நண்பன் லூயிஸ் எனும் புல்டாகினால் முடியும் என்று அழைத்துச் செல்கிறது. ப்ளூவுக்கு பறப்பது எப்படி என்று சொல்லித் தரவும் செய்கிறது. எனினும் ப்ளூவால் பறக்க இயலுவதில்லை.

இச்சூழ்நிலையில் வெண்கிழட்டுப் பறவை தனது கொள்ளையர் தலைவனின் உத்தரவுப்படி இரு பறவைகளையும் தேடிவருகிறது. ப்ரேசிலின் ஒரு குரங்குவகையொன்று அங்குவரும் சுற்றுலாப் பயணிகளிடம் “ஆட்டையைப்” போடுவதில் கில்லாடிகள். பறவைகளைக் கண்டுபிடிக்க அவைகளிடம் மிரட்டி பொறுப்பை ஒப்படைக்கிறது வெண்கிழட்டுப் பறவை. ஒரு பறவைகள்
“சம்பா” கிளப்பில் இரு பறவைகளையும் கண்டுகொண்டு அங்கே பிடிக்க வருகின்றன குரங்குப் படைகள்.. இருப்பினும் அங்கிருக்கும் பறவைகளின் உதவியுடன் தப்பிக்கின்றன ப்ளூவும் ஜ்வெல்லும். இதே நேரத்தில் லிண்டாவும் டுலியோவும் ப்ரேசிலின் ரியோ நகரம் முழுக்க போஸ்டர் ஒட்டவைத்து பறவைகளைத் தேடிவருகின்றனர். பறவைகளை முதலில் களவாடிய ப்ரேசில் சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு இருவருக்கும் உதவுகிறான்.

செம்மூக்குப் பறவையும் அதன் நண்பர்களும், ப்ளூவும், ஜ்வெல்லும், இறுதியில் ஒரு புல்டாக்கை சந்தித்து காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை அவிழ்த்துக் கொள்கிறார்கள். ஒரு சின்ன காதல் புரிதல் சண்டையில் பிரிந்து ஜ்வெல் பறந்து செல்கிறது. (ப்ளூவால் பறக்க இயலாதே!) அச்சமயம் பார்த்து வெண்கிழட்டுப் பறவை ஜ்வெல்லை சிறைபிடிக்கிறது. இதனை அறிந்து கொண்ட ப்ளூ, ஜ்வெல்லைக் காப்பாற்ற விரைந்தோடுகிறது. ஆனால் அதுவும் மாட்டிக் கொள்கிறது. லிண்டாவும் டுலியோவும் கொள்ளையர் கூட்டத்தையும் தமது பறவைகளையும் கண்டுபிடித்துவிடுகிறார்கள், அவர்கள் சென்று பிடிப்பதற்குள் கொள்ளையர் தலைவன் விமானத்தில் ஏற்றிச் சென்றுவிடுகிறான்.

இதிலிருந்து எப்படி ஜ்வெல்லும் ப்ளூவும் தப்பிக்கிறார்கள், பறக்கவேமுடியாத ப்ளூ, எப்படி விமானத்திலிருந்து தப்பிக்கப் போகிறது? கொள்ளையர் தலைவன் என்னாகிறான் என்பது பரபரப்பான கிளைமாக்ஸில்!!

2வெண்கிழட்டுப் பறவையும் “திருட்டுக்”குரங்குகளின் இராஜாவும்

கார்டூன் படமென்றாலே இந்தியர்களுக்கு ஒருவித புரிதல் இருக்கிறது. அவைகள் குழந்தைகளுக்காக மட்டுமே படைக்கப்படுகிறது என்பதுதான். ஆனால் உண்மையில் கார்ட்டூன்கள் பின்னவீனத்துவக் கதைகளைக் கொண்ட, குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களுக்கெனவே படைக்கப்படுகின்ற அருமையான திரைப்படங்கள். எந்தவொரு படங்கள் சோடை போனாலும் அனிமேஷன் படங்கள் மட்டும் சோடைபோனதே கிடையாது. ஏனெனில் அதன் பின்னுள்ள கடுமையான உழைப்பு மற்றும் நேர்த்தி. கூடவே அதனிடையே இழைந்தோடும் பரிதவிப்பும் பாசமுமிக்க திரைக்கதை.

ரியோ படம் முழுக்க ப்ரேசிலின் ரியோ நகர அழகையும் கார்னிவல் பிரம்மாண்டத்தையும், மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். ப்ளூ முதன் முதலாக ஜ்வெல்லைப் பார்க்கும் அந்த செயற்கை வனச்சூழ் சிறை இருவரையும் இணைக்கும் விதமாக டிஸ்கோ பாடல்கள் ஒளிரும் கண்ணாடிக் கோளம் என பறவைகளுக்கான இன்னொரு உலகை மனித கொண்டாட்ட காரணிகளோடு இணைக்கும் விதம் அனிமேஷன் படங்களுக்கேயுண்டான உத்தி. ஒன்றிரண்டு சேஸிங் காட்சிகள் பிரமாதம், குறிப்பாக ரியோவின் ஸ்லம் ஏரியாவில் லிண்டாவையும், டூலியோவையும் மோட்டார் வண்டியில் கூட்டிச் செல்லும் சிறுவனின் காட்சி மிகப்பிரமாதம், அதன்ப்பின்னர் ப்ளூவை பறக்க வைக்கும் முயற்சியும், அது தோல்வியடைந்து ப்ரேசில் கடற்கரையில் செய்யும் அமளியும் (குறிப்பாக ஒரு பெண்ணின் புட்டத்தில் பந்து விழுந்து எகிறுவதும் Open-mouthed smile) கிளைமாக்ஸ் காட்சிகளும் மிகப்பிரமாதம். இவர்களின் நண்பர்களாக வரும் செந்தலைப் பறவையும், மஞ்சள் குருவிக்குஞ்சும் திரைக்கு வெளியேயும் பறக்கின்றன.

லிண்டாவின் பரிதவிப்பு முந்தைய படங்களைப் போல (ஐஸ் ஏஜ் ஒன்) அழுத்தமாக இல்லாவிடினும் நகைச்சுவையும் களேபரக் காட்சிகளும் அதனைக் குறைக்கச் செய்கின்றன. குரங்குகளின் சேஷ்டைகளும் அவை ஆட்டையப் போடும் விதமும் மனித திருடர்களை மிஞ்சி நிற்கின்றன. அதன் வடிவமும் முழியும் நகைச்சுவைக் கூட்டும் படைப்பு. குரங்குகளின் இராஜாவாக வரும் ஒரு குரங்கு கைகளில் தங்க ப்ரேஸ்லெட்டுகளையும் வயிற்றும் கடிகாரத்தை ஒட்டியானம் போல கட்டியிருப்பதும், பறவைகளைத் தேடுவதற்கு, மனிதர்களிடமிருந்து களவாடிய பைனாகுலர், டி.எஸ்.எல்.ஆர் கேமராவும், டச் ஸ்க்ரீன் மொபைலும் பயன்படுத்துமிடங்கள் அதீத நகைச்சுவை இழையும் காட்சிகள்!!

என்னதான் அனிமேஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக இருந்தாலும் பிக்ஸாரின் தரம் எனக்குத் தெரியவில்லை. பறவைகள், ரியோ நகரக் காட்சிகள், கார்னிவல் கொண்டாட்டங்கள், பறவைகளின் இறகுகள், புல்டாக்கின் வாயில் ஒழுகும் ஜலவாய் முதற்கொண்டு சிறப்பாகத்தான் இருக்கிறது. இருப்பினும் ஏதோவொன்று குறைகிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை.

படம் பார்க்கும் பொழுதே நினைத்தேன் ப்ளூவுக்கு வாய்ஸ் கொடுத்திருப்பது ஜெஸி எய்ஸம்பர்க்காகத்தான் (Jesse Eisenberg)  இருக்குமென்று. ஏற்கனவே சோஷியல் நெட்வொர்க்கில் வார்த்தைகளை மிக்சியில் போட்டு அரைப்பது போல அந்த ஸ்பீடில் பேசினவர் இந்த படத்தில் பரவாயில்லை, கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். ஜ்வெல்லாக வருபவர் அன்னி ஹதாவே.. இவரை கொஞ்ச நாட்களாகத்தான் பார்த்துவருகிறேன். இருப்பினும் இவருக்குப் பதில் ரீஸ் விதர்ஸ்பூனைப் போட்டிருக்கலாம்…  அல்லது லிண்டாவுக்கு…

குழந்தைகளுடன் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். 3D யில் பார்க்கமுடிந்தால் நிச்சயம் பாருங்கள்!! நகைச்சுவைக்கும் ரசிப்புத் தன்மைக்கும் நான் கியாரண்டி!!


Trailer

131007இந்த வெற்றியை வார்த்தையால் சொல்லி தீர்த்துவிடமுடியுமா? பதிவுகளால் என் மனதில் தேங்கியிருக்கும் ஆக்ரோஷமான மகிழ்வை எழுதிவிடமுடியுமா?? தெரியவில்லை. இந்தியா வென்றது… 28 ஆண்டுகளுக்குப் பிறகு… நான் பிறந்தபிறகு பார்க்கும் முதல் உலகக் கோப்பை கைப்பற்றல்!!! மீண்டும் அதன் பின் தோணி!!!

கிட்டத்தட்ட நான்கு உலகக் கோப்பைகள் பார்த்துவிட்டேன்.  (96, 99, 03, 11) ஒவ்வொரு முறையும் இந்தியாதான் ஜெயிக்கும், இந்தியாதான் ஜெயிக்கவேண்டும் என்று பிரார்த்தனையில்லாத பிரார்த்தனையை செய்து வந்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அணி திணறும் பொழுது இதயத்துடிப்பின் வேகம் அதிகரிப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் நூறு கோடி இதயங்கள் அச்சமயத்தில் வேகமாகத் துடிக்கின்றன என்பதை மறுக்க இயலாது. ஆனால் முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் (2003 தவிர) இச்சமயம் அணியின் ஒட்டுமொத்த பங்களிப்பையும் சிறப்பாக கேப்டன் வியூகத்தையும் எல்லா வித ஆட்டங்களிலும் முண்ணனியில் நிற்கும் திறமையையும் பார்க்கும்பொழுது இம்முறையும் வெல்லவில்லையெனில் வேறு எம்முறைதான் வெல்வது? 131003

இதுவரை இப்படியொரு நீண்ட கிரிக்கெட் தொடரைப் பற்றி நான் எழுதியதேயில்லை, எழுத நினைத்ததுமில்லை. ஆனால் இம்முறை எழுதாமலிருக்க முடியவில்லை. அந்தளவு கிரிக்கெட்டை நேசிக்கிறேனோ எனும் சந்தேகம் எனக்குள்ளேயே. இம்முறை எனது தந்தை, அம்மா, சகோதரி, சகோதரன் என என் வீட்டிலுள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தொடரை முழுக்க பார்த்தோம். சச்சின், தோனி என்ற இரண்டு பெயரைத் தவிர வேறெந்த பெயரையும் தெரியாத, கிரிக்கெட்டைப் பற்றி துளியும் தெரியாத என் தாயார் கூட ஆர்வமாகப் பார்த்தது கிரிக்கெட் எவ்வளவு தூரம் ஊறிப் போய்விட்டது என்பதையே காட்டுகிறது.

சனிக்கிழமை திருப்பூரில் பந்த் போன்றதொரு தோற்றத்தில் எல்லா கடைகளும் மூடப்பட்டு, அல்லது ஏதோவொரு சலூன்கடையில் கூட்டம் வழியப்பெற்று காணக்கிடைத்தது. எனது அலுவலகம் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து பல அலுவலகங்களும் கம்பனிகளும் கட்டாய விடுமுறை அளித்துவிட்டன. வேறெதற்காகவும் இப்படி விடுமுறை தருவார்களா என்பது சந்தேகம்தான். ஒட்டுமொத்த இந்தியாவும் கிரிக்கெட் முன்பு பிரார்த்திதபடியும் வெற்றியைக் கொண்டாடியபடியும் இருந்தது. இரவு அரைமணிநேரத்திற்கு இடைவிடாத வெடிச்சத்தமும் வாணவேடிக்கையும் நிறைந்திருந்தது. எனக்குத் தெரிந்து இப்படி மொத்த இந்தியாவும் ஒரேநேரத்தில் கோர்த்தது இச்சமயத்தில்தானிருக்கும்.. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத என் பாட்டி கூட இந்திய அணியின் வெற்றியை ரசித்ததுதான் உச்சகட்டமே!!131026

தோனி இறுதியாக அடித்த சிக்ஸும் அதற்கு அவர் பார்த்த பார்வையும், இத்தனைக்கும் பந்து சிக்ஸ்தான் என்பது கன்ஃபர்ம் என்றாலும் பந்து சரியாக சிக்ஸுக்கு இறங்குகிறதா என்று கவனித்து முகத்தில் சிரிப்பைக் காட்டியவிதம் இருக்கிறதே!!! நிச்சயம் இதனை வேறு எவராலும் செய்யமுடியாது. கங்குலியாக இருந்தால் அப்பொழுதே சட்டையைக் கழற்றி சுற்றியிருப்பார்!! வென்ற பிறகும் கூட தலைமை நடத்துனன் நான் தான் எனும் இறுமாப்பில் எங்கும் சுற்றவில்லை. ரஜினிகாந்த் “விடுகதையா இந்த வாழ்கை “ என்று பாடிக் கொண்டு செல்வதைப் போல அதன் பிறகு ஆளையே பார்க்க முடியவில்லை… தோனியைப் பொறுத்தவரையில் இது இன்னுமொரு வெற்றி என்பதுதான்!! மிகச் சாதாரணமாக எதையும் கையாளும் திறன்மிக்கவராகவே இருப்பதால் இவரைவிடவும் மற்றவர்கள் தலைமையில் சிறப்பார்களா,… தெரியாது!

குழப்பமான இரண்டாம் டாஸில் இலங்கை ஜெயித்தபொழுதே வயிற்றில் இசையெழுந்தது. மும்பை பிட்சில் ஒளிவெள்ளத்தில் அதிக ரன்களை விரட்டுவது மிகவும் கடினமாயிற்றே. டாஸில் தோற்றதும் தோனி அதற்கான வேலைகளில் சரியாக இறங்கினார். ஆனால் மீண்டுமொருமுறை தவறு செய்தது ஸ்ரீசாந்தை உள்ளே இழுத்ததுதான். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை மிக அழகாக ஸ்ரீசாந்த் நிரூபித்துக் கொண்டேயிருந்தார். ஒருபுறம் ரன்களே இல்லாத மெய்டன் ஓவர்கள், இன்னொருபுறம் வாரிவழங்கும் வள்ளல் ஓவர்கள் என சீராகவே சென்று கொண்டிருந்தது. ஜாஹீரின் ஆஃப் சைட் பாலில் தரங்காவின் மட்டை முத்தம் கொடுத்து சேவக்கின் கையில் தஞ்சம் புகுந்ததுதான் மிகப்பெரிய ப்ரேக்த்ரூ என்று நினைக்கிறேன். இத்தொடர் முழுக்க ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் இலங்கையின் தரங்க வும் தில்ஷானும் சிறந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். எதிர்பார்த்தது போல தில்ஷானும், அரைசதமடிக்க முடியாத நிலையில் சங்ககராவும் சென்றுவிட்டதால் இலங்கையின் தளர்ச்சியடைந்த மிடில் ஆர்டர் ஆட்டம் காணும் என்று நினைத்தவனுக்கு ஜெயவர்தனவின் ஆட்டம் கண்ணில் மண் விழுந்ததைப் போலிருந்தது. ஒப்புக்குச் சப்பாணிகளாக குலசேகரவும் சமரவீராவும் பெராராவும் கடைசி கட்டங்களில் லைன் அண்ட் லெந்தில் குழப்பம் செய்த ஜாஹீரின் பந்துகளையே விளாசிக் கொண்டிருந்த பொழுது ஒட்டுமொத்த இந்தியாவும் சற்றே நம்பிக்கையை இழந்திருக்கும். அதுவரை 5 ஓவருக்கு 6 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த ஜாஹீர், முப்பத்தாறாவது ஓவரிலிருந்து மீகுதி ஐந்து ஓவருக்கு 54 ரன்களை வாரி வாரி வழங்கினார்.. ஜாஹீர் அப்பொழுது பதட்டமான சூழ்நிலையில் பந்தை வீசினார் என்பது நன்கு தெரிந்தது. 274 என்பது பைனல்களைப் பொறுத்தவரையில் இமாலய ஸ்கோர்தான். ஏனெனில் 300 பந்துகளில் மொத்தம் 26 பந்துகள்தான் உங்களால் வீணாக்க முடியும்.

131043சற்றேறக்குறைய நம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பித்தபிறகு ஷேவாக்கின் எல்பி அவர் மீது இருக்கும் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. இத்தொடர் முழுக்க ஷேவக் உறுப்படியாக ஆடவேயில்லை. ஆரம்பத்தில் அடித்த 175 ரன்களே இன்னும் அவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஒரு முக்கியமான போட்டியில் இப்படியா டக் அவுட் ஆவது? அதுசரி, இவர் போனாலென்ன சச்சின் தான் இருக்கிறாரே என்றால் அவரும் ஒரு அவுட்சைட் எட்ஜில் நடையைக் கட்ட, கிட்டத்தட்ட சுத்தமாக நம்பிக்கையிழந்து திரைப்படம் பார்க்கலாம் எனும் முடிவுக்கு வந்துவிட்டேன். ஆனால் சச்சினைக் குறை சொல்ல ஒருவராலும் முடியாது. இன்று கோப்பை கையில் இருக்கிறது என்றால் அதற்கு சச்சினின் 482 ரன்கள் மிக முக்கிய காரணம். அட்லீஸ்ட் இன்னுமொரு 20 ரன்களைச் சேர்த்திருந்தால் மூன்று உலகக் கோப்பையில் 500 க்கும் மேற்பட்ட ரன் எடுத்தவர், அதிக ரன் எடுத்தவர் எனும் சாதனையை எட்டியிருக்கலாம். கடந்த 2003ல் தனிமனிதனாக பைனலுக்கு அணீயைக் கொண்டு சென்றவர் என்பதை நினைவுகூறலாம்.

131016இருந்தாலும் சச்சின் அவுட் ஆனதும் ஒருசிலர் என்னிடம் ”அப்பாடா, நூறு அடிச்சுட்டான்னா ஜெயிக்க மாட்டோம்” என்று சொன்னது எரிச்சலைக் கிளப்பியது. சச்சின் எனும் திறமையான ஆட்டக்காரனை இவ்வளவு கேவலப்படுத்த எப்படி துணிகிறார்கள்?

காம்பிர்+கோலியின் ஆட்டம் உண்மையிலேயே டாப் கிளாஸ் ஆட்டம். மிகச்சரியான பந்துகளைப் பொறுக்கி பவுண்டரிக்கு விரட்டியது இந்த ஜோடி, டில்ஷானின் ஃப்லையிங் கேட்ச் மூலமாக கோலி அவுட் ஆகினாலும் இந்தியா இன்னும் தோல்வி எனும் கோட்டுக்கு வந்துவிடவில்லை என்பதாகத்தான் இருந்தது. எப்பொழுதும் போல யுவி களமிறங்குவார் என எதிர்பார்த்த சூழ்நிலையில் வந்தது தோனி!!

தொடர் முழுக்க 40 ரன்களைக் கூட எட்டாத தோனி களமிறங்கிய்தும் உண்மையில் கோபம் வரவேயில்லை. ஏனெனில் தோனி சிலசமயங்களில் பேட்டிங் வரிசை மாற்றி திட்டம் போடக்கூடிய ஆள். யுவியை அவர் பெண்டிங் வைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். தவிர, இந்தியா சார்பில் இலங்கைக்கு எதிராக தோனியின் ஆட்டம் மிகச்சிறப்பானதும் கூட. கொஞ்சம் கொஞ்சமாக பழைய தோனியின் ஸ்டைலில்லாத காட்டானாட்டம் திரும்பிக் கொண்டிருந்தது. அவரது ப்ரத்யேக குவிக் ட்ரைவ்கள் ஒவ்வொன்றும் 4 ரன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பாலுக்குப் பால் இடைவெளி விடாமல் சிறப்பாக சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு உறுப்படியில்லாத பந்துக்கு கவுதம் காம்பிர் அவுட் ஆனதில் வருத்தம்தான். உலகக் கோப்பை பைனல்ஸில் இதுவரை எந்தவொரு இந்தியரும் சதமடித்ததில்லை. (மொத்தமே 3 பைனலதானே?) காம்பிர் கொஞ்சம் நிதானித்திருக்கலாம்!! அதன்பிறகு 50க்கும் குறைவான ரன்களே என்பதால் இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிட்டது ஒருவேளை இலங்கை டபுள் ஸ்ட்ரைக் ஏதும் செய்யாதிருந்தால்…..

பிறகென்ன…. தோனியின் மொரட்டுத்தனமான ஆஃப்சைட் சிக்ஸரும், இறூதியாக பந்தைத் தூக்கியடித்து முரட்டுத்தனமாக நிதானித்துப் பார்த்த வின்னபில் சிக்ஸரும் தோனியின் பெயரை மிகப்பலமாக வலுவாக்கி விட்டது.131023

இச்சமயத்தில் தோனியின் வியூகம் பற்றியெல்லாம் பேசமுடியவில்லை. எனெனில் பவுலிங்கில்  கடைசி கட்டங்களில் தோனியைத் தவிர மற்ற அனைவரும் பதட்டத்துடனேதான் வீசினர். ஜாஹீரை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டி வந்ததே பெரிய தவறுதான். இரண்டாவது ஸ்பெல்லை கொஞ்சம் முன்னமே கொடுத்திருந்தால் நிச்சயம் விக்கெட் எடுத்திருந்திருப்பார்… அதேபோல ஸ்ரீசாந்தின் ஓவரையும் முன்பைப் போல சச்சினுக்கும் கோலிக்கும் கொடுக்கவேண்டிய நிர்பந்ததை சமாளித்தார் என்பதைத் தவிர வேறெதுவும் பேசமுடியவில்லை.

இந்த வெற்றிக்குப் பின்னால் தோனி போன்ற வீரர்கள் தவிர இன்னுமொருவர் இருந்தார்.. அவர் கேரி கிர்ஸ்டன்.. பயிற்ச்சியாளர். இறுக்கமில்லாத, வீரர்களுடன் சகஜமாகப் பழகக்கூடிய பயிற்சியாளர் என்ற பெயரெடுத்திருந்த கிர்ஸ்டன் ஒரு மிக நல்ல டீமை ஏற்படுத்திவிட்டு மிகப்பெரிய வெற்றியைத் தந்துவிட்டு பிரிகிறார்.. கடந்த 2007 களில் பயிற்சியாளர்களுடன் தகறாரு, கேப்டனின் தலைமை சரியில்லாதது, லீக் போட்டிகளிலேயே மோசமாக வெளியேறியது என பலவகையில் பிரச்சனை வாய்ந்த அணியை தலைகீழாகத் திருப்பிப் போட்டு உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும், நம்பர் டூ ஒண்டே அணியாகவும் மாற்றி T20 மற்றும் ஒண்டே உலகச்சாம்பியனாகவும் உருவெடுக்க வைத்ததோடு மட்டுமில்லாமல், சச்சின், கோலி, காம்பிர், தோனி போன்றவர்களை மிக அழகாக ஷேப் ஆக்கினார்… வெல்டன் கேரி!! இன்னுமொரு பயிற்சியாளர் இப்படி இருப்பாரா என்பது சந்தேகம்தான்!! ரியலி வி மிஸ் யூ கேரி!!

131022வெற்றி சிக்ஸர் அடித்தபிறகு இந்திய வீரர்கள் அழுததும் மகிழ்ச்சியுடன் சச்சினையும் கிரிஸ்டனையும் தூக்கிக் கொண்டு மைதானம் முழுக்க சுற்றி வந்ததையும் பார்த்தபொழுது என்னையுமறியாமல் கண்கள் கலங்கியது. தோனி ஒரு சகவீரராக அச்சமயத்தில் வந்தவர் பிறகு கேமராவின் கண்களில் சிக்காமலேயே போய்விட்டார்..

தொடர் நாயகனான யுவியை ஆரம்பத்தில் நானும் கூட எதற்காக யுவ்ராஜை எடுத்தார்கள் என்று கேட்குமளவுக்கு மோசமான ஃபார்மில் இருந்தவர் தொடர் நாயகனாகி வாயடைத்ததும், இந்த வெற்றி சச்சினுக்கானது என்று பெரிமிதத்துடன் சொன்னதும் யுவ்ராஜை பல உயரங்களுக்கு உயர்த்திவிட்டது. இந்த வெற்றி சச்சின், கும்ப்ளே, ட்ராவிட், கங்குலி போன்ற சகவீரர்களுக்கு டெடிகேட் செய்வதாகக் கூறிய தோனியும் பலமடங்கு உயர்ந்துவிட்டார்…131053 வெற்றியினால் மொட்டை அடித்து காணிக்கை செலுத்தியிருக்கும் அவரது பக்தியை மெச்சாமலிருக்க முடியாது….

இலங்கை தரப்பில் ஜெயவர்தனேயின் சதம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் வீசாததும் ஃபீல்டிங் குறைபாடுகளுமே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. மலிங்காவின் இறுதி பந்துவீச்சு முழுக்க யார்கராகவே இல்லை. டாஸ்பாலாகவே சென்றது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் நெருக்கடி கூட கொடுக்க முடியவில்லை. முரளிக்கு அட்லீஸ்ட் ஒரு விக்கெட்டாவது கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான்.. கடைசி போட்டியில் சோபிக்காமலிருந்தது வருத்தத்தைத் தந்தது. முழுவதுமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முரளி இல்லாதது இலங்கை அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கக் கூடும். இந்திய அணிக்கு எப்படி சச்சினோ அதைப் போல இலங்கைக்கு முரளி என்பதை யாராலும் மறுக்கவியலாது. வெல்டன் முரளி. நீங்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் மறக்கவியலாதது. சிறப்பான வீரராகவே முடிவு பெற்றீர்கள்!! ஐபிஎல் இல் சந்திப்போம்..

ஆகமொத்ததில் இந்தியா இரண்டு பைனல்களை சந்தித்தபிறகுதான் மூன்றாவதான அசல் பைனலுக்கு வந்தது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை வென்றதே இன்னும் மனதை விட்டு தீராத நிலையில் இலங்கையைத் தோற்கடித்தது பல நாட்கள் நெஞ்சில் நிற்கும்.  மீண்டுமொரு வெற்றி கிடைக்குமோ கிடைக்காதோ….. இந்த வெற்றி இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றி!!

தொடர்ந்து சாதியுங்கள் வீரர்களே!!

sachin cup நீண்டநாள் கனவு நனவான சந்தோஷத்தில் சச்சின்

dhoni cup

ரியல் சாம்பியன்

படங்கள் உதவி : http://espncricinfo.com

Subscribe