மன்மதன் அம்பு - விமர்சனம்




Direction : K. S. Ravikumar
Written : Kamal Haasan
Starring : Kamal Haasan, Trisha Krishnan, R. Madhavan, Sangeetha
Music : Devi Sri Prasad
Year : 2010
Language : Tamil
Genre : Romantic Comedy

மன்னார், மதனகோபால், அம்புஜாஸ்ரீ ஆகிய மூவரும் மன்மதன் அம்பு...

ரொமாண்டிக் காமெடிகளில் கமல் படம் மட்டும் தமிழ் திரைப்படங்களில் தனித்து இருக்கும். அதற்கு மிக முக்கிய காரணம் கிரேஸி மோகனின் வசனங்கள். ஆள்மாறாட்டம், வசனகுளறல், என நொடிக்கு நொடி காமெடி வழங்குவதில் மனிதர் கில்லாடி. மன்மதன் அம்புவில் வசனங்கள் கமல் என்று டைட்டிலில் போட்டாலும் கிரேஸியின் துணையின்றி கமலால் செய்திருக்க முடியுமா என்று சந்தேகம் வலுக்கிறது.. 


திரிஷா ஒரு நடிகை. அவரைக் காதலித்துக் கொண்டிருக்கும் மாதவன் பெரிய தொழிலதிபர். திரிஷாவின் ஷூட்டிங்கில் சூர்யாவோடு ஆடுவதையும் கேரவனில் சென்று மேக்கப் போடுவதையும் பார்த்த மாதவனுக்கு சந்தேகம் ஆரம்பிக்கிறது. அதனைத் தீர்வு செய்ய மாதவன் முடிவெடுக்கிறார். தனது புதிய அமெரிக்க காரான Hummer ஐ ஓட்டிப் பார்க்கச் சொல்லி கொடைக்கானல் மலைப்பாதையில் இருவரும் செல்கின்றனர். மாதவன் தான் சந்தேகப்பட்டதைக் கேட்கையில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் திரிஷா மாதவனோடு விவாதித்தே சட்டென எதிரே வந்த காரில் மோதிவிடுகிறார். சுதாரித்து காரை நிறுத்திவிட்டு இறங்குகையில் திரிஷாவைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைகிறார்கள். இந்த குழப்பத்தில் மாதவனும் திரிஷாவும் பிரிந்துவிடுவதாக முடிவெடுத்து கிளம்பிவிடுகிறார்கள்.

மூன்று வருடங்கள் கழித்து பாரீஸில் திரிஷாவும் அவரது தோழியான சங்கீதாவும் விடுமுறையைக் கழிக்க வருகின்றனர். தனது பழைய சம்பவங்களை அசைபோட்டுக்கொண்டிருக்கும் திரிஷாவிடம் ஒருவன் பிக்பாக்கெட் அடிக்க, அதனைத் தடுக்க எண்ட்ரியாகிறார் கமல்ஹாசன். தனது நண்பனான ரமேஷ் அரவிந்திற்கு கேன்சருக்கான ஹீமோதெரபி சிகிச்சைக்காக மாதவனிடம் தற்காலிகமாக கமல்ஹாசன் ஒரு ஸ்பை போன்று வேலை செய்கிறார். திரிஷா விடுமுறையில் யாரோடு கழிக்கிறார்? என்ன செய்கிறார் எனும் சந்தேகக் கண்ணோடு பார்க்கச் சொல்லுகிறார் மாதவன். ஒரு கட்டத்தில் திரிஷா நல்ல பெண்மணி எனும் சர்டிஃபிகேட் கொடுக்கும் கமலுக்கு பணம் கொடுக்காமல் கல்தா கொடுக்கிறார் மாதவன். இதனால் வேறுவழியில்லாமல் கமல்ஹாசன் பொய் சொல்ல ஆரம்பிக்கிறார். திரிஷாவுக்கும் இன்னொரு நபருக்கும் தொடர்பு இருக்கிறது என்று. அந்த இன்னொரு நபராக தன்னையே கற்பனித்துக் கொள்கிறார். இதனைக் கேட்கையில் சூடாகும் மாதவன் கமலுக்கான பணத்தை செட்டில் செய்வது மட்டுமின்றி தொடர்ந்து வேலை செய்யவும் சொல்கிறார். ஒரு கட்டத்தில் கமல்ஹாசனின் மனைவியின் இறப்புக்கு திரிஷாதான் காரணம் என்றறிந்த பின்னரும் என்ன செய்யமுடியும் இனிமேல் என்று தத்துவம் பேசி திரிஷாவைப் பின் தொடர்கிறார் கமல். திரிஷாவுக்கு கமல் மேல் காதல் வந்துவிடுகிறது. படம் முழுக்க பொய் சொல்லிக் கொண்டு திரிஷாவை நல்ல பெண்மணியாகவும் அதேசமயம் இன்னொரு நபரோடு தொடர்பு இருப்பதாகவும் சொல்லுவதால் ஆத்திரமடையும் மாதவன் நேராக கிளம்பி பாரீஸுக்கு வந்து திரிஷாவையும் கமல்ஹாசனையும் சந்திக்கிறார். முடிவு என்னானது என்பது வெள்ளித்திரையில்......

கமலும் சங்கீதாவும் சேர்ந்து செய்யும் நாடகங்கள், மாதவனின் தள்ளாட்ட நடிப்பு, ஓரிரு காட்சிகளிலே மட்டும் வந்தாலும் அசத்தும் ஸ்ரீமன், சங்கீதாவின் குழந்தைகளாக வரும் பொடுசுகளின் அறியாத்தன காமெடி, கிளைமாக்ஸ் முழுக்க நிறைந்திருக்கும் குழப்ப காமெடி, தொய்வடையாத கதைப்போக்கு போன்றவை படத்தின் நிறைகள். பொதுவாக கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் நிறைய பாத்திரங்கள் வந்து செல்வார்கள். ஆரம்பத்தில் சூர்யா ஒரு பாடலுக்கு ஆடிச் செல்கிறார். பின்னர், உஷா உதூப், ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, களவாணி புகழ் ஓவியா, மலையாளிகளாக வரும் தம்பதியினர் என அறிமுகங்கள்.. மலையாள தம்பதியினர் ஒரு கட்டத்தில் எரிச்சலாக இருந்தாலும் பின்னர் காமெடியில் செட்டில் ஆகிவிடுகிறார்கள். படத்தில் ஒரே ஒரு சண்டைக்காட்சி மட்டுமே... அதுவும் கமல் இண்ட்ரோ ஆகும் பொழுது. ஆனால் கிளைமாக்ஸ் ஒரு குழப்பத்தனமான முடிவு. தனது முந்தைய படமான உன்னைப்போல் ஒருவனில் ஜோடியைக் கண்ணிலேயே காண்பிக்காததாலோ என்னவோ இதில் சற்றே இறங்கி திரிஷாவை லவ்வியிருப்பது செயற்கைத்தனமான கதைப்போக்கின் முடிவு. ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே வந்தாலும் வெகு அழகான நேர்த்தியான நடிப்பு கமலின் மனைவியான ஃப்ரான்ஸ் நாட்டுப் பெண்ணுக்கு...

கமலுக்கு பெரிய இண்ட்ரோ கொடுக்கலாமா இல்லை எந்திரனில் ரஜினியைப் போல சாதாரணமாகவே கொடுத்துவிடலாமா எனும் சந்தேகத்தோடு அவருக்கு இண்ட்ரோ கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. வயது ஏறிக் கொண்டிருப்பதாலேயோ அல்லது உண்மையிலேயே கதைக்காகவோ கமல் (கிட்டத்தட்ட) ஜோடியின்றி நடித்திருக்கிறார். ஆனால் கமலைக் காட்டிலும் மாதவனும் சங்கீதாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.. பொதுவாக கமலின் இந்தமாதிரியான காமெடிப் படங்களில் ஒரேவகையான தீம்தான் இருக்கும். அது சந்தேகப்படுவது... சதிலீலாவதி, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற கமலது முந்தைய படங்களிலும் சந்தேகப்படுதல் அந்தந்த படங்களின் முதுகெலும்பாக இருக்கும். மன்மதன் அம்பும் விதிவிலக்கல்ல.. மாதவன் படம் முழுக்க சரக்கடித்துக் கொண்டுதான் வருகிறார். அவர் செய்யும் காமெடிகள் அற்புதமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து மாதவன் அருமையான காமெடி நடிப்பு இப்படத்தில்... திரிஷா ? விண்ணைத்தாண்டி வருவாயாவில் இருந்த திரிஷா இல்லை... ஒரு நடிகை திரிஷா... பெரிதாக அப்படியொன்றும் நடிப்பில்லை என்றாலும் ஓகே ரகம். 

கிரேஸிமோகன் இப்படத்தில் இருந்திருக்கவேண்டும். கமல் காமெடி வசனங்களில் புகுந்து விளையாடியிருக்கிறார். குறிப்பாக சங்கீதா பேசும் வசனங்கள்.. சரக்கடித்துவிட்டு ஸ்ரீமன்னும் மாதவனும் குழம்பிக்கொள்ளும் காட்சிகள் படம் முழுக்க மாதவன் பேசும் வசனங்கள், சங்கீதாவும் கமலும் போடும் நாடக ஒத்திகைகள் எல்லாமே செம காமெடி. அதேசமயம் இண்டலக்சுவலாகவும் ஓரிரு வசனங்கள் உண்டு. இந்த உலகத்துல நேர்மையா இருக்கற பொண்ணுக்கு திமிர்தான் வேலி, வீரத்தோட மறுப்பக்கம் மன்னிப்பு, வீரத்தோட உச்சகட்டம் அகிம்சை என சில உண்டு. யதார்த்தமாக இருக்கவேண்டும் என்பதாலோ என்னவோ ஆங்கில வசனங்கள் மிக அதிகம். கெளதம் மேனன் படத்திற்கு வந்துவிட்டோமோ என்றும் தோணும். ஒரு சில இடங்களில் கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நான் பொறுத்துக்குவேன், தமிழ் பொறுக்குமா?.... தமிழ் தெருப்பொருக்கும்.... நீங்க ஏன் தமிழில் பேசி நடிக்கிறதில்லை என்று கமல் கேட்குமிடங்கள், கமல் தன்னைப் பற்றி சொல்லும் பொழுது வலியை வார்த்தையால் சொல்லுவது போன்றவை கமல் டச்... ஆனால் படத்தின் ஆரம்பம் காமெடிப்படமா இல்லை ஏதாவது ட்ராமா சப்ஜெக்டா என்று சோதிக்க வைக்கிறார்கள்... பிற்பாதி முழுக்க காமெடி, மாறாக முற்பாதியில் வெகு குறைவு!!

படத்தில் லெவ் ரெக்கார்டிங் முறை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழில் இந்தமாதிரி முயற்சிகள் வெகு அரிது. பாரீஸின் வெளிவீதிகளில் சுற்றுவதால் உண்மையாகவே கேட்கும் இரைச்சல்களும் வசனங்களும் ஓவர்லாப் ஆகும்போது ஒருசில இடங்களில் வசனம் புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. படத்தின் டோன் (வர்ணம்) ஒரு ட்ராமா படத்தைப் போல இருந்தாலும் இது வெறும் கமலின் காமடிக்கூத்து என்பதை அவ்வப்போது நினைவூட்டிக்கொண்டேயிருந்தது. ஒரு ரிச்னெஸும் தெரிகிறது.. ட்ராமாவாக ஆரம்பிக்கும் காட்சிகள் சட்டென காமெடி ட்ராக்குக்கு மாறிவிடுவது சோபை. ஒரு நடிகை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெகு அழகாக காட்டியிருக்கலாம். ஆனால் அப்படியுமில்லை. ரமேஷ் அரவிந்த் வரும் காட்சிகள் தேவையற்றது. எனினும் கதைப்படி அக்காட்சிகள் எந்தவொரு அழுத்தமும் தரவில்லை. ஆகமொத்தத்தில் மன் மதன் அம்பு - சிரிப்பு மட்டுமே தேவை என்பதற்காக பூசி மெழுகப்பட்ட திரைக்கதை இயக்கம்...

இசை? பிண்ணனி இசை மோசம்... ஆனால் இந்த படத்திற்கு இது போதும் என்று நினைத்தார்களோ என்னவோ, ரமேஷ் அரவிந்தைக் காண்பிக்கையில் ஒரு செண்டிமெண்டல் இசை, கமல் அழுகையில் ஒரு செண்டிமெண்டல்... ஒருசில படங்களில் இசையே படத்தைத் தூக்கிக் கொண்டு செல்லும்.. இப்படத்தில் வேண்டுமே என்பதற்காக இசைக்கப்பட்டிருக்கிறது. பாடல்களில் நீ நீலவானம் மட்டுமே மனதில் நிற்கிறது. இப்பாடல் ரிவர்ஸபில் முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழுக்குப் புதியது என்றாலும் அதுவும் ஒரு காப்பியாகவா இருக்கவேண்டும்?? Cold Play யின் The Scientist பாடல் ரிவர்ஸ் குரோனாலஜி முறையில் எடுக்கப்பட்ட பாடல் அப்பாடலில் Chris Martin ன் கோ ஆக்டருக்கு ஆக்ஸிடண்ட் ஆனபிறகு வரும் சம்பவங்களை ரிவர்ஸில் எடுத்திருப்பார்கள் நீ நீலவானம் பாடலில் கமலின் மனைவிக்கு ஆக்ஸிடண்ட் ஆவதற்கு முன்பு நடந்த சம்பவங்களை ரிவர்ஸில் எடுத்திருக்கிறார்கள். அவ்வளவே வித்தியாசம். ரிவர்ஸில் காட்சிகள் போகும் பொழுது பாடலுக்கு ரிவர்ஸிலேயே வாயசைக்கவேண்டும் அப்பொழுதுதான் நமக்கு பாடுவதைப் போலவும் காட்சிகள் ரிவர்ஸில் செல்வதைப் போலவும் தோன்றும். எனினும் ஓரிரு இடங்களில் Sync ஆகவில்லை..

ஒளிப்பதிவு மனுஷ் நந்தன்... புது ஆள் என்று நினைக்கிறேன். எந்த இடத்திலும் பிசகில்லாத ஒளிப்பதிவு.... கிட்டத்தட்ட 75 % படம் முழுக்க முழுக்க கப்பலிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. மிகப்பிரம்மாண்டமான கப்பலை இறுதியில் அழகாக காட்டியிருப்பது தமிழுக்கு புதுசுதான். கொடைக்கானல், பாரீஸ் மற்றும் கப்பலின் உள்தளங்கள் ஆகியவை சிறப்பான ஒளிப்பதிவாக்கத்தில் இயக்கப்பட்டிருக்கின்றன. இயக்கம் கே.எஸ்.ரவிக்குமார் என்றாலும் கமல்தான் படம் முழுக்க தெரிகிறார்.

மொத்தத்தில் மன்மதன் அம்பு சிரிக்க மட்டும்.....

Comments