07-04-2009

மதுக்கோப்பையின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் போதையைப் போன்றது கழியாத இரவுகள். விலக்கிக் கொள்ள முடியாத பந்தத்தால் கட்டுண்டு மயங்கிக் கிடக்கும் இந்த நீண்ட இரவைப் போக்குவதற்கான வழிமுறைகளை இதுவரை எந்த புத்தகத்திலும் படித்ததில்லை. சுருண்டு ஒரு மையத்தில் குவிந்து உறங்கிய எனது பிம்பம், கழியாத இரவுகளில் நின்று நடனமிட்டுக் கொண்டிருக்கிறது. அது எப்பொழுதும் என்னை அவமானப்படுத்துவதாகவே தோன்றுகிறது.

விடியல் பிறந்ததும் இரை தேடியலையும் பறவைகளைப் போன்று இரவு பிறந்ததும் உறக்கத்தைத் தேடியலைய வேண்டியதாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இத்தனை நாட்களாக இருந்த உறக்கம் இப்பொழுதெல்லாம் எங்கே சென்றது? சொக்கி விழும் இமைகளைப் பார்த்தே வெகு நாட்களாகிவிட்டது. உறக்கத்தை வழுக்கட்டாயமாக வரவழைக்கும் படியான யுக்தியைக் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. இதைப் போன்று படர்ந்து கிடக்கும் இருளின் ஓங்காரம் எனது மன அதிர்வுகளுக்குள் நுழைந்து ஒவ்வொரு நுனியாக அசைத்து என்னை அச்சமேற்படச் செய்கிறது. இரவுகளின் சக்தியை நன்கு உணர்ந்து கொள் என்று இதயத்தின் மேல் எழுதிச் செல்கிறது.

எழுத்துக்களை சிலர் வாசிக்கத் துவங்கியதும் அதிகம் எழுதியதும் இரவுகளில் தான், இணையத்தில் எழுத்துக்களுக்காக புழங்காத காலங்களில் பழைய தினக்குறிப்புகளை வாசிப்பதும், யாரோ ஒருவரை நினைத்து அழுது நோவதும், நினைவுப்பறைகளைத் தட்டி சிரித்துக் கொள்ளுவதுமாக ஒவ்வொரு நொடிகளையும் தள்ளிக் கொண்டிருந்தேன். ஒருவேளை இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசிக்கையில் வேடிக்கையாக இருக்கிறது. நன்கு திரண்ட எழுத்து மூட்டைகளை வழியெங்கும் இரைக்காமல் சுமந்துகொண்டு செல்வது எவ்வளவு கடினமான விஷயம்!!

இதுவும் ஒருவகையான சுயநிந்தனைதான். 2002 ல் இருந்து தூரப்பார்வைக்காக கண்ணாடி அணிந்து வருகிறேன். வேலைப்பளு தலைதூக்கும் பொழுதெல்லாம் இரவுகளில் தொடர்ந்து வேலை செய்தபடி அமர்ந்திருப்பேன். இரவுகள் நேசிக்கத் துவங்கியபிறகு எனது அலுவலகத்தில் ஒளியைப் பாய்ச்சாமல் இருளிலேயே வேலை செய்து வந்தேன். கணிணி திரையை நன்கு உற்று நோக்கி நுணுக்கமாக செய்யும் பணியை மேற்கொண்டிருப்பதால் என் கண்களைச் சுற்றிலும் வலிக்க ஆரம்பித்தன. அப்பொழுதிருந்த காலசூழ்நிலையில் உடல்நலம் பேணுதல் குறித்த எந்த கவலையுமின்றி பணியை செய்யலானேன். அதன் விளைவுகள் கண்ணாடியை மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கண்களின் மங்கும் திறன் மேன்மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் சுதாகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. கண்களின் முக்கியத்துவத்தை மெல்ல மெல்லத்தான் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஆனால், இன்றுவரையிலும் விடமுடியாத தூரத்தில் இரவுகள் என்னைப் பிணைத்து கட்டியிருக்கிறது. தினமும் தூங்கும் நேரம் 12.00 மணியைத் தாண்டிவிடுகிறது. மன்றங்கள், வலைப்பதிவுகள், இணைய தளங்கள், சோதனை முயற்சிகள், அரட்டைகள் என்று ஒரே சமயத்தில் பல களங்களுக்குச் செல்லவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது!. ஏதோ ஒரு நூல் தான் எனது வாழ்க்கை முறை மாறியதற்கான காரணமாக இருந்திருக்க முடியும். அது எதுவென்று அறிந்தும், அதனிலிருந்து விலக்கமுடியாத பந்தத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.

இன்மைகளின் சூழ்நிலையில் வளர்ந்த இந்த இரவுகளின் நடன சப்தங்கள் ஒருவேளை நாளை கரைந்து போகலாம். அல்லது வளர்ந்து செழித்திருக்கலாம். கரைந்து போவதற்கான கனவுகள் இன்னும் நெஞ்சில் விதைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்னாலேயே. அப்படியானதொரு தருணத்தில் நான் காணாமல் போகலாம்... பார்த்துக் கொண்டிருங்கள்!!

சிலநாட்களுக்கு முன்னர் இரவின் அடர்த்தியான இருளில் எழுதப்பட்ட இக்கவிதை.... கொஞ்சம் மாறுதலோடு மீண்டும் தருகிறேன்!!

இரவுகளின் நடனத்தைக்
கண்டவர்
அவ்வளவு எளிதில் உறங்குவதில்லை
கழிதலறியும் உத்திகளை
எவ்வழியிலேனும் கையாளத்
தயாராக இருக்கிறார்
சுயசெய்கைகளுக்கு உட்பட்ட
காமவெளிப்பாடுகள் துருத்தி நிற்கும்
கழியாத இரவொவ்வொன்றும்
அவரை வீழ்த்த எப்பொழுதும்
காத்துக்கிடக்கின்றன
நடனத்தின் அசைவுக்குள்
விழும் எம்முறையும் வெறுக்கிறார்
நெடியுடன் பிறக்கும் விடியலை

Subscribe