”என்னடா, ராக்கி வந்துவிட்டதா?”

“இல்லைக்கா”

“உனக்கு அனுப்பி விட்டேனேடா, முகவரி சரிதானே?”

“சரிதான், ஆனா; எனக்கு வரவில்லையே”

“எல்லாருக்கும் வந்துவிட்டதாமே, உனக்கு மட்டும் ஏனடா வராமல் போயிற்று?”

சதியாக இருக்குமோ?

ஆமாம்... ஓவிக்கா எனக்கு அனுப்பியதாகச் சொன்ன ராக்கி, எனக்கு வந்து சேரவில்லை. அது எந்த காரணத்தினால் தடைபட்டிருந்தது என்று தெரியவில்லை. இம்மாதிரியான
சூழ்நிலையில் ஓவிக்கா எனக்கு எந்த கொரியரில் அனுப்பினார் என்றும் தெரியாததால் விசாரிப்பதற்கு தேவையில்லாமல் போனது. எனக்கு ராக்கி கிடைக்காததால்
அனுப்பியவர் எந்த மனசூழ்நிலையை ஏற்றிருப்பார் என்று புரிந்து கொள்ளமுடியவில்லை. ஏனெனில் இந்தமாதிரி அடுத்தவர் மனநிலையில் இறங்கி ஆராய்ச்சி செய்ய நான்
வளர்ந்திருக்கவில்லை. இந்நேரம் அந்த ராக்கி எங்கேயிருந்திருக்கும்? எனக்காக அதில் ஓவிக்கா என்ன எழுதியிருப்பார்கள்? யாராவது அதை எடுத்து ரக்*ஷாபந்தனுக்குக்
கட்டியிருப்பார்களோ என்று அன்று இரவு முழுக்க கனவுகளைச் சிதைத்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

என் வீடு முகவரியற்ற பூமியில் கிடக்கிறது. எல்லா வீடுகளும் முகவரியற்றுதான் இருந்திருக்கவேண்டும். நமக்குள் நாமே அடையாளப்படுத்தி தனித்துவிடப்படுபவைதானே இந்த
முகவரிகள் எல்லாமே.. சிலருக்கு அண்டைவீட்டு முகவரியே தெரிந்திருப்பதில்லை. தபால் காரனுக்குக் கூட எக்காளமிருக்கிறது. சேரியின் உட்பகுதிகளுக்கு பங்களா தபால்
எதற்குத் தேவையென்று நினைத்திருக்கலாம். ராக்கி எனக்குக் கிடைக்காததன் முழு காரணமும் தபால்காரனை அன்றி வேறு யாரும் ஏற்றுக் கொள்ளமுடியும் என்றூ எனக்குத்
தோன்றவில்லை.

ஓவிக்கா...

ஓவிக்காவை இதற்கு முன்னர் உங்களிடம் சொல்லியிருக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் விளக்கிச் சொல்லவும் முடிவதில்லை. என் நண்பன்
ஒருவன் ஓவிக்காவை சந்திக்கும் பொழுது ஒரு பின்னவீனத்துவக் கவிதை என்று விமர்சனம் கொடுத்திருந்தான். அது எளிதில் விளக்கிச் சொல்லமுடியாதது. ஆனால் நன்கு
உணரக்கூடியது. ஓவிக்காவை நீங்கள் சந்திக்கும்பொழுது குழந்தைத்தனமான சிந்தனை அடங்கிய பெரியவள் என்று சட்டென்று முடிவுகொள்வீர்கள். அது உண்மையாக
இருக்கலாம். ஆனால் அதுமட்டுமே உண்மையல்ல. யூகம். ஆக்ரோஷமும், மென்மையும் கலந்த குழந்தை என்று எனக்குப் பின்னேயிருந்து ஒரு பெண் கூறினார். அவரை
அதன்பின் பார்க்கும்படியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

சரி... ஓவிக்காவை விளக்க முற்பட்டது போதும்.. கதைக்கு வருவோம். ராக்கி கிடைக்காததால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. “கிடைக்காதது வருத்தத்தை
அளிப்பதாக இருக்கிறது அக்கா” என்றேன். வருத்தம் என்பது எப்படி உணரப்படுகிறது? வெறும் வார்த்தைகள் அழுவதாலா? தெரியவில்லை.

”வேறு முகவரி இருந்தால் கொடுடா” என்றார் ஓவிக்கா

வேறு ஒரு முகவரி கொடுத்திருந்தேன். முகவரியற்றவனாக இருக்கிறாய் என்றார் ஓவிக்கா. இருக்கலாம். சிலர் முகமே இல்லாமல் இருக்கும்பொழுது நான் எவ்வளவோ
பரவாயில்லை என்றேன். உனக்கு மறுபடியும் போன் செய்கிறேன் என்றபடி அழைப்பை துண்டித்தார் ஓவிக்கா. நீங்கள் நினைக்கலாம் இப்பொழுது மனம் நிறைவாக
இருந்திருக்குமே என்று. இல்லை. மறுபடியும் எனக்கு தபால் கிடைக்காமல் போவது அபசகுனமாக எண்ணினேன். உண்மையில் சகுன நம்பிக்கை எனக்குக் கிடையாது.
ஓவிக்காவுக்கு இருக்கலாம். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் இருவருக்குமான போக்குவரத்து யாரோ ஒருவரின் நப்பாசையாலோ, சலிப்பின் காரணமாகவோ
துண்டித்து விடக்கூடாது அல்லவா.

ரக்*ஷா பந்தனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சிவாண்ணா தமக்கு ராக்கி வந்ததைச் சொல்லியிருந்தார். அது எனக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அதை நிச்சயம்
ஓவிக்காவைத் தவிர வேறு யாரும் அனுப்பியிருக்க முடியாது. ஆனால் சிவாண்ணா செய்த தவறு, அவருக்குக் கிடைத்த ராக்கியை வேறு ஒருவர் அனுப்பியதாகக் கூறிவிட,
ஓவிக்காவுக்கு கோபம் வந்துவிட்டது. என்னைத் தவிர உங்களுக்கு வேறு தங்கைகளா என்று... இந்த தகவல் எனக்கு ஒருவர் மூலம் கூறப்பட்டது. ஓவிக்காவின் கோபம் என்று
அவர் சொன்னார். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. உண்மையில் அது அதீத உரிமை. தன் நிலையினை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு சுய எச்சரிக்கை கூட
எழுந்திருக்கலாம். ஆனால் எனக்கு இந்த சம்பவம் பயத்தை உண்டாக்கிவிட்டது.

”இதுக்கெல்லாம் பயப்படாதே” என்று ஆறுதல் சொன்னார் சிவாண்ணா. ஆனால் உண்மை நிலைமை நீங்கள் புரிந்துகொள்ளும்படி நான் சொல்லவில்லை என்றேன். உண்மை
நிலைமை என்பதே நாம் உருவாக்கும் உருவம், அது பார்வைகளுக்கு ஏற்ப தோற்றமளிப்பது என்றார். எனக்கு அவர் சொன்னது புரியவில்லை. பிறகு, ஓவிக்காவின் ராக்கி
உண்மையில் யாரைச் சென்றடையும் என்றேன். உங்கள் இருவருக்குமிடையிலான சகோதரத்துவத்தை அடையும். அது வாழ்வின் தூயபிம்பம் என்றார். இது எனக்கு
சமாதானமளிக்கும் பதிலாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. ஓவிக்காவின் ராக்கி எனக்கு இனந்தெரியாத குழப்பத்தை அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது.

ஆமாம்... ஓவிக்கா அனுப்பிய ராக்கியை எனக்குக் கட்டி விடுவது இன்னொரு பெண். எனில் என் முழுமையான அதிகாரமும் பாசமும் உரிமையும் யாரைச் சென்றடையும் என்ற
குழப்பம். எனக்குத் தெரிந்து ஓவிக்காதான் எனக்கு ராக்கியை அறிமுகம் செய்தது என்றே சொல்லலாம். சின்ன வயதிலிருந்தே ஓவிக்கா என் கைகளில் இதுவரை ராக்கியைக்
கட்டியதேயில்லை. அதற்கான சந்தர்ப்பங்களை நாங்கள் அமைத்துக் கொள்ளவில்லை. ராக்கி இன்னொரு பெண்ணின் மூலமாகத்தான் கட்டிக் கொள்ளப்பட்டது. இது ஒரு
முக்கோண சந்திப்பை எனக்குத் தருவதாக இருந்தது. ஒவ்வொரு மூலையிலும் நான், ஓவிக்கா, மற்றும் இன்னொரு பெண் அமர்ந்து அவரவருக்குண்டான உரிமை குறித்து
பேசவேண்டியதாக இருந்தது. ஆனால் இது குறித்து இருவரும் எந்த பேச்சும் எடுக்கவில்லை.. நான் மட்டுமே புலம்பிக் கொண்டிருந்தேன்.

ஒருவழியாக ராக்கி எனக்கு இன்னொரு முகவரிக்கு வந்து சேர்ந்தது. அதை தபால்காரனிடமிருந்து வாங்கியது ஒரு வங்காளிப் பெண். அவள் வங்காளியாக இருக்கும் என்பது
என் உத்தேசம் என்றாலும் ரக்*ஷாபந்தனைக் கொண்டாடும் வட இந்தியப் பெண். இப்பொழுது புரிந்திருக்குமே எனக்கு ஏற்பட்ட பிரச்சனை என்னவென்று? ராக்கியைப் பற்றி
அவளுக்கு விளக்கிச் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் யார் கட்டுவது என்பதை நான் எப்படி விளக்கமுடியும்? ஓவிக்கா அல்லாமல் இந்த பிரச்சனை தீராது என்பது
தெரிந்தது.

ஆனால் வேறு வழியுமில்லை. அந்த வங்காளிப் பெண்ணே எனக்கு ராக்கி கட்டிவிட்டது குறித்து முதல்முறையாக வருத்தம் ஏற்பட்டது. ராக்கி கொண்டாடப்படுவதற்கென்று
தினமொன்று வருமேயானால் ஏன், ஓவிக்கா வரும் வரை தினத்தை ஒத்திப் போடக்கூடாது? தினங்களின் வருகைக்கு நாம் எதிர்பார்ப்பது போல, நம் வருகைக்கு ஏன்
தினமொன்று எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கக் கூடாது?

ராக்கி அன்று காலையில் எனக்கு போன் வந்தது.

“ஆமாம் கா.. கட்டி கொண்டேன். இரண்டு ராக்கிகள் சிறியதும் பெரியதுமாய்” என்றேன்.

“அப்பாடா.. நிம்மதி. நான் கிடைக்கவில்லையோ என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன் ரைட். ஐ விஷ் யு மை பிரதர்” என்று சிரித்தபடி அழைப்பைத் துண்டித்தார் ஓவிக்கா.

இப்பொழுது எனக்குள்ளான குழப்பத்தை ஓவிக்காவிடம் சொல்லவில்லை. சொல்லாமல் விட்டது கூட ஒரு குற்றமாக இருக்கலாம். ஆனால் பகிர்ந்து கொள்ளவேண்டும். அதற்கு
எனக்கு ஒருவர் மட்டுமே உள்ளார்.

ஓவி உனக்கு அனுப்பியது என்ன என்றார் முதலில்.

அது ராக்கி என்றேன்.

நீ செய்த முதல் தவறு. அதை ராக்கியாக எண்ணியது. ஓவியின் துடுக்கு, அதற்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனம், மிகைந்த அறிவு, நீர்க்கோல அழகு ஆகிய அனைத்தும்
ஒருங்கிணைந்த ஒரு பாசத்தின் பிம்பம் ஒளிந்த கயிறு. அதை நீ கட்டும் பொழுது உனக்குள் அந்த கயிறின் வழியே ஓவி மட்டும்தானே தெரியக்கூடும் என்றார்.

அது எப்படி சாத்தியம்? எங்கோ இருக்கும் ஓவி, ஒரு சாதாரண கயிறில் அடங்குமா

அப்படியல்ல. அது சாதாரண கயிறு என்றால் உன் வீட்டருகே இருக்கும் மளிகைக் கடையில் வாங்கிக் கட்டிக் கொள்வதுதானே? நீ ஏன் ஓவியின் கயிறை எதிர்பார்க்கிறாய்?

என்னால் அந்த கயிறுக்குள் பாசம் பிணைந்திருக்கும் என்பதை ஒத்துக் கொள்ளமுடியவில்லை.

இது கடவுளைப் போன்ற இருக்கிறாரா இல்லையா எனும் சர்ச்சை. கடவுள் தூணிலும் இருப்பார், சிறு கல்லிலும் இருப்பார் என்பதற்காக தூணை நீ வணங்கினால் அது கடவுள்
ஆகிவிடாது. அல்லது உடைத்தால் கடவுள் உடைந்து போகாது. ஒரு சிறிய கல் கூட கடவுளின் உருவாக்கம். அதில் நிறைந்திருக்கிறார். ஒருவேளை அந்த கல் உனக்கு
எவ்வழியிலேனும் உதவக் கூடும். நமக்குத் தெரியாத அருவங்களால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ராக்கியில் எப்படி ஓவியைக் காணமுடியும் என்பது உன் அறிவுக்கு
எட்டாததாக இருக்கிறது. அறிவின் வளர்ச்சியில் மனிதனின் மனங்களின் கால்கள் பதிந்திருக்கவேண்டும் மேலும், அந்த வங்காளிப்பெண் ஒரு ப்ராக்ஸி. உனக்குக்
கட்டுவதன்மூலம் ஓவியின் சகோதரத்துவத்தை உனக்கு மாற்றிக் கொடுக்கிறாள். உனக்கு மாற்றிக் கொடுப்பதன் மூலம் அவளும் சகோதரத்துவத்தை வழங்குகிறாள். என்றார்.

அது ஓரளவு சமாதானம் அளிக்கக் கூடியதாக இருந்தது. சுயசமாதானங்கள் தங்களுக்குள் எப்போதும் சண்டையிட்டபடி இருக்கும் அதனால்தான் நான் என்னை நம்புவதாக
இல்லை. இந்த பெங்களூர்காரர் ஏதாவது ஒருவகையில் சமாதானத்தை வழங்கிவிடுவார். என்றாலும் முழுவதுமாக குழப்பம் நீங்கிவிட்டது என்று சொல்லிவிடமுடியாது.

இது குறித்து உனக்கு விளக்குவது சலிப்பைத் தரக்கூடியதாக இருக்கும் என்று நிறுத்திக் கொண்டார்.

உங்களுக்கு ராக்கி வந்துவிட்டதா என்று கேட்டேன்.

எப்போதோ..... .சரி சரி... இதை ஓவியிடம் சொல்லிக் கொண்டு இருக்காதே.. உன்னை தவறாக எண்ணக் கூடும் என்றார்.

எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஓவிக்கா எப்பொழுதும் பதுக்கி வைத்தலை விரும்பமாட்டார். நீங்கள் கூறியது எனக்கு உணரும்படி இருந்தது. என்றாலும்
மனம் தவிக்கிறதே.. ஏதாவது ஒன்றை நான் செய்தாகவேண்டும் என்றேன்.

பேசாமல் கதையாக எழுதிவிடு என்றார்.

இதோ எழுதிவிட்டேன் என்றேன்...

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஆதவா.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மை பெயரை அறிதல் உண்மையில் ஒரு பொருட்டே அல்ல. பெயர் என்பது ஒரு உயிர் மூடிய மெய்யின் தனித்துவ அடையாளம் தானே. இதில் உண்மையான பெயர் என்பதற்கு அர்த்தமில்லை. பதிவில் தோன்றும் பெயர், தன்னிச்சையாக வந்தது; அசல் பெயரின் மறுசொல்லாக அது இருந்தது. வேறு வலுவான காரணங்கள் ஏதுமில்லை.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

வலையுலகில் தமிழ் இயங்குவதே அறியாமல்தான் எழுத வந்தேன். அறிமுகப்படுத்த யாருமற்ற சூழ்நிலையில் ஒரு அங்கீகார தாகத்திற்காகத்தான் இணைய உலகம் எனக்கு திறந்து கிடந்தது. ஆனால் அங்கீகார தாகம் எவ்வளவு பெரிய சுயபோதை? அது வலையுலகில் நிகழ்ந்து வருகிறது. மதுப்புட்டிகள் ஒன்றையொன்று ச்சியர்ஸ் என்று கத்தும்பொழுது அதைப் பொருட்படுத்தாமல் குடிப்பவன் தள்ளி வைக்கப்படுகிறான். குழுவமைத்தல் அந்த குழுவுக்குள் நிலவியிருத்தல் போன்றவை தனக்குக்கீழான வட்டத்திற்குள் சுற்றுவதைப் போன்றது.

வலையுலகில் அப்படித்தான் 2006லிருந்து 2008 வரை இருவருடங்கள் கழிந்தன. பிறகு தமிழ்மணம் எனும் வலைக்குழுமம் மூலமாக மற்றவர்களுக்கு படைப்பை எடுத்துச் செல்ல இயலும் என்றறிந்து 2009 ஆம் வருட ஆரம்ப மாதங்களில் எழுதி வந்தேன். ஆயினும் அன்றும் சரி, இன்றும் சரி, முன்பே எழுதிய எழுத்துக்கள்தான் வலையேற்றம் செய்தன. சிற்சில விதிவிலக்குகள்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலம் ஆக ஒரேயொரு பதிவு போதும். பொதுவாக வாசகர்கள் காமம் சூழ்ந்த எழுத்துக்கள், ஜாலியான அரட்டைகள், குழும நண்பர்கள், வெகுஜன படைப்புகள் மற்றும் ஏற்கனவே பிரபலமாகி எழுதி வருபவர்கள் என்று ஒவ்வொரு குறுவட்டத்தையும் சுற்றி வருகிறார்கள். இதில் இறுக்கமான எழுத்துக்களும், ஆய்வு செய்து மனதிலேற்றவேண்டிய கலைப்படைப்புகளும் நேரமின்மையின் சலிப்பு காரணமாக ஒதுக்கப்படுகின்றன. நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியாது. பிரபலம் ஆவது என் நோக்கல்ல. நல்ல படைப்புகளைத் தரவேண்டும் என்பதே எனது நோக்கமும்.. இறுக்கமான எழுத்துக்களிலும் வெகுஜன எழுத்துக்களிலும் அனுபவங்களை எழுதியிருக்கிறேன். அது, வாசகர்களை ஒன்றின்பால் கவரவைத்து இழுத்து மற்றதைப் படிக்க வைக்கவேண்டும் எனும்
யுக்தி. அது எத்தனை தூரம் சாத்தியம் என்று தெரியாது!

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சொந்த விஷயங்களைத் தொடாமல் எழுதியவர்கள் என் வாசிப்பு வரையிலும் கண்டதேயில்லை. அனுபவங்களின் விளைவாக படைப்புகள் உருவாகின்றன. ஏதேனும் ஒரு நுண்ணிய செயலனுபவத்தின் வாயிலாகவும் ஒரு படைப்பு வரலாம். என்றாலும் எனக்குரிய எல்லையைத் தாண்டாமல்தான் சொந்தானுபவங்களை வலைக்கு விரிக்கிறேன். எனினும் விளைவுகள் இதுவரை கண்டதேயில்லை.. சொன்ன விஷயங்கள் சொந்தமானதா என்ற குழப்பங்களை எழுத்தில் காட்டியிருப்பதால் இருக்கக் கூடும். இதோ, இப்பொழுது எழுதிக் கொண்டிருப்பது கூட சொந்தப் அனுபவம் தான் இல்லையா?

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

எனக்கு அவசியமானது எனது தொழில். தனித்தே இருக்கப்பட்டதாலோ என்னவோ, பேசுவதற்கு கவிதைகள் பயன்பட்டன. எனக்கு கவிதையின் மூலம் பணம் சேர்க்கவோ, புகழ்பெறவோ, சிறுகதைகளின் மூலம் வாசக மனதில் அமர்ந்து கொள்ளவே விருப்பம் ஏற்பட்டதேயில்லை. தொழில் என்பது வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் பாதை. அதில் சிறுசிறு இளைப்பாரல்களே படைப்புகள். என்னையறிந்தவர்கள், நான் அதிகம் எந்த கூட்டத்திற்கும் கலந்து கொள்ளாதவன் என்றே சொல்லுவார்கள். இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இந்த வலைமூலம் அதைச் செய்யவில்லை! செய்யமுற்பட்டும் அது தவறானது என்று ஒதுங்கிக் கொண்டேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்றுதான். இன்னொன்று மறைவில் இருக்கிறது. அது சோதனைக்களமாக உபயோகப்படுத்தி வருகிறேன். என் வலைத்தளம் கண்டவர்கள் அநேகமாக நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு நான் எனக்குத் தெரிந்தவரையில் உழைக்க வேண்டியிருந்தது. மேலும் எனக்கு மிகவும் பிடித்த அடர்சிவப்பு வர்ணத்தை வலையில் கொடுக்கவும் விரும்பினேன். இவற்றையெல்லாம் இன்னொரு தளத்தில் சோதித்து பிறகே இதில் அமல்படுத்துவேன். இன்னொரு தளம் ஆரம்பிப்பது குறித்து ஆலோசித்தும் வருகிறேன். அது பெரும்பாலும் குழும தளமாக இருக்கலாம்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

முதலில் மற்ற பதிவர்களை முழுமையாக வாசிப்பதேயில்லை. அனைவரும் நன்றாக எழுதுகிறார்கள். பெரும்பாலும் குறைகளற்ற விமர்சனங்கள்தான் எல்லோராலும் வழங்கப்படுகின்றன. உண்மையில் பின்னூட்டங்கள் என்பது பாராட்டுப் பொத்தான்களாகவே இருக்கின்றன. அதை நானும்தான் செய்துவருகிறேன். ஏனெனில் அதற்கு காரணங்களும் உண்டு. இந்த சூழ்நிலையில் எல்லோரும் ஒரேமாதிரியாகத்தான் தெரிகிறார்கள். இதில் கோபமோ, பொறாமையோ அல்லது வேறெந்த உணர்வும் ஏற்பட்டதில்லை.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

2006 லிருந்தே தமிழ்மன்றம்.காமில் (இன்று வரையிலும்) எழுதி வருவதால் எனக்கு அங்கே பாராட்டியவர்கள் அல்லது திட்டியவர்கள்தான் அதிகம். அது ஒரு களமாக இருந்தது. சிறப்பான விமர்சனங்கள் கொடுக்கப்பட்டது. கவிதைகள் தட்டப்பட்டன. உருவங்களை மாற்றிக் கொடுத்தார்கள். சற்று மந்த நிலை அவ்வப்போது ஏற்பட்டாலும் ஒற்றை வரியில் “நல்லா இருக்குங்க” என்று நான் கூட சொன்னதே கிடையாது. வலையுலகம் போன்றே முதிர்ச்சி பெறாத இயக்கம் தான் என்றாலும் பல முதிர்ச்சி பெற்றவர்கள் சூழ, எனக்கொரு சோதனைக் களமாக இருந்தது... வலையுலகில் முதல் பாராட்டு என்பது, இன்று புதிதாக வரும் ஒவ்வொருவரும் தெரிவிக்கும் பாராட்டு கூட முதல் பாராட்டுதானே!!

10) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஓரிரு பதிவுகளில் என்னை மதிப்பிடாதீர்கள்.. என்னை மாத்திரமல்ல, எல்லோரையுமே!

தொடர்பதிவுக்கு அழைத்த முரளி அவர்களுக்கு நன்றி!

கோகுலும் ஸ்ப்ரிங்கியும் கார்லயே இருக்கோம்னு சொல்லி அடம்பிடிச்சாங்க.. அவங்களை ஒண்ணும் செய்யமுடியலை. சரி, பத்திரமா இருங்கன்னு சொல்லிட்டு நாங்க வண்டியில ஏறினோம். நானும் ஸ்கூபியும் முதல்ல கிளம்பினோம்.

“இங்க காட்டுப்பூனைங்க அதிகம் இருக்கும்.. லைட் அடிச்சா ஓடிப்போயிரும்” மெக்கானிக் சொல்லிட்டே வண்டிய ஓட்டினார்.

”கால்ல இன்னும் வலிக்குதாடா” ன்னு ஸ்கூபி கேட்டான். ஆமாம்னேன். வண்டின்னா கியர் வண்டின்னு நீங்க நினைக்காதீங்க, அந்த வண்டி என்ன மேக்குன்னே தெரியலை, ஊட்டி குன்னூர்காரங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா தயார் பண்ணுவாங்க போல இருக்கு. பழைய தகரடப்பாவுல தெர்மாகோல் அடைச்சு அதில உக்காந்துகிட்டு இழுத்துட்டு போனா ஒரு சவுண்டு வருமே, அந்தமாதிரி சவுண்ட் வந்திச்சு. அந்த இருட்ல ரோடு எங்க இருக்குன்னே தெரியல. வண்டியில லைட்டு மட்டும் இல்லாட்டி அவ்வளவுதான். கண்ணிருந்தும் குருடன்கிறமாத்ரி தடவித் தடவித்தான் போகமுடியும்.

”நீங்கள்லாம் எப்படிங்க இங்க வாழ்றீங்க”

மெக்கானிக் வண்டி ஓட்டறத பார்த்தா ஏறக்குறைய ஒருநாளை பத்து தடவையாவது இந்த பக்கம் வந்துட்டு போறவரா இருக்கணும். ஆள் பார்க்க, எப்படி இருப்பார்னா, களவானி படத்தில வர்ற வில்லன் மாதிரி நெட்டையா கருத்த மூஞ்சி, ஸ்வெட்டரும் குல்லாயிம் போட்டிருந்தார். பேண்டெல்லாம் மசி, ஆயிலு, அவரை ஒட்டிட்டு உக்கார்ந்துட்டு இருந்ததால ஆயில் வாசம் அடிச்சது. காட்டுப்பூனை எங்க முன்னாடி நின்னதும் ஒரு நிமிஷம் ஸ்டன்னாயிட்டோம். அது நெஜமாவே பூனைதான். கருத்து இருந்துச்சு, கொஞ்சம் பெரிய சைஸ். புலி மாதிரி உர்ர்ருனு இல்லை. பார்த்தா எடுத்து கொஞ்சிக்கலாம்.

“சிலசமயம் பாய்ஞ்சு வந்து கடிக்கும்”

மெக்கானிக் வேற அடிக்கடி பயமுறுத்திட்டே இருந்தார். ஒரு ரெண்டு நிமிஷம் நாங்க வேற எதையும் பாக்கலை. அப்படியே காட்டுராணி மாதிரி அந்த பூனை எங்களை பாத்துகிட்டே நடந்தது. அப்படியே வெலவெலத்திருச்சு. என் வாழ்க்கையில இந்த சைஸ்ல பூனையை பார்த்ததே இல்லை. அதுவும் எங்களை பார்த்துட்டே நடந்ததால வெறும் கண்ணு மட்டும்தான் தெரிஞ்சது. அதில இருந்து வெளிச்சம் வராமாதிரி இருந்திச்சு. நல்லவேளை அப்படியே போயிருச்சு.

குன்னூர் வந்ததுக்கு அப்பறம் கார்ல இருக்கிற கோகுலுக்கும் ஸ்ப்ரிங்கிக்கும் டிபன் வாங்கிட்டு மெக்கானிக்கை அனுப்பி வெச்சோம். அவர் திரும்பி வரப்போ ராக்கியை கூட்டிட்டு வந்தார். எங்களூக்கு ஒரே பயம் என்னன்னா, காட்டுல கோகுலும் ஸ்ப்ரிங்கியும் தனியா விட்டுட்டு வந்திட்டோம். அவங்கப்பாவுக்கு இந்த மேட்டர் தெரிஞ்சதுன்னா எங்களை சும்மா பிச்சு பிச்சு போட்டிருவார். லாட்ஜுக்கு வந்ததுக்கப்பறமா தூக்கமே இல்ல. என்னோட கால் வீங்கியிருந்துச்சு. கோகுல் பேக்ல விக்ஸ் இருந்துச்சு, அதை கொஞ்சம் தேச்சுகிட்டேன்.

நைட் 12 மணி.

ஸ்கூபிக்கு போன் வந்துச்சு. பண்ணினது கோகுலோட அப்பா.. என்னாச்சின்னு விசாரிச்சாரு. ஆக்ஸிடண்ட்.. கார்ல ஓடிட்டிருந்த சக்கரத்தைக் காணோம். மெக்கானிக்கை கூப்பிட்டு ரெடி பண்ண முடியல. நாளைக்குத்தான்.

“கோகுல் எங்க?”

............................ என்னன்னு சொல்றது?

“கோகுலும் ஸ்ப்ரிங்கியும் சாப்பிட போயிருக்காங்க அங்கில், வந்ததும் கூப்பிட சொல்றேன்”

“இல்ல. நான் இப்பவே பொறப்பட்டு வரேன். ஏதோ பெரிய பிரச்சனையை நீங்க மறைக்கறீங்க”

”இல்லைங்க அங்கில்”

”நோ வே, ஐ’ல்பீ தேர் விதின் 2”

அய்யய்யோ.... அப்பா வந்து புள்ளைய கேட்டா என்னன்னு சொல்ல? காட்டுல தனியா இருக்கான்னு சொல்றதா? ஸ்கூபி என்னைக் கூப்பிட்டான், ரெண்டு பேரும் ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்துக்கிட்டோம். வாடகை ஐநூறு ரூவா. ட்ரைவர் பேசிகிட்டே வந்தாரு. அதே ஆக்ஸிடண்ட் கதை. இதோட பத்து தடவை கேட்டாச்சு, நானும் பத்துதடவை சொல்லியாச்சு. வளைஞ்சு வளைஞ்சு வெளிச்சம் போச்சு.. அவரும் ஆரம்பிச்சாரு.

”தனியா விட்டுட்டு வந்தீங்கன்னா ஏதாச்சும் மிருகம் காரை கவுத்தி விட்றும். அந்தமாதிரி நெறயா நடந்திருக்கு..”

”கோகுலுக்கு வீஸிங் வேற இருக்கு”

“ஏண்டா, இதை இவ்வளவு நேரம் கழிச்சாடா சொல்லுவீங்க?:”

“அட, அவந்தாண்டா அடம்புடிச்சுட்டு, கார்லயே இருக்கேன், வரமாட்டேன்னான், குன்னூருக்கு மத்தியானம் வந்தான்ல, அப்பவே அவங்கப்பாகிட்ட பேசியிருந்தான்னா அவரும் பிரச்சனையில்லைன்னு நெனச்சிருப்பாரு, இவன் பேசவேயில்லயாம். நைட் ஆகியும் பசங்க வராததால எல்லாருக்கும் போன் அடிச்சிருக்காரு, எல்லாமே நாட் ரீச்சபில். டென்ஷனாயிட்டாரு.”

இவன் வேற வயத்தில புளியை கரைக்கிறான்... எனக்கு ஆல்ரெடி கரைச்சாச்சு. தொண்டையெல்லாம் அடஞ்சுட்டு பேச்சே வரலை. தூக்கமும் வரல. அரைமணி நேரத்தில ஸ்பாட்டுக்கு வந்தாச்சு. காருக்கு கொஞ்சம் முன்னாடியே ஜீப்பை நிறுத்தினாரு ட்ரைவர். தெருவிளக்கு மங்கலா எரிஞ்சுட்டு இருந்துச்சு. காருக்குள்ள பசங்க ரெண்டு பேரும் இருந்தாங்க. நாங்க வந்ததைப் பார்த்ததும் இறங்கி வருவாங்கன்னு நெனச்சோம்.. ம்ஹூம்... வரல.. அய்யய்யோ என்னாச்சுன்னு தெரியலையே. ஸ்கூபிதான் சத்தம் போட்டுட்டே உள்ள போனான். கார் கண்ணாடி ஏத்தியிருந்தது. உள்ள என்ன இருக்கும்னு தெரியாத சன் கிளாஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்துச்சு. ரெண்டு தட்டு தட்டினான். திறக்கல. நானும் இழுத்துட்டு இழுத்துட்டு நடந்து வந்தேன். சத்தம் போட்டு போட்டு பார்த்தோம்.

“ கோகுல்!!!, டேய்.... எந்திரிங்கடா”
அஞ்சு நிமிசம் ஆச்சு... திறக்கவேயில்ல.

பயம்.. பயம்... பயம்....

ஏற்கனவே காட்டுப்பூனை எங்களுக்கு முன்னாடி நின்னு பேதியாச்சு, இப்ப இவனுங்க வேற காணோம்.. கோகுலோட அப்பாவுக்கு என்ன பதில் சொல்றது?

காட்டுலதான் இருந்தான், பூனை அடிச்சிருச்சோ என்னவோ?; யானை இந்த சைடு வருமா? ரெண்டு பேரையும் தூக்கிட்டு போயிருக்கும்னு நெனைக்கிறேன். காட்டுவாசிங்ககிட்ட மாட்டியிருப்பானோ? நரமாமிசம் திங்கறவங்க இருக்காய்ங்களா?

ஒரு கதவு மட்டும் திறந்து மெல்ல ஸ்ப்ரிங்கி எட்டிப் பார்த்தான். அப்பறம் கோகுலும் வெளியே வந்தான். அப்பாடா.... உசுரு போயி உசுரு வந்துச்சு. (அப்ப, உசுரே போகுதேன்னு பாட்டு வரல, வந்திருந்தா அதைத்தான் பாடியிருக்கணும்)

“ஏண்டா வந்துட்டீங்க”

“உங்க டாடி கூப்பிட்டாருடா, அவரு நைட்டே குன்னூர் வராராம், உன்னைக் கேட்டாரு, சாப்பிட போயிருக்கிறதா சொல்லி அட்ஜஸ்ட் பண்ணியிருக்கேன்.”

“ஏண்டா சத்தம் போட்டோம்ல, கதவை திறக்க வேண்டியதுதானே?”

“நாங்க உள்ள படுத்துகிட்டு இருந்தோம்டா, திடீர்னு ஜீப் சத்தம். வண்டிக்கு பக்கத்தில நிக்கிறாப்ல இருந்துச்சு. எவனோ ஃபாரெஸ்ட் ஆபிஸருங்கதான் வந்திருக்காங்கன்னு எந்திரிக்கல.”

“பயமா போச்சுடா”

“நீ ஏண்டா இந்த காலோட வந்தே, ரெஸ்ட் எடுத்துட்டு இருக்க வேண்டியதுதானெ?

“பரவாயில்ல,”

“டாடி என்ன சொன்னாரு?”

“வந்திட்டிருக்காராம், கொஞ்ச நேரத்தில உன்னை பேசச்சொன்னாரு, குன்னூர் போயி டவர் கிடைச்சதும் மொதல்ல பேசு,”

”அவரு சொன்னா மாதிரியே வந்துடுவாரே”

காரை விட்டுட்டு ஜீப்ல எல்லோரும் கிளம்பினோம். குளிர் காத்து வேற ஜில்லுனு மூஞ்சில அடிச்சது. வண்டியை இப்படி அநாதயா விட்டுட்டு வந்ததே இல்ல,

“இனிமே ராக்கிய முன்னாடி உக்காரவெச்சு வண்டி ஓட்டவே கூடாது, வெயிட்டு தாங்காது”

“நாளைக்கு ரெடி ஆயிடும்ல டா”

“ஆயிடும். மதியத்துக்குள்ள கிளம்பிடலாம்”

“அப்ப கோத்தகிரி”

“xxxxxxxxxxxxx"

”இன்னொருதடவை பாத்துக்கலாம்”

“இதே அம்பாஸிடர்லயா... நான் வரலை சாமி”

”சாரிடா மாப்ள, ட்ரிப்புக்கு வந்துட்டு இந்தமாதிரி ஆயிடுச்சு”

”டேய்... சேசே.. விட்றா, இதுவும் ஒரு திக் திக் அனுபவம்தானே,... எதுவும் நடக்காம இருந்திருந்தா, இந்த ட்ரிப்பை நாம மறந்திருப்போம். ஆனா இப்ப மறக்க முடியாதில்ல..

“ம்..ம்”

வண்டி ஸ்பீடா போச்சு, ஜீப்காரருக்கு சரியான எக்ஸ்பீரியன்ஸ். நல்லா திருப்பி, வளைச்சு வண்டி ஓட்டிட்டே போனாரு. கொஞ்சம் கூட பயமே இல்லாம எப்படித்தான் ஓட்டுறாங்களோ? எப்படியோ உசுருக்கு பிரச்சனை இல்லாமல் போச்சே, அதுக்கே சந்தோஷப்படனும், எப்படியும் வண்டி செலவு இருபதை தாண்டிரும், ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு செலவ ஷேர் பண்ணிக்கலாம். ரெண்டு மூணு கி.மீட்டர் தாண்டி வந்திருப்போம். திடீர்னு வண்டியை ஸ்லோ பண்ணினாரு ட்ரைவர். என்னாச்சுன்னு எட்டிப்பார்த்தொம்....

ஒரு காட்டுப்பூனை பாய்ஞ்சது....

மழையே பெய்யாம காரு நனைஞ்சிருந்தது. அதில கோடு போட்டு, காலெஜ்ல படிச்ச ஃபிகருங்க பேரோட மொத எழுத்து எழுதி, இவ பேரு என்னான்னு பசங்க வெளையாடிட்டு இருந்தானுங்க. மெக்கானிக் இன்னமும் போல்டை கழட்டிட்டு இருந்தாரு, நான் நெனைக்கிறேன், ரெண்டு மண்நேரமா ஒரு போல்டை கழட்டுற மொத மெக்கானிக் இவராத்தான் இருக்கும்... நானும் கொஞ்சம் எட்டிப் பாத்தேன். போல்டு மர தேஞ்சு போயி வகிடு மாறி போயிருந்துச்சு. மெக்கானிக் என்ன செய்யறதுன்னு தெரியாம தலைய சொறிஞ்சுட்டு இருந்தாரு. பக்கத்தில ஸ்கூபி கேம்ப் ஃபைர் போட்டு பக்கத்தில உக்காத்திட்டான். எனக்கு அங்க விட்டா வேற வழியில்ல. அப்படியே உக்கார்ந்துட்டு நெருப்பை ஊதிக்கிட்டு இருந்தேன். பொறுக்கிட்டு வந்த எல,தழ,குச்சியெல்லாம் பத்தலை, அது எத்தனை போட்டாலும் எரிஞ்சு சாம்பலாயிடுது. பத்தமாட்டேங்குது.. எங்களுக்கு நேரெதுக்கால தெருவிளக்கு, அதில இருந்து அப்படி ஒரு அம்பது அடி தூரம், இப்படி ஒரு அம்பது அடி தூரம் தான் வெளிச்சம்.. அதுக்கு அந்தப்பக்கம் இருட்டு... சாதாரண இருட்டு இல்ல, பேயிருட்டு. வெளிச்சம் இருந்தாத்தான் இருட்டு மறையும், இருட்டுன்னா, கொறைஞ்ச ஒளின்னு பாரதியாரு சொன்னார். இதைப் பார்த்திருந்தா, அப்படி சொல்லியிருக்கமாட்டாரு.
ஆக சுமாரா ஒரு நூறடி வரைக்கும்தான் சுள்ளி பொறுக்கி நெருப்புல போட முடியும்.

“இங்கல்லாம் சர்வ சாதாரணமா சிருத்தையும் காட்டுப்பூனையும் வரும்”

இப்ப எதுக்கு இதை மெக்கானிக் சொன்னாரு.?. எனக்கு வேற வயித்த கலக்கிடுச்சு. அப்படியே வந்தாலும் எல்லாரும் ஓடி எங்கயாச்சும் ஒளியலாம், எனக்கு நகர கூட முடியாதே.. அப்ப சிருத்தைக்கு மொத விருந்து நாந்தானா?

“வந்தா ஒன்னுஞ்செய்யாதுக, அதுக பாட்டும் போயிடுங்க.”

“மொதல்ல வந்தா இங்க எவனாச்சு நிப்பானான்னு பாருங்க”

”அதுகல ஒண்ணுஞ்செய்யாத வரைக்கும் அதுக நல்ல பிராணிகதான். நாமதான் பயந்துக்கறோம்”

அய்யா மெக்கானிக்கு, எப்பய்யா முடியும்?

“எப்பங்ணா முடியும்? ரொம்ப குளிருது வேற. நீங்களும் ரொம்ப நேரமா போல்டை திருப்பிகிட்டே இருக்கீங்க.

“இப்படி திருப்புங்களேங்ணா”

“எப்படி”

“க்ளாக் வைஸாதானே திருப்பறீங்க, ஆண்டி கிலாக்வைஸா திருப்புங்க”

“அப்படின்னா”

” லெஃப்ட்ல திருப்பிப் பாருங்ணா”

போல்ட ஆண்டி கிலாக் வைஸா திருப்பினாரு மெக்கானிக்... அட எழவே.. கழண்டு தொலைச்சிடுச்சுய்யா. மூணு மணிநேரமா உக்காந்திகிட்டு திருப்பு திருப்புனு திருப்பி பார்த்துட்டு, ஏதோ கோகுல் எதேச்சயா ஒரு ஐடியாவை கொடுக்கப் போயி அதுவே சரியாயிடுச்சு... ம்ம்ம்.... ஆமா..... இவரு உண்மையிலேயே மெக்கானிக்கா? இல்ல மெக்கானிக் மாதிரி நடிக்கிறாரா?

“ராடு மேல கப்பு மாதிரி வருமே, அது எங்க?”

“க்கும்... சக்கரத்தையே காணோம்னு ஒன்ரை மண்நேரமா தேடினோம், இதில கப்பு வேற இந்த இருட்ல தேடணுமாக்கும்?”

“அப்ப இன்னிக்கு இது விடியாது?”

மணி பத்து.

அந்த குளிருல எப்படி இருந்தோம்னு இப்ப நெனச்சாகூட நடுங்கும். செம குளிரு. எல்லாரு வாயிலயும் பேசினா பொகை. பிரபுதேவா டான்ஸ் ஆடறமாதிரி உதறல். இன்னிக்கு நைட் இந்த காட்டுலதானா? மெக்கானிக் நாளைக்குத்தான் பாக்கணும்னு சொல்லிட்டாரு. அவரு வந்து ஒரு பிரயோசனமும் இல்லை. ஆக்ஸிடண்ட் ஆனது ரெண்டு மணிக்கு, நைட் பத்து மணி ஆச்சு, ஒரே ஒரு போல்டை மட்டும் கழட்டி இருக்காரு... ம்ம்ம்..... நைட்டு எப்படியும் இங்க தங்க முடியாது.. மெக்கானிக்கோட பைக்ல ட்ரிப்புக்கு மூணுபேரா குன்னூர் போயி சேர வேண்டியதுதான். காரை இப்படியே விட்டுட்டு நாளைக்குதான் வந்து பாக்கணும்..

காருக்கு முன்னாடி ஏதோ சரக் சரக்குன் சத்தம். நல்ல இருட்டு வேற, எதாச்சும் வந்துச்சுன்னா என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியாம எல்லோரும் அமைதியா அந்த சத்தத்தையே கேட்டுட்டு இருந்தோம். சத்தம் நின்னது..

கொஞ்சம் நேரம் கழிச்சு மறுபடியும் சரக்... சரக்................

எங்க வண்டிக்கு முன்னால கருப்பா ஒரு உருவம் நடந்து வந்திச்சு. கண்ணு மட்டும்தான் பளிச்சுனு தெரிஞ்சது.

அது....

அது.... காட்டுப்பூனை..

கார் எப்படி நின்னுச்சு தெரியுமா? பள்ளத்துக்கு பக்கத்தில.... டோரை திறந்து காலை கீழ வெச்சா பள்ளம். அப்படியே விழுக வேண்டியதுதான்...கோவிந்தா கோ..விந்தா.. எல்லோருமே ஜாக்கிரதையா இறங்கினோம். என்னை இறக்கி விட்டாங்க.. என்னாச்சுன்னு வந்து பார்த்தோம்.. காரோட இடது முன்பக்க சக்கரம் காணாமப் போயிருந்தது... காருக்கு அடியில தேடினோம்.. இப்படி சொல்றதை விட, தேடினாங்க....ஆனா கிடைக்கல.. என்ன கொடுமைங்க இது... ஓட்டிட்டு வந்த காரோட சக்கரம் காணாம போச்சு. அம்பாஸ்டர் பாடியில மட்டும் ச்ச்சின்ன அடிபட்டிருந்தது. தேடினோம் தேடினோம் தேடினோம்.... மூலை முடுக்கெல்லாம் தேடினோம்...ம்ஹூம்.... காரோட சக்கரம் கிடைக்கல..

டால்பின் நோஸ்ல இருந்து அப்பர் பாரிஸுக்கு திரும்பி வர வண்டியெல்லாம் நம்மளை ஒருமாதிரியா பார்த்துட்டுத்தான் போனாங்க. இப்ப என்ன பண்றது?

நாங்க காரை அதுவும் ரொம்ப ஓரமா “பார்க்” பண்ணி வெச்சிருந்ததைப் பார்த்த ஒரு கோஷ்டி, என்னாச்சுன்னு வந்தாங்க.

“காரை ஓட்டிட்டே வந்தோங்ணா, திடீர்னு காரோட சக்கரத்தைக் காணோம்”

“என்னப்பா சொல்றீங்க, சக்கரத்தைக் காணோமா? எப்படி ஆச்சு?”

”மெதுவாத்தான் வந்திட்டிருந்தோங்ணா, திடீர்னு கிர்ர்ர்னு சவுண்டு வந்திச்சி, வண்டி அப்படியே சாஞ்சாப்ல போயிட்டிருந்தது. மெதுவா போனதால கார் இழுத்துட்டு இங்க வந்து நின்னிடுச்சு, இறங்கி வந்து பார்த்தா சக்கரத்தைக் காணோம்.. தேடிட்டு இருக்கோம்.”

“ரோட்ல கோடு போட்டு வெச்சிருக்கீங்க”

“தெரியலைங்ணா, ஏதோ ஒரஞ்சிட்டு வந்திருச்சாட்டிருக்கு”

“பள்ளத்தில கிள்ளத்தில விழுந்திருச்சோ என்னவோ?”

”இன்னம் பாக்கலைங்க, தேடோணும்”

“கயிறு இருந்தா இடுப்புல கட்டி கொஞ்சம் இறங்கிப் பார்க்கலாம்”

“கயிறு இல்லை, சீரி இருக்கு (பனியன் துணிதான் கயிறு மாதிரி நீண்டு இருக்கும்)”

“ஏதோண்ணு, கொண்டுவாங்க பார்த்தடலாம்.

காரோட டிக்கியில சீரி இருந்துச்சு, அதை எதுக்கு வெச்சிருந்தான்னு தெரியலை, நேத்திக்கு ப்லாக் தண்டர்ல வண்டிய பார்க் பண்ணிட்டு அங்கயே ட்ரஸ் சேஞ்ச் பண்ணப்பவே கவனிச்சேன். ஆனா கேக்கலை. ரெண்டு மூனு சீரியை கட்டி அதை இடுப்புல கட்டி, கோகுல் பள்ளத்தில இறங்கினான்.. கூடவே அந்த மனுஷனும் இறங்கினாரு. கால் வெச்சா சருக்கிற அளவுக்கு இருந்துச்சு போல, நிறைய மரங்கள் இருந்துச்சு. அதில எங்கயாச்சும் முட்டிகிட்டு சக்கரம் நின்னாலும் நிக்கும். இதையெல்லாம் நான் வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்... கூடவே அந்த கோஷ்டியில் வந்திருந்த பொண்ணையும்...

“அண்ணா, சக்கரம் இங்க இருக்கு”

கோகுல் குரல் கொடுத்தான். சக்கரம் ஒரு மரத்தோட இடுக்கில மாட்டியிருக்கு...... அந்த மரம் பார்க்க, கூண்டு மாதிரியே இருந்தது.. கரெக்டா சக்கரம் உள்ள மாட்டியிருந்தது. இன்னும் ஒருத்தர் பள்ளத்தில இறங்கினாரு... அவங்களுக்கு கட்டின அந்த சீரி கயித்த ஸ்கூபியும் ராக்கியும் பிடிச்சுக்கிட்டாங்க. கோகுலும் அந்த இன்னொருத்தரும் சக்கரத்தை மெதுவா மேல கொண்டுவந்தாங்க... அப்பாடா.....

எங்க கார்ல ஆக்சுவலா என்ன நடந்திருக்குன்னா, சக்கர ராடுல இருந்து பிய்ஞ்சு தனியா கழண்டு எங்கியோ விழுந்து ஓடிடுச்சு.. ஒரு படத்தில பார்த்திபன், வடிவேலுகிட்ட சொல்லுவாரே... முன்னால சக்கரம் ஓடுதுன்னு... அந்த கதை ஆயிடுச்சு.. ஆனா சக்கரம் ஓடினதை நாங்க யாரும் பார்க்கலை.. ராடு கட்டாகி கார் சாஞ்சிட்டதால கிர்ர்ர்னு சவுண்டு. இரும்பு பட்டறையில இரும்பை அறுக்கிறமாதிரி... இதையெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில யூகிக்க முடியலை.

நான் ஒரு ஓரமா உட்கார்ந்திட்டேன்... நம்மளால என்ன பண்ணமுடியுமோ, அதத்தானே செய்யமுடியும்?

கூட நின்ன கோஷ்டியும் (அந்த பொண்ணும் ) கிளம்பி போயிட்டாங்க... தேங்க்ஸ் டூ அந்த கோஷ்டி.. அவங்க இல்லாட்டி நிச்சயம் சக்கரத்தை எடுத்திருக்க முடியாது... இப்ப இதை பொருத்தனும்... ராட்ல இருந்து கட் ஆயிட்டதால கண்டிப்பா வெல்ட் வைக்கறாப்படிதான் இருக்கும்... ஆனா எதுக்குமே மெக்கானிக் வேணுமே...இந்த இடத்தில மெக்கானிக்கை எங்கன்னு போயி தேடறது? குன்னூர்லதான் மெக்கானிக் ஷாப் இருக்கும். இருக்கிற இடமோ அப்பர் பாரிஸுனு பேரு. கரெக்டா பஸ் ஸ்டாப்புக்கு நேரா கார் நின்னிருக்கு.

எங்களோட அதிர்ஷ்டம்.... அந்தவழியா ஒரு மெக்கானிக் வந்தாரு... நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டுட்டு, சக்கரத்தை மாட்டிடலாம்னு சொன்னாரு.. டோ கட்டி இழுத்துட்டு போயிடலாமான்னு கேட்டோம்.. வேண்டாம்னு சொல்லிட்டு, கோகுலை கூப்பிட்டுட்டு அந்த மெக்கானிக் வந்திருந்த மோட்டார் சைக்கிள்ல குன்னூர் பொறப்பட்டாரு...

அது எவ்வளவு பெரிய தப்புன்னு அப்ப தெரியலை........

இத்தனை விஷயம் நடந்ததெல்லாம் மதியம் ரெண்டு மணி இருக்கும். சாப்பிடவேற இல்லை. பசியெடுத்துச்சு. மெக்கானிக்கும் கோகுலும் போனவங்க ஆளையே காணோம். இங்கிருந்து ஒரு போன் கூட பண்ணமுடியாது. டவர் இல்ல. எனக்குன்னா, நிக்கவும் முடியாம உக்காரவும் முடியாம ஒரே வலி. பசங்க டால்பின் நோஸ்ல ட்ரை நெல்லி வாங்கியிருந்தானுங்க. ஒவ்வொன்னா பிச்சி பிச்சி சாப்பிட்டேன். கார் நின்னதுக்கு நேரெதெரே கரண்ட் போஸ்ட். அந்த ஏரியாவிலயே அந்த போஸ்ட் மட்டும்தான். அதுவும் பஸ் ஸ்டாப்புங்கறதால வெச்சிருக்காங்க. இல்லாட்டி அதுவும் இல்லை. அங்கிருந்து பாதை ரெண்டா பிரிஞ்சி, ஒன்னு டால்பின் நோஸுக்கு இன்னொன்னு அப்பர் பாரிஸுக்கும் போவுது. அப்பர் பாரிஸ் ரோடு, மண்ரோடு, மேடா இருக்கிறதால நிறைய கல்லை அடுக்கி வெச்சிருந்தாங்க, டிவைடர் மாதிரி. அங்க போய் உட்கார்ந்துகிட்டோம்.

”எல்லாம் இவனால வந்தது” ஸ்கூபி ராக்கியை பார்த்து சொன்னான்

“நான் என்னடா பண்ணினேன்?”

”முன்னாடி உட்காரேன்னு அடம்பிடிச்சு பாரு, வெயிட்டு தாங்காம சக்கரம் கழண்டிருச்சு”

“ஆமா இல்லைன்னா மட்டும் திருப்பூர் வரைக்கும் அலேக்கா போகுமாக்கும்?”

“எனக்கும் அந்த டவுட் இருக்குடா” நான் கொஞ்சம் ஊதிவிட்டேன்

“என்னாங்கடா, ஏக்ஸிடண்டுக்கு நாந்தான் காரணம்னு சொல்றீங்க”

“மொத்தமா நீதான்னு சொல்லல, நீயும்தான்னு சொன்னேன்”

எங்க சண்டை முடியறதுக்குள்ள கோகுலும் மெக்கானிக்கும் வந்துட்டாங்க. கையில ஒரு பெரிய சைஸ் கப்பும் அஞ்சாறு போல்டும் கொண்டுவந்திருந்தாங்க. மெக்கானிக் ஒரு சின்ன பையை எடுத்துட்டு வந்திருந்தாரு.

“எவ்வளவு நேரங்ணா ஆகும்?”

“ஒருமண்நேரம் இல்லாட்டி ரெண்டு மண்நேரத்தில முடிச்சரலாம்”

சக்கரம் கழண்ட இடத்தில உட்கார முடியாது, பள்ளம் இருக்கு. அதனால எல்லோருமா சேந்து (சரி சரி... நானில்லாமதான்) வண்டியை ஒன்ரரை அடி தள்ளி போட்டோம். மெக்கானிக் கழண்டு போன இரும்பு ராடைப் பார்த்துட்டு,

“போல்டு அப்படியே இருக்கு, அதை எடுத்தாத்தான் புதுசை போடமுடியும்” னாரு

“சரி பண்ணிடுங்க”

“ஸ்பேனர்..... 20 22 (சரியான அளவு தெரியலை) வேணும். அது என்கிட்ட இல்ல, குன்னூர்தான் போகணும்“

“ மறுபடியுமா?”

“20 22 தானேங்ணா, வண்டி டூல்கிட்ல இருக்கும்ல, வர வண்டியை நிறுத்தி கேக்கலாமே”

”ஆங்..... தந்திட்டுதான் போவானுங்க.... எவனாச்சும் ஒருத்தன்கிட்டயாச்சும் வாங்கிடுங்க பாக்கலாம்”

“ஏங்ணா, வாங்க முடியாதா”

“எவனும் நிறுத்தக்கூட மாட்டானுங்க. நான் ஒர்க்‌ஷாப்புக்குப் போயிட்டு வந்திடறேன்”

ராக்கிக்கு வேற பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு... எங்களுக்கும் தான், என்ன, நாங்க சொல்லல அவன் சொல்லிட்டான். ஏற்கனவே மணி நாலு ஆச்சு, மொதவாட்டி போயிட்டு வந்ததுக்கே ரெண்டு மண்நேரமாச்சி, இப்போ திரும்ப போயிட்டு வந்து....... எப்ப முடிச்சி எப்ப போறது?

”எனக்கென்னவோ இன்னிக்கு முடியறாப்படி தெரியலடா”

“வாயைக் கழுவுடா”

“அவன்அவன் வயித்தெரிச்சல்ல இருக்கான்”

“ஏண்டா?”

“வண்டி ஆக்ஸிடண்ட் ஆயி நிக்குது, எப்படிறா ஊருக்குப் போறதுன்னு யோசிச்சுட்டு இருக்கோம். இவனுக்கு பசிக்கிதாம்”

“அவன் வயிறு, பாவம்...”

“சிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்க ராக்கி”

“டேய்.... நீங்க கேட்கல, நான் கேட்டுட்டேன்.. அது தப்பாடா? உங்களுக்கெல்லாம் பசிக்கவே இல்ல.... “

மெக்கானிக் திரும்பி வந்தான், கோகுலும்தான். ஒரு ஸ்பேனருக்காக ரெண்டு பேரும் குன்னூருக்கே போயிருக்காங்க..
மணி அஞ்சரை. மெக்கானிக் ராடுல இருக்கிற போல்டை கழட்டு கழட்டுன்னு கழட்டிகிட்டே இருந்தாரு. ஒண்ணூம் முடியலை.. எல்லோரும் ஒரு சான்ஸ் ட்ரை பண்ணி பார்த்தோம். எழவு கொஞ்சம் கூட கழண்டு போகவே இல்ல.

மணி ஆறு...

ஆறு மணிக்கே இருட்டிடுச்சு, நல்ல குளிரு, ஸ்வெட்டர் யாருகிட்டயும் கிடையாது. யாருக்குத் தெரியும் இந்தமாதிரி ஆவும்னு. எனக்கென்னவோ இது நடக்கற கதையா தெரியலை. மெக்கானிக் வேற வெளிச்சமில்லை குன்னூர் போயி மெழுகுவர்த்தி வாங்கிட்டு வாங்கன்னு ஸ்ப்ரிங்கியையும் ராக்கியையும் அனுப்பிவெச்சாரு. ஸ்கூபி பக்கத்தில இருக்கிற எல தழ குச்சியெல்லாம் சேர்த்துட்டு இருந்தான்...

”எதுக்குடா சேர்த்துட்டு இருக்கிற?”

“கேம்ப் ஃபைர் போடறதுக்குத்தான்”

தொடரும்...

கொஞ்சம் கொஞ்சமா பின்னாடி போயிட்டிருந்தேன். ஆனா அந்த ரோட்ல எவனோ வீணாப்போனவன் குழி வெட்டி வெச்சிருந்ததை கவனிக்கவே இல்ல. குழின்னா அகலமா இல்லை.. ஆழமா பந்தகால் நடற அளவுக்கு குழி. இங்க எந்த எழவு விழுந்துச்சோ தெரியலை இப்படி குழி வெட்டி வெச்சிருக்கானுங்க.. என்னோட இடது கால் உள்ள போயி பாதம் மட்டும் திரும்பிடுச்சு.. நீங்க மாடிப் படிக்கட்டில அவசரமா இறங்கி வரம்போது தெரியாம காலை சுளுக்கிடுவீங்களே, அதையே கொஞ்சம் ஃபோர்ஸா பண்ணினா எப்படி இருக்கும்... அப்படியே சுர்ருனு சுறா மாதிரி வலி ஏறிட்டு இருந்தது. படார்னு கரண்டுல கைய வெச்சமாதிரி எடுத்துட்டேன். . பசங்க எல்லாம் சிரிச்சுக்கிட்டே வந்து காலைப் பார்த்தானுங்க.

“ குழி வெட்டியிருக்கிறது கூட கண்ணுக்குத் தெரியலயாடா?”

“கண்ணு மண்ணு தெரியாம சைட் அடிக்கிறதுங்கறது இதுதான்” யு ஹவ் டன் யுர் ஜாப்..

“ அநெகமா ஃப்ராக்ச்சர் தான் “

“காலை வெட்டித்தான் எடுக்கணும்”

”டேய்”

“ரொம்ப வலிக்குதாடா?”

“ம்”

”ரெண்டாவது பல்பும் வாங்கிட்டான்டா”

”ரெண்டா?”

”ஆமாம், நேத்திக்கே, ப்லாக் தண்டர்ல அருணாகொடிய தொலைச்சுட்டான்ல.”

“டேய் டேய்... அடங்குங்கடா”

“நடக்க முடியுமா?”

“ஷ்..... ஆஅ......... இல்லடா ரொம்ப வலிக்குது?”

“ சரி அப்படியே இழுத்துட்டு போய் கார்ல போடுங்கடா”

“டேய் மாப்ள, அதை விடுறா... அந்த யெல்லோ ஸ்லீவை பார்த்தியா... என்னா ஃபிகருடா...!!!........................................”

கால்ல சரியான வலி... அடி எடுத்து வைக்க முடியல. நான் நல்லா ஃபிகரை போட்டோ எடுக்கிறேன்ல. எவனோ பார்த்து பொறாமை பட்டுட்டான்னு நினைக்கிறேன்.. இங்கிலிஷ்ல ஜோம்பி படங்களைப் பார்த்திருப்பீங்களே... காலு ஒடிஞ்சி போய் ஒருமாதிரி இழுத்து இழுத்து நடப்பாய்ங்களே.......... அந்த மாதிரி ஆயிடுச்சு.. அப்படியே கைத்தாங்கலா (இழுத்துட்டு போய்) கார்ல விட்டானுங்க. எனக்கு என்ன கவலைன்னா..... இந்த சம்பவத்தை ரெண்டு பொண்ணுங்க பார்த்து சிரிச்சுட்டு போனாங்க.. ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆயிடுச்சு. ஆனா அப்படியிருந்தும் ஒண்ணூம் ஆகலைங்கறமாதி மூஞ்சி வெச்சுகிட்டேன்... நாங்க கீழ விழுந்தாலும் மீசையில மண்ணூ ஒட்டாதில்ல... (எங்களுக்குத்தான் மீசையே இல்லையே)

“ கோத்தகிரி போய் மாவு கட்டு போடவேண்டியதுதான்”

“என்னது?” மாவுக்கட்டா.... அட தேவுடா...

“ டேய் ராக்கி, என்னடா தின்னுட்டு இருக்கே?”

”லேய்ஸ் டா”

”இப்படியே தின்னு தின்னு தொண்ணூத்தஞ்சு கிலொ டா இவன்... இந்த லட்சனத்தில ந்யூ இயர்குல்ல ஒடம்ப கொறைக்கறானாம்...”

“ டேய் குறைச்சுக் காமிக்கிறேன் பார்டா”

“ குறைச்சுக்கோ, ஆனா காமிக்காதே”

”இவன் என்னடா மொனகிட்டே இருக்கான்....... கால் முறிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.. நேரா ஊருக்குப் போயிடலாமா?”

“வேணாம்,... கோத்தகிரி போய்ட்டே போவோம்... (நான்)

“ஏன்?”

“வழியில ஃபிகரை பாத்தமாதிரி இருக்கும்ல”

“டேய், இவனுக்கு இன்னொரு கால் நல்லா இருக்குன்னு எகத்தாளம்”

நாங்க அப்படியே கோத்தகிரிக்கு திரும்பிட்டு இருந்தோம். காரு 20 ஸ்பீட்லதான் போயிட்டு இருந்தது. சின்ன ரோடு, எதிர்த்தாப்படி வர்ற காருகளுக்கு வழி விட்டுத்தான் போக முடியும். அவ்வளவு அகலம். ரோடுக்கு இங்கிட்டு (லெஃப்ட் சைட்) 2000 அடி டீலா. விழுந்தா கழுகு கூட தேடாது. எனக்கு வலி கொஞ்சம் இருந்தாலும் பேசிகிட்டே வந்ததுல பெரிசா ஒண்ணும் தெரியல. முன்னாடி ராக்கி உட்கார்ந்துட்டு இருந்தான், பின்னாடி முனகினமாதிரியே நான், ஸ்கூபி, ஸ்ப்ரிங்கி கொஞ்சம் தூரம் போயிருப்போம்.. திடீர்னு ஒரு சவுண்ட்... கார்ல ஏதோ வெடிச்சமாதிரி இருந்திச்சு. சட்டுனு இடதுபக்கம் மட்டும் லைட்டா இறங்கினாப்ல இருந்தது. கிர்ர்ர்ர்ர்ருனு ஒரு சவுண்டு.. கோகுல்தான் காரை ஓட்டினான். ஆனா அவனோட கண்ட்ரோல்ல கார் இல்ல... நடுரோட்ல போயிட்டிருந்த கார், கொஞ்சம் கொஞ்சமா சைட்ல போக ஆரம்பிச்சுது.. எங்களுக்கெல்லாம் ஒரே பயம்... ஒரேயொரு பயம்தான்... இன்னிக்கு சோலி சுத்தமாயிடுச்சு, எல்லோரும் பரலோகம்னு நினைச்சிட்டு இருந்தோம்.. கார் கொஞ்சம் கொஞ்சமா ஸ்லோ ஆயிட்டே இருந்தது... ஆனா சைட்ல பள்ளம்... ரெண்டாயிரம் அடி டீலா... விழுந்தா எதுவும் மிஞ்சாது....... ஒரு நிமிஷம் எல்லோரும் வந்து போனாங்க..... அய்யயோ ஃபிகரை போட்டோ எடுத்ததை ஃப்லிக்கர்ல ஏத்தமுடியாம போச்சே!!

எல்லோரும் கண்ணை மூடினோம்.....

தொடரும்எச்சரிக்கை :

1. இதை யாரும் தனியாகப் படிக்கவேண்டாம். குறிப்பாக இரவில் படிக்கவேண்டாம்
2. இதயம் பலகீனமாக உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கவே வேண்டாம்!!
3. ?

முன் குறிப்பு:

இச்சம்பவத்திற்கு முன்னோ அல்லது பின்னோ நிகழ்ந்தவைகள் பற்றி கேட்காதீர்கள். அதில் சுவாரசியமுமில்லை.

சரி சரி... ஓவரா சீன் போடாம விஷயத்திற்கு வாரேன்.

போன தீவாளிக்கு அடுத்த மூனாவது நாள் குன்னூர்லதான் இருந்தோம்... நான் (ஆதவா), ஸ்கூபி, ஸ்ப்ரிங்கி, கோகுல், அப்பறம் ராக்கி.... (பொம்பள பசங்க யாரும் இல்லப்பா) குன்னூர்ல என்ன வேலைங்கறீங்க... இந்த அஞ்சு பேருக்குமே வெளியூர் வந்தா சைட் அடிக்கிறத தவிர வேறெந்த குலத்தொழிலும் இல்ல. பொதுவா, பொண்ணுங்கள விட்டா வேற எந்த பேச்சும் பேசலைன்னு சொல்லலாம்.. அது ஒரு பக்கம் ஸ்வீட்டா நடந்துட்டுதாங்க இருந்தது..... ஆனா இந்த ட்ரிப் ஒரு பெரிய அனுபவத்தை உண்டாக்கும்னு நெனச்சுக்கூட பார்க்கலை.... அதுவும் திக் திக் இரவு காட்சி மாதிரி ஆயிடுச்சு....

நாங்க அஞ்சுபேரும் அம்பாஸ்டர் கார்லதான் கிளம்பினோம். முதல்நாள் ப்லாக்தண்டர், அடுத்தநாள் குன்னூர், கோத்தகிரி போகலாம்னு ப்லான்... வருஷா வருஷம் ஊட்டிக்கே போகறதுக்குப் பதிலா இப்படி மாத்தி போலாமேன்னு ஐடியா.. ப்லாக்தண்டர், முடிச்சுட்டு, நைட்டு குன்னூர்ல தங்கிட்டு, அடுத்தநாள் சிம்ஸ் பார்க் போயிட்டு......... குன்னூர்ல இருந்து கொஞ்சம் மேல போனோம்... அப்பர் குன்னூர்.. டால்ஃபின் நோஸ் போயிருப்பீங்களே.. அங்கயேதான்.. ரெண்டு மலைகள் சந்திக்கிற வ்யூபாயிண்ட் அதுக்கு நடுவில அருவி... செம ப்லேஸ் அது. இன்னும் வ்யூபாயிண்ட் நெறய இருக்கு.. அதிலயும் நீலகிரீங்கற பேர் ஏன் வந்ததுன்னு தெரிஞ்சிக்க விரும்பறவங்க அந்த இடத்துக்கு நிச்சயம் போகணும். . கல்யாணம் முடிச்சுட்டு புதுசா ஹனிமூன் போறவங்க நிச்சயம் அதை பார்க்கணூம்

"அங்க நிக்குதுபார் சோடப்புட்டி.. அந்த ஃபிகரை போட்டோ எடுக்க முடியுமா?

“ஓ”

“மாப்ல, பக்கத்தில இன்னொரு ஃபிகர் நிக்குதுபாரு, அது அவளோட புருஷன். அன்லிமிடட் மீல்ஸ்டா... பொரட்டி எடுத்திருவான்”

“ டேய் இது கேண்டியோக்ரஃபினு சொல்லி சமாளிச்சரலாம்.”

” உம். மூஞ்சி. செருப்பால அடிப்பான், அப்பறம் தெரியும் உன் கிராபி என்னன்னு..”

“எடுத்திரலாம், ஆனா க்லியரா இருக்காதுடா.. ஜூம் பத்தாதே”

”முடியலைன்னு சொல்லி”

”முடிஞ்சா எடுத்துக்காமி”

இப்படியா என்னைத் தூண்டி விட்டானுங்க.. நம்ம பசங்ககிட்ட எந்த சவால்னாலும் தோத்தரலாம். ஆனா பொண்ணுங்க விஷயம்னு வந்துட்டா, ம்ஹூம்.... தோக்கவே கூடாது.. அப்பறம் வேலைக்காகதுன்னு சொல்லிடுவானுங்க. தவிர நானும் ஒரு நல்ல போட்டோக்ராபர் அப்படின்னு காட்டித் தொலைக்க வேணாமா? ஒண்ணு, அந்த ஃபிகரை போட்டோ எடுக்கணும்.. இல்லைன்னா பசங்ககிட்ட தோல்விய ஒத்துகிட்டு அப்பப்ப பல்பு வாங்கணும். முயற்சி பண்ணுவோமே.. அந்த பொண்ணுங்க ரோட்டோரமா இருக்கிற கம்பிகள் கிட்ட நின்னு இயற்கையை ரசிச்சுட்டு இருந்தாங்க. டால்பின் நோஸ் வ்யூபாண்ட் கூடாரத்தில இருந்து முதல்ல ரெண்டு ஷாட்... தெரியாத்தனமா எடுத்தேன்.. ப்ச்.. சரியா வரலை.. கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போய் எடுத்தேன்..... ஏமி வர லேது............ ஆனது ஆச்சு,,, பக்கத்தில போயி எடுத்தரலாம்னு ரொம்ம்ம்ப பக்கத்தில நின்னு பளிச்சு எடுத்து வந்து காமிச்சேன்....

“கல்யாணம் ஆன பொண்ணைப் போய் எடுத்துட்டு வந்திருக்கான் பாரு, XXXXXXX XXXX XXXX” ன்னான் கோகுல்..

"ஏண்டா, அவளுக்கு என்னா கொறச்சல்?

“கெழவி டா”

“ஏதோ ஒண்ணு, எடுக்கச் சொல்லி எடுத்தோம்ல”

“அது எல்லாருக்கும் போஸ் கொடுக்குது, ஒனக்கு மட்டும் கொடுக்காதா?”

“டேய், நீங்க தாண்டா எடுக்கச் சொன்னீங்க?”

“சொன்னா, செஞ்சுருவியா? இந்த மலையில இருந்து குதின்னா குதிச்சிருவியா?”

“பைனலா என்ன சொல்ல வறீங்க?”

“மொதல்ல கேமராவை ஆஃப் பண்ணு, சும்மா நோண்டிட்டே இருக்காத”

“கேமராவை எடுத்தான்னா, என்னவோ இவந்தான் பிஸி ஸிரீராம் மாதிரி ஆங்கிலுங்கறா அபர்சருங்கரா, ஷட்டருங்கறா, தொல்லை தாங்கலடா..

“இவன் ஷட்டரை க்லோஸ் பண்ணிட்டா சரி”

”போங்கடா ங்கொய்யாங்கோ... ”

”டேய் இவன் ஃபிகரை போட்டோ எடுத்து ஃப்லிக்கர்ல ஏத்தறதுக்குத்தான் இவ்ளோ பண்ணிட்டிருக்கான்.”

“இங்க பாரு... இந்த கொரங்கைக் கூட உன்னால சரியா ஃபோகஸ் பண்ண முடியாது”

” மாப்ல, போட்டோ எடுக்கறேன்னு எல்லா இடத்திலயும் படுத்துக்கிறாண்டா.. சரி நல்லாருக்கும்னு பார்த்தா.....

“அதை விட்றா.. அடுத்து என்ன ப்லான்.. சாப்பிட்டுட்டு கிளம்பலாமா? இல்ல, கோத்தகிரிக்கே ஸ்ட்ரெய்ட்டா போயிடலாமா?”

..........................

இப்படியே போயிட்டிருக்க, அந்த குரங்கு போட்டோ எடுரா மாப்ல நு என்னையே பார்த்துட்டுதான் இருந்தது. இவனுங்க என்ன நம்மள சொல்றது... எப்படியாச்சும் குரங்கை க்லோஸப்ல எடுத்து ஃப்லிக்கர்ல போட்டுட வேண்டியதுதான்.. அனிமல் போட்டோகிராபியில நம்மளை மிஞ்ச எவனும் இல்லை... கொஞ்சம் பின்னாடி போனாத்தான் நல்லாயிருக்கும்..

கொஞ்சம் பின்னாடி...

இன்னும் கொஞ்சம் பின்னாடி.....

இன்னும்...

இன்னும்....................

அப்பத்தான் அது நடந்தது!!!

தொடரும்...

புத்தகங்களிலிருந்து கசிந்து அறை நிரப்பும் வாசம் வாசிக்கும் மனமாயலோகத்தில் அடைந்து கிடக்கும் துவாரங்களைத் திறந்துவிட்டுச் செல்கிறது. சிலசமயம் நன்கு திறந்து மாசடைந்து கிடந்த துவாரங்களை மூடிவிட்டும் செல்கிறது. புத்தகங்களின் வேலையே இதுதான். ஆனால் அவை நம்முள் நெடுக பயணிக்கின்றன. அதன் பயணத்தின் போது நமக்கு பல குறிப்புகளையும் துப்பிவிடுகின்றன. குறிப்புகளும் குறியீடுகளும் நிறைந்த அதன் எச்சில் வழியே வாசிப்பின் அடுத்த நகர்வு உள்ளதை படைப்பாளிகள் அறிந்துவைத்திருப்பார்கள்.

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் புத்தகப் பெண்களை காமத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஒரு சிறுமி, வயது பத்துக்குள் இருக்கலாம். புத்தகத்தைத் திறந்து அதனுள் எழும் வாசத்தை நுகர்ந்தாள். அச்சு வாசனை அத்தர் வாசனையைக் காட்டிலும் அவளுக்கு இன்பம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. வாசிக்கும் நாம் அனைவருமே அதன் வாசத்தை அதற்கே அறியாமலோ அல்லது நம்மை அறியாமலோ நுகர்ந்துவிடுகிறோம். அது சிலசமயம், என்னை நுகர்ந்து கொள் என்று தன்னை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது. நிர்வாணமாய் தன்னைக் காட்டி நமக்கு ஆடை அணிவிக்கிறது. அச்சிறுமிக்கு புற வாசனையைப் போன்று நமக்கு அகவாசனை. எழுத்துக்களில் மலிந்து கிடக்கும் தரமான வாசத்தைப் பிரித்து எடுப்பது நம் நுகர்வின் பணி. புத்தகங்கள் தேர்ந்தெடுத்தலைப் போன்ற மிகக் கடினமான தேர்வுப் பணி வேறேதுமில்லை. அதன் அக அழகின் ஆழம் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ளக் கூடியதல்ல. அதை முதல்முறையாக உணர்ந்தேன்.

குழந்தைகள் பொருட்காட்சியை சுற்றும் பொழுது ஏற்படும் உவகையைப் போன்றே புத்தக கண்காட்சிகளில் வாசகனுக்கு உண்டாகின்றன. முன்பே ஒருமுறை கூறியிருக்கிறேன். புத்தக கண்காட்சிகளுக்குச் செல்லும் பொழுது, முதலில் பதிப்பகம் வாரியாக பிரித்துக் கொண்டு பிறகு மறுமுறை சுற்றுவேன். இம்முறை அப்படிச் சுற்றியதில் பல புத்தகங்களையும் தவறவிட்டது குறித்து மிகவும் வருத்தப்பட்டேன். பிறகு மறு சுற்றலில் அவை கிடைக்கவேயில்லை. புத்தக தேர்ந்தெடுத்தலுக்கான வழிமுறைகளிலிருந்து நான் பிசகி நடப்பதாக எனக்குப் பட்டது.

குறைந்த பதிப்பகங்களே ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு வந்திருப்பதாகத் தென்பட்டது. பல எதிர்பார்த்த புத்தகங்கள் இல்லையென உச் கொட்டி சென்றவர்களையும் காணமுடிந்தது. இளம்பெண்கள், பா.விஜய், தபூசங்கர், வைரமுத்து போன்றோரின் கவிதைகளைப் படித்து உடன் வந்திருந்த தோழிகளிடம் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புத்தகங்களில் காதல் வாசம் தூக்கியிருக்கவேண்டும். பலதரப்பட்ட வயதினரையும் காணமுடிந்தது.

கிருஷ்ணபிரபு எனக்கு அடிக்கடி சொல்வார். புத்தக வாசிப்பு உங்களுக்கு அவசியம் தேவை என்று. தேவை என்று உணரும்பொழுது அதற்கான முயற்சிகளையும் நாம் எடுக்கவேண்டும். ஆக, எனக்கு மிகவும் பிடித்த தொழிலான கவிதையும் கவிதை சார்ந்துமே அதிக புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தேன். கீழ்பட்டியலிட்டவை சொந்தமாக்கப்பட்டுவிட்டன புத்தகங்கள் மட்டும்..

கவிதையும் கவிதை சார்ந்தும்...

கவிதைகள் :
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - மனுஷ்யபுத்திரன்
காயசண்டிகை - இளங்கோ கிருஷ்ணன்
உறுமீன்களற்ற நதி - இசை
நீராலானது - மனுஷ்யபுத்திரன்
பூமியை வாசிக்கும் சிறுமி - சுகுமாரன்
மணலின் கதை - மனுஷ்யபுத்திரன்
கல்யாண்ஜி கவிதைகள் - கல்யாண்ஜி

கட்டுரைகள் :

சித்திரங்களின் விசித்திரங்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
எப்போதும் வாழும் கோடை - மனுஷ்யபுத்திரன்
கவிதை எனும் வாள்வீச்சு - ஆனந்த்
நவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்

கதை சார்ந்து:

என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
நகுலன் வீட்டில் யாரும் இல்லை - எஸ்.ராமகிருஷ்ணன்

இப்படி பட்டியலிடுவதன் மூலம், என்னை நான் தனித்துக் காட்டவோ, அல்லது வேறெந்த வகையிலும் சிறப்பிக்கவோ முனைய வரவில்லை. பின் வரும் பின்னூக்கங்கள் அது குறித்துப் பேசப்படலாம். வேறு சில உதாரணங்கள், முன்மொழிகள் சுட்டலாம். அல்லது தேவையானது தேவையற்றது என வகைப்படுத்தலாம்.. அது உங்கள் கைகளில்...

6.8.10

வெயில்

|


1.
ஓடு பிளந்து பாயும்
மின்சாரத்தைப் போல
வெயிலாயுதம் தாக்குகிறது
சூரியபழம்
கொறிக்கமுடியாத கொதிப்பில்
மிதந்து கிடக்கிறது
முழுத் தொண்டையும் வறண்டு
இரவை மண்நாக்கால் நக்கிவிட
பாலை மின்னுகிறது
கண்ணாடித் துகள்களென
வெம்மையின் பிம்பங்கள்
கூச்சிடும் சப்தத்தில்
கதறிக் கொண்டிருக்கின்றன
சர்ப்பங்கள் ஊறுவதாக
கொப்பளித்த பாதங்களைத் தேடி
மண் அலைகிறது ; அதனை
தன் பையில் பத்திரப்படுத்திக் கொள்கிறது
எத்தனை சேகரித்திருப்போமென
கணக்கேதுமற்று மணல் முன் செல்கிறது
அதற்குத் தெரியப் போவதில்லை
தொடர்ந்து வரும் பெரும்புழுதி
கொப்பளப்பாதங்களின் சுவடுகளை
காகிதங்களெனக் கிழித்து வருவதை.

2.
பிம்பமாக அலைகிறது வெப்பம்
அது துப்பிய கோபத்தில்
கொதிக்கிறது தண்ணீர்
அவமானக் கறைகள்
ஆவியாக வெளியேறுகிறது
உனக்கு சற்றும் பிடித்திருக்கவில்லை
கோபத்தால் தண்ணீர் கலைக்கிறாய்
நீர்முழுக்க சிதறிக் கிடக்கிறது
சூரியன்

4.8.10

நிர்வாணம்

|Thanks : http://www.serbianaart.com

பொழுது புகுந்த மோனக்கிறுக்கால்
ஒளித்திரள் பட்டுத் தெறித்த
பகலாகத்
துடித்துக் கொண்டிருந்தேன்

நெடுமலையில் ஊறிக் கசிந்த
மணற்த் திட்டினைப்போல்
என்னை விட்டு நழுவிக் கொண்டிருந்தது
நிர்வாணம்

நுரைகுமிழிகளைத் தொட்டுடைக்கும்
விளையாட்டில், பருவம் வென்றது
எப் பணயமுமின்றி
தோற்றோடியது நிர்வாணம்

நெய் தகழியில் உலாத்தும் தும்பியென
நெடுநாட்கள் ஒவ்வொன்றாய்
ஆடையின்மையின் நினைவுகள்
இழுத்துச் சென்றன

நிர்வாணம் என்பது
சட்டெனத் தோன்றி மறையும்
துருவாசன் கோபங்கள்
நில்லாமை அதன் பாவம்
அப்பட்டம் அதன் குற்றம்

வெயிலெறிந்த முட்கதிர்களைப்
பொடித்தனுப்பும் படலம் போல
இடை நழுவா கச்சையொன்று
இன்றென்னை மெய்காத்து நிற்கிறது
அது
காத்தலெனும் தொழிலினூடே
அழித்தலும் செய்துகொண்டிருக்கிறது.

ஆடைத் திணிப்பெனும் ஏகாதிபத்தியத்தில்
இருமனக் குழப்பங்களுக்கிடையே
தங்கித் தவித்து
இறுதி வரையிலும் இழுத்துக் கொண்டிருந்த
நிர்வாணத்தின் இறுதிமூச்சடக்கி
கவிந்து கிடந்த
மணற் தாழியில் அடைத்து
முன்னிருட்டு அகலும் முன்
மூர்க்கமாய் எரிந்துவிட்டேன்

இனியொருப்பொழுதும்
அதைத் தழுவிப்
பொதுவில் செல்லுதலில்லை
எனும் பொருமலுடன்....

Subscribe