வலைப்பதிவுகளுக்கு வந்து இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கு இந்தளவுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. ஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். இன்று எழுதினால் வந்து படிக்க மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது.

சரி, கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக ஒரு காரியம் செய்யலாமே என்று இதைச் செய்கிறேன். மார்ச் மாதத்தில் எனக்குப் பிடித்த பதிவுகள் எவை எவை என்று பட்டியலிடப்போகிறேன்... இது சிறந்த பதிவுகள் பற்றியதல்ல. எனக்கு மட்டும் பிடித்த பதிவுகள். நான் யாரையெல்லாம் பின் தொடருகிறேனோ அவர்களின் பதிவுகளை மட்டும் சேகரிக்கிறேன். பதிவு கொஞ்சம் நீளமாக இருந்தாலும் பொறுத்துப் படித்துக் கொள்ளவும்!!

ஒவ்வொரு மாதமும் நேரம் அமைந்தால் மட்டுமே இப்பணியைச் செய்வேன்!!!! சரி... பட்டியலுக்குப் போவோம்..

மார்ச் 1 முதல் மார்ச்

பிடித்த கவிதைகள்
 1. நட்புடன் ஜமாலின் கருப்பு சூரியன்.. கருப்பான பெண்ணைக் காதலிக்கும் காதலன் தன் காதலியை உயர்வாக எண்ணும் இக்கவிதை சுருக்கமாக அதேசமயம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. தாழ்வுணர்ச்சி கொண்டவர்களுக்கு இக்கவிதை ஒரு ஆறுதல்.

 2. நான்கு பதிவுகளை மட்டுமே கொடுத்திருக்கிறார் புதியவன். நான்கும் கவிதையாக... ஒவ்வொன்றும் பிரமாதமாக வடிக்கிறார்.
  எனக்கானதொரு தேவதை சொற்களை வைத்துக் கடையப்பட்ட பயிறு. மிக நேர்த்தியான தேடல். தேவதைகளுக்கென கனவுலகம் செல்லும் கவிஞனின் யாத்திரை. நீ இல்லாத பொழுதுகளை வெறுமையாக நிரப்பாமல் காதலையே நிரப்புகிறார் கவிஞர். சற்று வித்தியாசமான சிந்தனை.

 3. சிக்கல், வாழ்வியல் நிகழ்வுகளைப் படம்பிடிப்பதாக அமைந்திருக்கும் கவிதை. அநாயசமாக கவிதையை எடுத்துச் செல்லுகிறார் அகநாழிகை

 4. குறைந்த பதிவுகளே நிறைந்த பதிவுகளாக எழுதி வரும் அபுஅஃப்ஸரின் உன் வெற்றிடம், வெறுமையைப் போக்குவது குறித்த மனோதத்துவக் கவிதை.

 5. இரு கவிதைகளை மட்டுமே ரிஷான் மார்ச்சில் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று ஆட்சிகள் உனதாக கவிதை அழகாக இருக்கிறது. அங்கங்களை வர்ணித்தது போதும் சக மனிதராக பெண்ணைப் பாருங்கள் என்கிறார்.

 6. குடந்தை அன்புமணி கவிதை எழுதுவார் என்பதே கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் தெரியும். குறும்பாக்கள் சில எழுதியிருக்கிறார். அருமையான குறுங்கவிதைகள்... குறும்பாக்கள் 2

 7. காதல், திருமணம் குறித்த கவினது கவிதை செறிவான சொற்களை வைத்து கட்டப்பட்ட பூமாலை!

 8. மருத்துவரின் பதிவுகள் பல பயனுள்ளவை. பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். தேநீர் கவிதைகள் ரொம்ப சுவாரசியமான காதல் கவிதைகள்..

 9. விட்டு விடுதலையாகாமல்... கவிதை மாதவராஜின் சிறந்த கவிதைக்குச் சான்று.

 10. சித்தி கவிதையில் நம் உணர்வுகளைக் கிளறுகிறார் ச.முத்துவேல். இவர் கவனிக்கப்படவேண்டிய எழுத்தாளர்

 11. அன்பெழும் பொழுதில் அழகான காதல் கவிதை... கணவன் மனைவி உறவை மிக அருமையாக முடிக்கிறார் ஆ.முத்துராமலிங்கம். இவரது கனவுகளை வெளியெறிதலும் அருமையான கவிதை. கவனிக்கப்படவேண்டிய கவிஞர்.

 12. கடையம் ஆனந்தின் நீயும் குழந்தை நானும் எனும் கவிதை யதார்த்தமான கவிதை.

 13. நண்பர் ஆதியின் கவிதைகள் தரமானவை. மழைக்காலத்தில் அவர் புலம்பிய புலம்பல்கள் நல்ல சொற்கட்டுகளால் வைத்து தைக்கப்பட்ட மரபிலக்கியம்.

 14. அ.மு.செய்யது பதிவு எழுதுவதைக் காட்டிலும் அதிக ஊக்கங்களைத்தான் எழுதுகிறார். அவரது கண்டினியுட்டி இல்லா கவிதை...... அருமையான கவிதை. நல்ல சொல்வீச்சு. நிறைய எழுதுங்கள் அ.மு.செய்யது.....

 15. யாத்ராவின் அனைத்து கவிதைகளும் பிரமாதமானவை.. இருந்தாலும் பிடித்த பலவற்றுள் ஒன்றைத்தருகிறேன். எதுவும் நிகழவில்லையென

 16. ஆதங்கத்தோடு மடிசுமந்த மரணம் என்று கவிதை எழுதியிருக்கிறார் ரீனா இக்கவிதையின் முடிவு ஒருவகையில் சிந்திக்கவும் தோணுகிறது. நிறைய எழுதுங்க ரீனா.

 17. புதுமையான சொல்வீச்சோடு கவிதைகள் எழுதுவதில் ஹேமாவை (பாட்டி?) அடித்துக் கொள்ள யாருமில்லை. அவரது கவிதைகள் எல்லாமே நல்ல சொல்வளத்தோடு இருக்கும். சிவப்பு விளக்குப் பெண்ணான 'அவளை' குறித்து எழுதியிருக்கும் இக்கவிதை டாப்; மற்றொன்று ஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள்... மிதமான ஆவேசக் கவி..

 18. கண்ணாடி இதயம் என்று தலைப்பே வித்தியாசமாக எழுதியிருக்கும் வேத்தியனுக்கு இக்கவிதை முதல் கவிதையாம்....

 19. ஷீ-நிசியின் கவிதைகளை ஒரு வட்டத்திற்குள் அடக்கமுடியாது. அவரது அப்பா கவிதையும் போர்க்களமா வாழ்க்கையும் குறிப்பிடத்தக்க கவிதைகள்.. இந்த மார்ச் மாதத்தில்

பிடித்த அலசல்கள் 1. அகநாழிகையின் பகவான் ஸ்ரி கிருஷ்ணரையும், தேவர் ஸ்ரி ஏசுபிரானையும் சம்பந்தப்படுத்தி அவர்களின் ஒற்றுமையை அலசும் அருமையான பதிவு ஏசுநாதரும் வாசுதேவனும்.

 2. ஆ.ஞானசேகரன் எழுதும் பதிவுகளெல்லாம் எளியமுறையிலான அலசல்கள்.. எல்லா பதிவுகளும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இவரது சாமானியனுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தால் பணவீக்கம் அதிகமாகுமா? பணவீக்கம் குறைந்தால் சாமானியனுக்கு என்ன லாபம்?எனும் பதிவு ஒரு எடுத்துக்காட்டுமொழிப்பற்றைக் குறித்த சிறந்த கட்டுரை. அவரவர் மொழியில் பேசி.. படித்துப் பாருங்கள்.

 3. அத்திரியின் தேர்தல் அலசலான தேர்தல் லவ்வுகளும் ,மேரேஜ்களும், டைவர்ஸ்களும்... கட்சி தாவும் அரசியல்வாதிகளின் முகத்தில் அறையும் பதிவு

 4. எனக்கு புள்ளிவிபரங்கள் எப்பொழுதுமே பிடித்தமானது. சொல்லரசனின் இந்திய பொருளாதாரம் சுவிஸ் வங்கியில் பதிவு நன்கு அலசி எடுத்த புதுப்பணம் போன்றது.. கருப்பு பணம் கொண்டவர்கள் இப்பதிவை படிக்கவேண்டாம்.

 5. ஈழப்பதிவுகளை நல்ல அலசல்களோடு அள்ளித்தரும் கமலின் பதிவுகள் எதை எடுப்பது எதை விடுப்பது... புலிகள் அழிந்து விட்டார்களாம் எனும் இவரது அலசல் பதிவு அருமையானது!


பிடித்த சிறுகதைகள் 1. யமுனாவின் மனநோய் சிறந்த எழுத்துக்களால் உருவான உணர்வுள்ள சிறுகதை. யமுனாவின் மனநோய்க்கு அவரது கணவரே மருந்தாக வரும் இப்படைப்பு அகநாழிகையின் கைவண்ணத்தில்...

 2. மருமகள் சம்பாத்தியம் பற்றிய குடும்பநல பதிவு கொடுத்து சூடான இடுகையில் இடம்பெற்றார் நசரேயன். நல்ல நடையில்
  எழுதப்பட்ட சிறுகதை

 3. இன்றைய வலைப்பதிவர் சூழ்நிலை அல்லது இணைய உலாவிகளின் சூழ்நிலையை அழகான மொழிநடையில் சவலை பாஞ்சிடுச்சு
  என்று சொல்லுகிறார் பொன்னாத்தா... ஓ சாரி நிலாவும் அம்மாவும்

 4. ரசனைக்காரி டீச்சர் ராஜேஸ்வரியின் சிறுகதையான முரண்பாடு அவரது இரண்டாவது கதை. பிரமாதமான வடிவமைப்பு


பிடித்த சிரிப்புகள் 1. சர்க்கரை சுரேஷின் அரசு மருத்துவமனையில் கலைஞர், நல்ல காமெடி. தமிழிஷில் 42 ஓட்டுக்களை அள்ளியிருக்கிறது. காமெடியாக இருந்தாலும் அதன் உள்ளர்த்தம் யோசிக்க வைக்கிறது. சிரிக்க, சிந்திக்க...

 2. கவிதையும் சிரிப்புமாக, தத்துவமும் கித்துவமுமாக வாய்விட்டு சிரிக்க வைக்கிறார் அன்பு

 3. நேர்முகத் தேர்வு சிரிப்புகள்... எழுதியவர் ச.முத்துவேல்.

 4. டொக்டர்.எம்.கே.முருகானந்தன் சிரிப்புகளை இம்மார்ச்சில் எழுதியிருக்கிறார். அம்மாவுக்கு கவிதையும் எழுதுகிறார். இவரது சமீபத்திய சிரிப்பு என்னைக் கவர்ந்தது.

பிடித்த பயனுள்ள பதிவுகள்


 1. பணம் குறித்த வரலாறைப் பதிவு செய்யும் அபுஅஃப்ஸர் பதிவின் இறுதியில் மிக அழகான கவிதையொன்றையும் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

 2. Will to Live ரம்யா அவர்கள் எழுதிய என்னைக் கவர்ந்தவர்கள் பதிவில் சிந்தனைகளை தெளித்து எழுதியிருக்கிறார்.. விவேகானந்தரின் வரவேற்புரை அது.

 3. கஜல் குறித்த சிறு அறிமுகத்தோடு சில கவிதைகளை நம்மோடு பகிர்ந்திருக்கிறார் குடந்தைஅன்புமணி

 4. ஹெலன் கெல்லர், ஆன் சல்லிவன், மற்றும் அன்னைத் தெரசா குறித்த சிறுசிறு அறிமுகத்தோடு பிடித்தவர்கள் பதிவில் பதித்திருக்கிறார் அமுதா இவரது கவிதைகளும் நன்றாக இருக்கும்.

 5. கலை-இராகலை நல்ல எழுத்தாளர். அவரது தியானம் குறித்த பதிவு ஒவ்வொரு வாசகருக்கும் பயனுள்ள பதிவாகும். அதை என்னைப்போன்றோரின் வேண்டுகோளின் பெயரில் தொடராக்கி நுணுக்கமாக எழுதிவருகிறார். இலங்கையின் செங்கோல் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை

 6. பொன்னியின் செல்வன் நம்ம கார்த்திகைப் பாண்டியன் நல்ல நடையில் எழுதும் எழுத்தாளர். இவரது விளம்பரங்களை சென்ஸார் செய்யுங்கள் திரி ஹாட். துப்பட்டா அணிவதை நன்கு விளக்குகிறார். ரசனையான மதுரைக்காரர்.

 7. பழமொழிகளில் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார் ராம் C.M

 8. பல பயனுள்ள பதிவுகள் வேத்தியன் எழுதியிருந்தாலும் தமிழ்பற்றின் காரணமோ என்னவோ இசைக்கருவிகள் குறித்த பதிவின் மீது அதீத ஈடுபாடு இம்மாதத்தில்.. NatGeo வின் சிறந்த புகைப்படங்களைப் பார்த்தாலே என் மனமெல்லாம் துள்ளும்.
 9. புதுமணத் தம்பதிக்கு அருமையான டிப்ஸ்... பட்டியல் மன்னர் சுரேஷ் கைவண்ணத்தில்..

பிடித்த அனுபவப் பகிர்வு


 1. காதலுக்கு உதவி செய்து அடிவாங்கிய நசரேயன், நம்ம மாணவர்களையெல்லாம் எச்சரிக்கிறார்... அனுபவம் பேசுது.

 2. இரவீ தமது கேள்வி பதில் பகுதியில் உள்ளத்தைத் திறக்கிறார்... இவரது எழுத்து நடை படிக்க அலாதியானது ஆனால் அதிகம் எழுதுவதில்லை. இவரது புளிப்புமிட்டாய் பகிர்வும் அருமை!!

 3. நம்ம கவின்... போலீஸில் மாட்டிய கதையைப் படித்தால் சிரிப்பு வரும்... சம வயதுக்காரர் நல்ல ரசனையாளர்..

 4. கமலின் ஈழ அனுபவம் அலாதியானது. அவருடைய அம்மம்மா பதிவில் இளமைகாலத்தையும் தான் எவ்வாறெல்லாம் உருப்பெற்று
  வந்தேன் என்பதையும் நல்ல மொழிநடையில் பகிர்கிறார்.

 5. மாதவராஜின் ஒவ்வொரு பதிவும் வாசிக்கவேண்டியவை. நல்ல எழுத்துக்கள், கவிதைகள், அலசல்கள்.... நிறைய எழுதுகிறார்... இவரது கொஞ்சம் ஆங்கிலம், இரண்டு சிரட்டைகள், ஒரு முட்டை பதிவு நல்ல அனுபவப் பகிர்வு (பாகம் 2)

 6. ராம்.CM இன் ஹீ இஸ் கிரேட் பதிவு வெகுவாக கவர்ந்த பதிவுகளில் ஒன்று. நல்ல அனுபவப் பகிர்வு.

கொஞ்சம் பெரியபதிவா போச்சு... அடுத்த முறை ஒரு பதிவருக்கு ஒன்று மட்டுமே கொடுக்கலாம் என்று நினைத்துள்ளேன். (அதுவும் நேரம் கிடைத்தால்தான்) இது ஒரு புது முயற்சி. யாரும் மனம் கோணமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் அதிக ஓட்டு போட்டு இப்பதிவை பல வாசகர்களுக்குக் கொண்டு செல்லவேண்டியது உங்கள் கடமை!!ஞ்சல்கள் வானத்துக்கும் பூமிக்கும் உண்டான தூரத்தை அளந்து கொண்டிருக்கின்றன. அளவிட முடியாத தூரத்தில் வானம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும் வகையில் ஊஞ்சல் அளவைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. வானம் பரப்பியிருக்கும் பகல் சுருண்டு, கீழே விழுகின்ற போதிலும் ஊஞ்சலில் அளப்பது மட்டும் நிறுத்தப்படுவதே இல்லை.

ஊஞ்சலுக்கும் எனக்குமான தொடர்பு ஒரு குறியீடைப் போன்றது. எந்த கேள்வி பதிலுக்கும் அடங்காமல் தனித்து நிற்பது. ஆடி மாதம் ஊஞ்சல் மாதம் எனும் பெயரெடுக்கும் வகையில் பெரிய மரம் உள்ள எல்லோருடைய வீட்டிலும் ஊஞ்சல் தொங்கவிடப்பட்டிருக்கும். என் பழையவீட்டின் முன்னே தனித்து பெருத்து இருக்கும் அந்த பெயர் தெரியா மரத்தின் கிளைகளின் விளிம்பு வரை சென்று ஊஞ்சல் கயிறைக் கட்டியிருக்கிறேன். மரம் ஏறத் தெரிந்தவனுக்கு, ஊஞ்சல் ஆடுவது மட்டும் ஏனோ பயம் இருந்தது. ஊஞ்சலாடும் எல்லைக்கு அப்பால் சென்று வானில் கலந்துவிடுவேனோ என்ற இனம்புரியாத அச்சம் கலந்திருந்தது.
வானுக்குச் சென்றவர்கள் மீளுவதில்லை என்று என் தந்தை சொல்லியிருக்கிறார். வானுக்குச் செல்லும் முன் நம்மை யாவரும் வணங்க வேண்டும் என்ற கோட்பாட்டின் விளைவுகளாக விளைந்த அவ்வார்த்தை என் மனதின் எல்லா துளைகளிலும் அமர்ந்து கொண்டு பயமுறுத்தியது.

எந்த ஆடிப் பொழுதுகளிலும் ஊஞ்சல் கயிற்றில் அமர்ந்ததே இல்லை. ஒருவேளை ஞாபகம் அறியாத வயதில் யாரோ ஒரு பெண்ணின் மடியில் அமர்ந்து ஆடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதே சமயம் அவர்களை உந்தி விடுவது எனக்குப் பிடித்திருந்தது. பெண்கள் இருபுறமும் கயிறைப் பிடித்து தலை சாய்த்து ஆடும் பொழுது குற்றம் செய்யவந்தவனும் கும்பிட்டுச் செல்வான். ஆடி முடிந்ததும் ஆடலும் முடிகிறது. ஊஞ்சல் கயிறுகள் கிணற்றில் தண்ணீர் இறைக்கவும், பரணில் படுத்துறங்கவும் பழகிக் கொண்டன. ஆனால் என்னுடைய நெடுநாள் கேள்விகளும் உள்நிறைந்த மாற்றங்களும் ஊஞ்சல் கயிறினுள்ளும் ஒளிந்திருப்பது அவைகளுக்கு மட்டும்ந்தான் தெரியுமோ என்னவோ?

அந்த பூங்காவினுள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஊஞ்சல்கள் தொங்கிக் கொண்டிருந்தன.அவை நன்கு உறுதியான கம்பிகளால் பிணைக்கப்பட்டு மரப்பலகை பொருத்தப்பட்டு இருந்தன. அவைகளின் இருபுறமும் சாயம் வெளுத்த இரும்புத் தூணை நட்ட வைத்திருந்தார்கள். ஊஞ்சலில் ஆடுபவர்கள் கீழே விழுந்தாலும் காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க, மணலைப் பரப்பியிருந்தார்கள். ஊஞ்சல் நிலையாக இருக்கும் இடத்திற்கு நேர்கீழே மட்டும் உந்துவதால் ஏற்படும் குழி இருந்தது. எங்கள் வீட்டு ஊஞ்சல்களுக்கு அடியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாதது குறித்து நினைத்துக் கொள்வேன்.

ஊஞ்சல்களில் ஆடும் சிறுமிகளையும், அதைத் தள்ளிவிடும் தோழிகளையும் பார்க்கும் பொழுது, அவர்களின் கவலைகள், தொல்லைகள் எல்லாம் எங்கே சென்றன என்று வியப்பு ஏற்படும். ஊஞ்சலாடும் ஆசை என் மனதின் துளையில் எங்கேனும் மிச்சமிருந்ததோ என்னவோ, நானும் ஆடவேண்டும் என்ற ஆசை கொண்டேன். ஊஞ்சலாடும் சிறுமிகளை ரசிப்பது எவ்வளவு இனிமையோ அதனைக் காட்டிலும் இருமடங்கு நாம் ஊஞ்சலாடுவதில் இருக்கும் என்று என் சகோதரிகள் கூறியது நினைவுக்கு வந்தது. நான் மெல்ல அருகே சென்று ஊஞ்சலைத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். வாய்ப்பு கிடைத்தால் நாமும் அமரலாம் என்ற நப்பாசை அதனுள் கலந்திருந்தது.

ஊஞ்சல்கள் எப்படி மனிதனின் மனதைக் கரைத்து இன்பத்தைக் கொண்டு வருகின்றன? சட்டெனும் நாழிகைகளில் குழந்தையாவதற்குண்டான தருணத்தை அதனால் எப்படி ஏற்படுத்தித் தரமுடிகிறது? பருவ மங்கைகளின் வாழ்வில் இடையிறாது கலந்துவிட்ட ஊஞ்சல்கள் வானம் தொடும் பொழுதெல்லாம் வசப்படுத்துகிறதா என்ன?

அன்று அந்த ஊஞ்சல் பெண்ணைப் பார்த்திருக்கவில்லையெனில் நான் இன்று எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. அவள் எப்படி இருந்தாள் என்கிற ஞாபகம் ஏதும் தற்சமயம் என்னிடமில்லை. என் வயதை ஒத்து இருந்தாள். மெல்லிய நிறத்தில் சட்டையும் பாவாடையும் அணிந்திருந்தாள். பார்வை குறைபாட்டினால் கண்ணாடி ஒன்றை அணிந்திருக்கவேண்டும்.. அவளது கண்ணுக்கும் காதுக்கும் இடையே ஆடியின் கால் அழுந்திய தழும்பு இருந்தது. நன்கு சிவந்த முகத்தைக் கொண்ட பேரழகியாக விளங்கினாள். பூங்காக்களில் தேவதைகள் நுழைவது ஒன்றும் முக்கியச் செய்தி அல்ல. ஆனால் பூங்காவினுள் நுழையும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் அது மிக முக்கிய செய்தி.. பருவ வயதினுள் நுழைந்திருந்த என்னை இனக்கவர்ச்சி எனும் மாயை துரத்தியது. அவளை நான் ரசித்துக் கொண்டிருந்தேன். அவளின் புற அழகு என்னை என்னிடமிருந்து பிரித்திருந்தது. வைத்த விழி அவளிடமே இருக்க, அவள் என்னைத் துளியும் பார்க்காதது என் துர்பாக்கியமாகக் கருதினேன்..

எனக்கான ஊஞ்சலாடும் தருணம் வந்தது. ஊஞ்சல் பலகை தேய்ந்து விரிசலுற்றிருந்தது. சிறுமிகளே அதில் அமர்ந்தாடும் பொழுது நாம் வாலிபம் நிறைந்தவன் தானே ஆடுவோமே என்று மெல்ல மெல்ல உந்தி இருபக்கமும் பறந்தேன். கைகள் ஆரம்பத்தில் நடுங்கினாலும் செல்லச் செல்ல அதன் தீவிரம் குறைந்து சகஜமானது. ஊஞ்சல் தரும் இன்பத்தை இத்தனை நாள் நான் ஏன் அனுபவிக்காமலேயே போய்விட்டேன்? காலம் திரும்பிச் சுற்றி, வயதைக் குறைக்காதா என்று முதல்முறையாக பேராசை கொண்டேன்..அந்த பெண்ணின் அழகை விட, ஊஞ்சல் தந்த இன்பம் என்னைக் குதூகலிக்கச் செய்தது. கிட்டத்தட்ட அதுதான் எனது முதல் அனுபவம் என்றும் கூறிவிட முடியாது. அந்த ஊஞ்சல் பெண் நான் ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சலை நோக்கி வந்தாள். அவள் கண்களில் இருந்த மிரட்சியும் என் பருவ தாகமும் இணைந்து கொண்டன. ஊஞ்சல் கயிறின் அலைவேகம் குறைந்து கொண்டே போனது. என்னருகே வந்தவள், சட்டென்று என்னை இழுத்து மணலுக்குள் தள்ளினாள்.. பரப்பியிருந்த மணலுக்குள் விழுந்தபடியால் எனக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.. எந்த வித கட்டுப்பாடுமில்லாமல் பறக்கும் பறவையைப் போன்று அவள் ஊஞ்சலில் ஆடத் துவங்கினாள்.

அவளது செய்கை எனக்கு வியப்பைத் தந்தாலும் என்னால் வேறேதும் யோசிக்க முடியவில்லை,... ஒருவேளை வாலிபர்கள் ஊஞ்சலாடக்கூடாதோ என்ற எண்ணம் சட்டென்று வந்தது.. என் வயதொத்த அவள் ஆடும் பொழுது ஏன் அந்த உரிமை ஆணுக்கு இருக்கக் கூடாது? என்றாலும் அவள் ஆடும் அழகை ரசித்துக் கொண்டு அருகே உள்ள மரத்தினில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தேன். அவளது ஆட்டத்தினில் என் கண்கள் அவளது கிழிந்த சட்டையின்மேல் தன் பார்வையை செலுத்தியது.

அவளது கையும் மார்பும் இணையும் இடத்தில் மார்பருகே சட்டை கிழிந்திருந்தது. அவள் எப்படி அதை கவனிக்காமல் அணிந்து வந்தாள்.. பெண்களின் முன்னெச்சரிக்கைகளைக் கண்டு நான் பலமுறை வியந்ததுண்டு. அதிலும் மானம் என்பது பெண்களுக்கு மட்டுமே உயிருக்கும் மேலானதாக கருதி வந்தேன். அவள் ஏன் தெரியாமல் அதை அணிந்திருக்கவேண்டும்?/

அந்த பெண்ணின் தந்தை ஊஞ்சல் மரத்தினருகே வந்தார். இத்தனை நேரம் எங்கிருந்தாரோ தெரியவில்லை ; தன் பெண்ணின் நிலையைக் கண்டவரைப் போன்று அவளை ஊஞ்சலாடுவதிலிருந்து நிறுத்தி விடாப்பிடியாக அழைத்துச் சென்றார். அவர் தன் மகளின் கிழிந்த ஆடையை கவனித்திருக்கலாம்... ஆனால் அதை சரிசெய்ய அவரால் ஏனோ எதையும் செய்யமுடியவில்லை. தந்தை மகள் போராட்டத்தினிடையே எனக்கு உரைத்தது, அப்பெண்ணுக்கு மனநிலை சரியில்லாமல் இருக்கிறது என்பது. அதுகூட யூகம் தான் என்றாலும் அவளின் நடத்தை, வயது, அலட்சியம் ஆகியவற்றைக் கவனிக்கும் பொழுது அந்த முடிவுக்கு வந்தேன்..

மெதுவாக என் பாதங்கள் ஊஞ்சல் மரம் விட்டு விலகத் தொடங்கின. எனது குற்ற உணர்ச்சி முற்களாக அலங்கரிக்கப்பட்டு என்னைச் சுற்றிலும் குத்திக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு இருந்தது. நான் ஏன் அவளிடம் போய் உன் ஆடை கிழிந்திருக்கிறது என்று சொல்லவில்லை.... அல்லது நான் சொல்ல விரும்பாமல் ரசிக்கத் தூண்டப்பட்டேனா.. அறியாமை உண்டாக்குவதைக் காட்டிலும் அறியாமையை அறிந்தும் உதாசீனப்படுத்துவதே தவறு என்பது எனக்கு ஏனோ புரியவில்லை.
தூரத்தில் அப்பெண் அழுதுகொண்டே அவள் தந்தையின் பின்னால் செல்வது தெரிந்தது நான் யாருடைய முகத்திலும் விழிப்பதற்கில்லை என்று வேகமாக பூங்காவை விட்டு வெளியேறினேன்.. அதன் பிறகு அப்பெண்ணை நான் பார்க்கவே இல்லை. அப்பெண் தற்போது குணமாகியிருப்பாளா.. அல்லது என்னைப் போன்றே யாரையும் தள்ளிவிடுவாளா... யாருக்கேனும் கிழிந்த ஆடையைக் காட்டி காமத்தை உமிழச் செய்வாளா..
பூங்காவை விட்டு வெளியே வந்தபின்னர் ஊஞ்சல்மரத்தைத் திரும்பிப் பார்த்தேன்.. அப்பொழுது சிறுமிகள் ஆடிக் கொண்டிருந்தார்கள் வானுக்கும் மண்ணுக்குமாய்...

பிகு : இந்நிகழ்ச்சி நடந்து சுமார் ஏழெட்டு வருடங்கள் இருக்கலாம்.. அதன் விளைவை எனது பூலோகக் காவியர்கள் எனும் கவிதையில் அப்பெண்ணின் நிலையிலிருந்து எழுதியிருந்தது நம் வலை நண்பர்களுக்கு நினைவுக்கு வரலாம்..

25.3.09

பழைய புத்தகம்

|மீண்டும் ஜெஸிகாவை பின் தொடருகிறேன். ஜெஸியைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுபவர்கள், தெரிந்துகொள்ளாமலே இருப்பதுதான் நல்லது. ஒருமுறை நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே, அதை அளவில் அளக்கமுடியாது ;

பனி மயக்கும் மார்கழி கோலங்களைச் சிதைத்தவாறே வண்டியை நிறுத்தி, அவசராவசரமாக என் அறைக்குள் நுழைந்தேன்.. ஏன் என்கிறீர்களா?, 'அவளை' பார்த்தேன்.. அவளா? அவள் யார் என்று கேட்கிறீர்களா?, இப்போது சொல்லமாட்டேன், இந்த விசயம் ஜெஸிகாவுக்குத் தெரியாது. தெரிந்தால் அவள் பத்ரகாளி ஆகிவிடுவாள். சரி விட்ட இடத்தில் தொடருகிறேன், அவள் என்னிடம் கொடுத்து வைத்திருந்த ஒரு பழைய நோட்டு என் அறையின் வலது மூலையில்.... ஆங்.. இல்லையில்லை, இடது மூலையில் தேமேயென்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரும்பு அலமாரியில் ஜெஸியின் புடவைகளுக்கு மத்தியில் இருக்கிறது..

என்ன தைரியம்? 'அவளுடைய' புத்தகம் ஜெஸியின் புடவைகளுக்கு மத்தியில் இருந்தால் ஜெஸி கவனிக்காமல் இருக்கமாட்டாளா... ம்ஹூம்.... இப்பொழுதெல்லாம் அதிகம் ஜீன்ஸ் டாப்ஸ் அணிவதால் எப்போதாவது உடுத்தும் புடவைகளுக்கு மத்தியில் வைப்பதுதான் பிரச்சனை இல்லாதது.. மேலும் அவள் உடுத்தும் புடவை எது என்று தேர்ந்தெடுப்பதும் நானே!! நூறுசத பாதுகாப்பு..

திரும்பவும் விட்ட இடத்திற்கு வருகிறேன். அந்த பழைய நோட்டில் அவள் எனக்காக எழுதிக் கொடுத்த கவிதைகள் இருந்தது.. கவிதைகள் என்பது சாதாரணமானவை அல்ல, அவை மறைந்து போயிருந்த ஞாபகக் கிடங்கை திறக்க வல்லவை. ஒரு கவிதை படித்தால், தலைசுற்றும், இன்னொன்று, மூக்கு சிவக்கும், அட, இன்னொன்று சிரிக்க வைக்கும். அவள் பல பரிமாணங்கள் தொட்டு எழுதக் கூடியவள்.

திடீரென்று படித்துக் கொண்டிருக்கும்பொழுதே, ஜெஸியும் வந்துவிட்டாள்.. என்ன செய்வது?? சிறிது நேரம் என்னை நான் அவளிடம் தொலைத்துக் கொண்டிருக்கும் பொழுது, என்னிடம் தொலைந்தவள் என்னைத் தொலைக்க வந்தாள். சட்டென்று மூடிய அந்த பழைய புத்தகத்தை கவனிக்காமல், என்மீது ஒரு கிறங்கப் பார்வை வீசிவிட்டு, இடைவெளியேதுமின்றி தழுவினாள்.. அவள் மந்தகார தழுவலில் அந்த பழைய நோட்டு நொறுங்கிப் போயிருந்தது...


இனி, இக்கதை பற்றிய என் கருத்து அல்லது கவிதை :

வெளிக்காட்டாமல் அடங்கியிருந்த
மெளனப்படலத்தைக் கிழித்து
நீர்த் திரை கோர்த்து
எனக்குள்ளான வாயிலில்
காத்துக்கிடந்தது
உன் பழைய கவிதைகள்

நீண்டும் குறுகியுமிருந்த
அதன் வடிவங்களையும்
படிம விவாதங்களைத் தாங்கி நிற்கும்
வார்த்தையினடி கோடுகளையும்
என்னுள் அடர்ந்து வளர்ந்திருந்த
மொழியை சுண்டியெழுப்பியது

பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று

நான் என்ற தொடர்பு முதல்
கண்ணீர் என்ற முடிவு வரையிலும்
அங்குல அங்குலமாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது
கவிதை எனும் பலகையினூடு

ஒற்றைச் சாளர வழிதிறந்து
அறை நிரப்பிய காற்றாய்
அருகிருந்த மனைவி என்னை
இருக்கினாள்

தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது.


மேக விசும்பலால்
கண்ணயற, கடைவானைப் பார்த்தேன்.
துருத்திய மூக்கின் நுனி
குருதி பட்டு சிவந்தது

இடி மீறும் குண்டொலியால்
செவிபிளந்து ஊன் கதறியது
நீல வானக் கதிர்கள் நுழையவொண்ணா
கதிரலைகள் மேவிக் கொண்டிருந்தது.

"ஏ! கடவுளே!
பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும்
அண்ட மீன்களை ஒருமுறை
இவ்வேழை நோக்கவியலாதா?
நாளுமோர் மீன் முளையும்
நானும் போய் நுழையவியலாதா?"

நீட்டிய உயிர்க்கிளை மீதொரு
நாட்டிய விழி புதைய
விண்ணுலகன் நாவில் பிரிந்து
எச்சில் ஊறியது என்னுள்
செவிப் பறைகள் அறைந்து கொண்டது.
செல்க! செல்க! மானிடனே செல்கவே!

புவிக் கோளம் தாண்டி
அக்கினியில்லா மீன்களைத்
துண்டிக்கச் சென்றேன்
என்னில்லப் புறாவின் சிறகெடுத்து.
சாந்தமில்லா மீன்கள் வீணிலெதற்கு?

"மூளை சிறுத்த ஆறறிவுயிர்
ஈங்கில்லை மானிட!
உயிர் முளைத்தால் நாளை வருக,
அன்றி, இன்று போ" வென்றது அது.

பிரபஞ்ச மூலை வரை
நானறிந்தேன் புற்களுமில்லை
மூச்சிறைத்தே உயிர் கொல்லும்
மானிடனுமில்லை யென
இல்லம் திரும்புகையில்,
அதற்குள்
உருக்குலைந்து ஒழுகிக் கொண்டிருந்தது
புவிப்பந்து.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், தொடர் கவிதைகளைப் போன்று பல காமக் கவிதைகள் எழுதி வந்தேன். பிறகு இரண்டு வருடங்கள் அப்படி ஏதும் எழுதவில்லை...அவற்றுள் பல என் பால்ய கவிதைக் காலங்களில் குறும்பாக எழுதியது!!

இப்பொழுது அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறேன். யாரும் முகம் சுளிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

மேல் நோக்கிப் பார்க்கும்
எனது இடுப்பிலிருந்து கீழாய்
துலாவி, என்னுயிரினில்
இடுகிறாய்
என் கண்களும் காணாத
உன்னுயிரை!
காலக்கெடுவினில்
வலியோடு பிடுங்கியெடுக்கிறாய்
நீயிட்ட நம்முயிரை..

---------------------------------------------------------------------

உனக்கு கூடல்
தெரியாதெனில்
ஊடல் புரிந்துவிடு
உன்னை!

---------------------------------------------------------------------

வீதியிலே தேவர்கள் கூட்டம்
திண்டாடும் ரம்பைகள்
பாதியிலே எழுந்துவர
மனமில்லாத அர்ச்சுனர்கள்;
கையிலே பூமாலை;
காதிலே காதல் சொற்கள்;
நெஞ்சிலே வஞ்சமுண்டு
தேவர்கள் போல் தெரிகிறார்கள்
தேடி அலைபவர்கள்..
---------------------------------------------------------------------

தவித்துப் போயிருந்த என்
இதயத்தை எடுத்து
வலிக்காமல் எச்சப்படுத்தி
வேறிடத்தில் வைத்துவிட்டாய்
இன்னொரு இதயம்
உதயமாக!!
---------------------------------------------------------------------

என் ஒவ்வொரு காகிதங்களும்
உனக்காக கவிதை எழுதி
வீணாகவே போகின்றன.
விழும்போது அவை
உன் பெயரையோ அல்லது
உன் இரவையோ நினைவு படுத்தாது
போவதில்லை
---------------------------------------------------------------------

இரவு நேரப் பனியில்
இதயம் தாலாட்டும்
இன்னிலவோடும்
இதழோரப் புன்னகையோடும்
இவளுடன்
இருந்தேன்
இனிமையாக..
---------------------------------------------------------------------

விடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு
விடிந்தபின்
எழவே! சீ! தள்ளி நில்லு...
மிதமான பனியில் காலைப்பொழுதில் தென்னங் கீற்றின் சலசலப்பினால் ஏற்படும் காற்று, சாளரங்கள் வழியே உள்நுழைய, சுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித எண்ணங்கள் தோன்றுவதை நம்மால் ஒத்துக் கொள்ளாமல் இருக்கமுடியாது. அத்தனை சுகம், அத்தனை சுவாரசியம் அதில் அடங்கியிருக்கிறது.,, சாளரங்களின் துளை வழியே ஒவ்வொரு காதலும் தன் கணைகளை வீசிக் கொண்டு இருக்கிறது. அது பனி ஊடுறுவி நிலம் துளைப்பது போல சாளரங்களடிக் காதலரிடையே கலந்து உறவாடுகிறது,

ஒரு மழைக்காலத்தில் உருவானதுதான் செல்வாவின் காதல், என் வீட்டுக்கு எதிரே உள்ள ஒரு மாடியில் மேற்பகுதியில் வாடகைக்கு இருந்தவர். தென் தமிழகத்துக் காரர். அவரது பேச்சு, வட்டாரத்திச் சுண்டி இழுத்து வருவதால் அவருடன் பேசுவதே தனி சுகமாக இருக்கும். வேலைக்காக திருப்பூர் வந்தவர், தனியே தங்கியிருந்தார். அவரது அறை புத்தகங்களால் ஆனது, ஒவ்வொரு செங்கற்களுக்கிடையே ஒரு புத்தகம் தன்னை நெருக்கிக் கொண்டு நின்றிருக்கும், அப்படியொரு புத்தகப் பிரியர். எனக்கு ஓய்வு நேரம் அல்லது வேலையில்லாத பொழுதுகளை அவரது மாடியில்தான் போக்குவேன். புத்தகங்கள் இரைந்து கிடப்பதால், அவர் தற்சமயம் என்ன புத்தகம் படிக்கிறார் என்ற குழப்பம் எனக்கு நேரிடும். கிழக்கு திசையில் இருக்கும் சாளரம் தான் அவரது காதலுக்கான அச்சாணியாக இருந்தது. அது எந்நேரம் திறந்த நிலையிலேயே இருக்கும். அவர் அதை மூடி எந்நாளும் நான் பார்த்ததில்லை. ஐந்தாறு கம்பிகள் செறுகப்பட்டு கண்ணாடி போர்த்தியிருக்கும் அச்சாளரம் அப்படியொன்றும் அலங்காரத்திற்கு உகந்ததாக இல்லை. எப்பொழுதும் கண்ணாடிகள் வெளிப்புறம் திறக்கப்பட்டு இருக்கும்.
சாளரத்தினடி உள்ள மேசையில் முட்டியை ஊன்றியவாறே அவர் புத்தகத்தில் தன்னை இழுத்து நிறைத்திருப்பார். அவரது கண்கள் புத்தகத்தினடி செல்கிறதா அல்லது அந்த சாளரத்தில் அமர்ந்திருக்கிறதா என்ற சந்தேகம் எனக்குள் வலுக்கும். மேகம் இருண்டு மழை பெய்தால் சாரல் தெரிக்காதபடி சாளரத்தின் வெளியே சிமெண்ட் கூரை வேய்ந்திருந்தார்கள். வலுத்து மழைபெய்தால் மட்டுமே சாளரக்கண்ணாடிகள் நீர் ஒழுக்கிக் கொண்டு அழும்.. கூடவே செல்வாவும் அழுவார். அவரது அந்த மழைச் சோகம் என்னை நெடுநாட்கள் உறுத்திக் கொண்டிருந்ததன் விளைவுதான் அவர் சாளரங்கள் வழி காதலை நுழைத்து காதல் பெற்றார் என்ற விபரம் அறிந்து கொள்ள ஏதுவாயிற்று.

சாளரங்களின் வழி உள்நுழையும் காற்றினுள் எதிர் வீட்டு காதலியின் காதல் உள்ளடங்கி நெளிந்து கொண்டிருக்கும் என்பதை அறிந்து கொண்ட பிறகு, செல்வா, சாளரத்தினடி அமரும்பொழுதெல்லாம் நான் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்.. அவர் காற்றை சுவாசிக்கும் பொழுதெல்லாம் அவரது ரோமங்கள் எழுந்தாடுவதை பலநாட்கள் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள், எதிரெதிர் சாளரங்கள் உள்ள வீடுகளில், காதல் முளைத்தால், அருகருகே மேசை இருக்கும், மேசையின் மீதோ, அல்லது சாளரத்தின் வெளிப்புறத்திலோ ஒரு பூந்தொட்டியும் இருக்கலாம். செல்வா சற்று வித்தியாசமான பிறவி, அவர் தனக்குப் பிடித்தமான புத்தகங்களை அடுக்கி, அதன் மேல் கண்ணாடிக் குடுவையொன்றில் செயற்கை ரோஜா செடியை நட்டு வைத்திருந்தார். அச்செடியின் மேலே ஆங்கிலத்தில் காதல் என்று எழுதியிருந்தது. மேற்புறத்திலிருந்து குண்டு ஒளிஉமிழ் தொங்கிக் கொண்டு இரவு நேரத்தில் மஞ்சள் நிற வெளிச்சத்தை கக்குவதற்காக காத்திருக்கும். செல்வாவின் அறைக்கு அவ்வளவாக இரவில் சென்றது கிடையாது.

செல்வாவின் காதலியை இதுவரையிலும் நான் பார்த்ததில்லை. பார்க்கவேண்டும் என்று முயற்சித்ததுமில்லை, அல்லது அவர் எனக்குக் காண்பிக்கவேண்டும் என்ற ஆர்வப்பட்டதுமில்லை. அவர் தன்னை புத்தகத்தில் நுழைக்கும் பொழுது, நான் பேசுவதையோ, கேட்பதையோ அவ்வளவாக உணரமாட்டார். நானாக சென்று ஏதேனும் தமிழ் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் எனது வாசிப்பின் வட்டம் திகில் நாவல்கள், ராணி, குமுதம், விகடன் என்று சுற்றிக் கொண்டிருந்தது. செல்வாவோ, நன்கு படித்திருந்தமையால் ஆங்கில புத்தகங்களை அதிகம் நிறைத்திருந்தார். எனக்குப் பலமுறை அவரிடம் கேட்கவேண்டும் என்ற தோணுதல் இருந்தாலும் அவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தினுள் என்னை நுழைப்பது அவ்வளவு சரியா என்ற நோக்கில் எந்த கேள்வியும் கேட்காமலேயே நகர்ந்து கொள்வேன்.

நாட்கள் பிரிந்து சென்றன. நாங்கள் வீட்டைக் வெறுமையாக்கி, புதுமனைக்குப் புகுந்தோம். செல்வாவின் சாளரத்தை இறுதியாக எட்டிப் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவரது மாடிக்குச் சென்றேன். வழமைபோல எனக்கு வரவேற்பு இருந்தது.. செல்வா சமைத்துக் கொண்டிருந்தார். அவரது சாளரக் கதவு மூடியிருந்தது. சாளரக் கம்பிகளின் வழியே காதல் வெளிப்புறச் சுவரில் மோதி விழுந்திருக்கலாம். அவரிடம், "ஏன் இன்னைக்கு ஜன்னல் மூடியிருக்கு" என்றேன். அவர் சிரித்தார். அந்த சிரிப்பில் பல உள்ளர்த்தங்கள் இருந்தன. அவரது காதல் தோல்வியில் முடிந்திருக்கலாம். அல்லது அது ஒருபக்க காதலாக மலர்ந்து மடிந்திருக்கலாம் என்ற எண்ணம் என்னுள் உதித்தது. என் அம்மா கீழிருந்து அழைத்தமையால் பிறிதொருநாள் பேசிக் கொள்ளலாம் என்ற உறுதியில் அவரிடம் விடைபெற்றேன்.

செல்வாவை அன்றுதான் கடைசியாகப் பார்த்தது என்று சொல்லமுடியாது. ஒரு புழுதிக்காலத்தில் நன்கு சவரம் செய்யப்பட்ட முகத்தோடு அவரைப் ஒருநாள் பார்க்க நேர்ந்தது. என்னை அடையாளம் காணமுடியாதவராகவோ, அல்லது மறந்து போனவராகவோ நகர்ந்து சென்றார். அவரின் அந்நடத்தை எனக்கு வியப்பைக் காட்டினாலும், நானாகவே சென்று அவரிடம் குசலம் விசாரித்தேன்.. அவர் தயங்கினாலும் அதைப் புரிந்து கொள்ள முடியாதவனாக தேநீர் கடைக்கு அழைத்துச் சென்றேன். அவரின் கால்கள் இழுத்து வரப்பட்டது போன்று என் மந்திர வார்த்தைகளுக்கு மயங்கி நடந்து வந்தது. ஆவலாக, அவரிடம் சாளரக் காதல் பற்றி கேட்டேன். முன்னொருமுறை கேட்டதைப் போன்றே புன்னகை ஒன்றை உதிர்த்தார். 'சும்மா சொல்லுங்க' என்று ஆர்வத்தில் உசுப்பினேன்.... அவர் புன்னகை ஒன்றையே பதிலாக சொல்லிவிட்டு என்னை விட்டு நீங்கினார். அவர் அடுத்த நாள் ஊருக்குப் போவதாகச் சொன்னார்.

வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதே இல்லை. நானும் செல்வாவின் எதிர் சாளரத்து வீட்டில் யார் இருந்திருப்பார்கள் என்று இதுநாள் வரை நான் ஏன் யோசிக்கவில்லை? எனது மட்டிய புத்தி செல்வாவை இறுதியாகச் சந்தித்தபொழுதும் நினைக்கவுமில்லை.. நான் பெருத்த ஏமாற்றத்தோடு புதுவீட்டுக்குத் திரும்பினேன்..

எனது புதுமனை மற்றெம்மனையைக் காட்டிலும் வித்தியாசமானது. மேற்புறத்தில் மாடி இருந்ததால் வெயில்கால ஆரம்பங்களில் சித்திரைக் குளிரை அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டியது. என் மஞ்சத்தின் அருகே எவருமில்லை, வானம் மட்டுமே என்னுடன் பேசத் தயாராக தன்னை மினுக்கிக் கொண்டிருந்தது. சாளரங்கள் உண்டாக்கிய சுவாரசியம் இன்னும் தீராத நிலையில், நட்சத்திரங்கள் சாளரத் துளைகளாக மாறின. வானம் சாளரமானது. சட்டென்று கண்மூடினேன். ஒரு நொடியில் செல்வாவும் முகம் தெரியாத அவரின் காதலியும் சாளரச் சட்டத்தினுள் வந்து போனார்கள்.

17.3.09

பூச்சாண்டிகள்

|


இரவு துளிர்க்கும் நேரங்களில்
அகோரி இசை மீட்டும்
இருளின் நிழலில்
பூச்சாண்டிகள் ஒளிந்திருக்கிறார்கள்

அரூப விக்கிரகங்களாகவோ
வளைந்தாடும் வாயுக்களாகவோ
சூழ்ந்திருக்கும் இருளின் புதல்வர்களாகவோ
வேறு எந்த வடிவிலேனும் இருக்கலாம்
பூச்சாண்டிகளின் வடிவம் குறித்து
இதுவரை யாரும் எழுதியதில்லை

சப்தநொடிகள் அடங்கி
கும்மிருள் மெல்ல அகலும் ஒலியினுள்ளில்
பூச்சாண்டிகள் பாடிக் கொண்டிருக்கலாம்
கேட்பதற்கு யாருமில்லாமல் போகலாம்
ஆனால் அச்ச ராகதாளங்களைத் தவிர
அவர்களுக்கு வேறேதும் தெரியவாய்ப்பில்லை

பூச்சாண்டிகள்
நம்மை ஒன்றும் செய்வதில்லை
அவர்களின் அரூபம் கண்டுதான்
நாம் பயம் உறுகிறோம்
அல்லது பயம் உறுத்துகிறோம்

உள்ளமுங்கி, நீண்டு நெளிந்து கிடக்கும்
கண்கள், மூக்கு, வாயென
யார் முகத்தை நீட்டியும்
இனியெப்பொழுதும்
பூச்சாண்டியாகச் சொல்லாதீர்கள்

அவர்கள் அதற்குத் தகுதியானவரல்லர்..


நேற்று இரவு என் மகள் எலெக்ட்ரா பிறந்தாள். அலுவலக விடுப்பை வீடியோ கன்பெரன்ஸில் சொல்லிவிட்டு நேரே மருத்துவமனைக்குச் சென்றேன். ஜெஸி எனக்காகக் காத்திருந்தாள். எலக்ட்ரா பார்ப்பதற்கு ஜெஸியைப் போலவே இருந்தாள். அதே முல்லைக் கண்கள். குடைமிளகாயைப் போல மூக்கு. அழகான கழுத்து, செர்ரி பழத்தைப் போன்ற சிவப்பான உதடு... அடேயப்பா.. ஜெஸியைக் கூட இப்படித்தான் வருணிப்பேன். அந்த வர்ணிப்பே குழந்தையாகப் பிறந்ததில் சந்தோசம் எனக்கு...

இருவரும் மருத்துவமனையை விட்டு காரில் ஏறினோம். ஜெஸி, தனக்கு தலைவலிப்பதாகச் சொன்னாள்... இரவு கண்முழித்துக் கிடந்ததில் தலைவலியாக இருக்கும்.. மாத்திரை விழுங்கினால் சரியாகிவிடும்... நேற்றுதானே குழந்தை பிறந்தது... டாக்டர்கள் அறிவுரைப்படி ஒருநாளாவது இருக்கவேண்டும். என்னைக் கேட்டால், குழந்தை பிறந்ததும் வீட்டுக்கு வந்திடலாம். இன்னும் டாக்டர்கள் பணம் கறப்பது போனபாடில்லை.

சாலையில் ட்ராஃபிக் அதிகமில்லை. எப்போதாவது சில ரோபோட்டுகள் மட்டும் மண்டை குழம்பிப் போய் மோதிக்கொள்ளும்போது ட்ராஃபிக் நேர்வதுண்டு. சென்னையின் மத்திய சாலைகள் இப்படி ஹாயாக இருப்பதே தனி வித்தியாசம்தான். என் தாத்தா காலத்தில், ஒரே மனிதத் தலைகள் தான் தெரியுமாம். எப்போது பார்த்தாலும் அழுக்குகள், குப்பைகள் இத்யாதி இத்யாதி... ஒரே கலீஜ் என்றூ சொல்வார்.. நல்லவேளை நான் இந்த காலகட்டத்தில் பிறந்து தொலைத்தேன்...

ஜெஸி, மின் காகிதத்தை தட்டச்சிக் கொண்டிருந்தாள். அவளிடம் . " என்ன ஜெஸி, குழந்தை பிறந்திருக்கா, ட்ரீட் இல்லையா? " என்று வினவினேன்.. " டார்லிங், எனக்கு ரெஸ்ட் எடுக்கணும். ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப் மி. மெடிக்கல் செலவு எல்லாம் இந்த பேப்பர்ல இருக்கு. செக் பண்ணுங்க.. நான் தூங்கறேன்... " என்று மடமடவென சொல்லிவிட்டு காரின் பின்புறத் தொட்டிலில் குழந்தையைப் போட்டுவிட்டு, இருக்கையை இறக்கி தூங்க முயற்சித்தாள்... நான் புன்னகைத்தவாறே வண்டியைச் செலுத்தினேன்.

எனக்கும் ஜெஸிக்கும் பெற்றோர்கள் நிச்சயித்தபடிதான் திருமணம் நடந்தது. ஜெஸி ஒரு எலக்ட்ரானிக்ஸ் அலுவலகத்தில் வரவேற்பாளினியாக இருந்தாள். பெரும்பாலும் அந்தக் கம்பனியின் க்ளைய்ண்டுகள் ரோபோக்களையோ அல்லது ப்ளேட் எனச் சொல்லப்படும் காமிரா பொருந்திய ரோபோக்களையோதான் அனுப்பி வைப்பார்கள். ஆதலால் மனித முகத்தைப் பார்ப்பதே அவளுக்கு அரிதாக இருக்கும். தற்செயலாக அவளது அலுவலகத்திற்கு நான் சென்றேன். எனது வருகையை அவள் உன்னிப்பாக கவனித்தாள். அந்த எலக்ட்ரோ கம்பனியில் ஒரு சின்ன வேலைக்காக வந்திருந்தேன். பொதுவாக நான் நானோ கம்பனிகளை மட்டுமே நாடுவது வழக்கம். எனது தொழில் அனைத்து நானோ டெக்னாலஜியை மட்டுமே சார்ந்திருந்தது. ஆனால் எனது நண்பன் ஒரு உதவிக்காக அழைத்திருந்ததால் அங்கே சென்றேன்.. அவள் என்னை வரவழைத்து இருக்கையில் அமர வைத்தாள்...

ஜெஸியை கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு, நேரே நண்பன் ராமின் அலுவலகத்திற்குச் சென்றேன்.. என்னை வரவேற்று அமர வைத்தான். அவன் கேட்டது சிறு உதவிதான்.. மாரடைப்பில் இறந்து போனவர்களுக்கு தற்காலிக, அல்லது நிரந்தரமாக உயிர்கொடுக்கும் ஒரு சிறு எலக்ட்ரானிக் சம்பந்தமான முயற்சியில் இறங்கியிருந்தான். " அது ஒண்ணும் பெரிய விசயமில்லை ராம். ஜின்கில் நானோ கார்பன் கோட்டிங் கொடுத்து அதை முழுசா கவர்பண்ணி ஏர் ஹோல்ஸ் விட்டு, அந்த நானோ கார்பனை ஷேக் பண்ணா சார்ஜ் ஆகும்... அது ஜிங்க் மேல பட்டு டிஸ்சார்ஜ் ஆகி அதிலிருந்து ஒரு வயர் மூலமா கரண்ட் பாஸ் பண்ணலாம்.. ஜின்கிலிருந்து ஒரு கனெக்ஸன், கார்பனிலிருந்து ஒரு கனெக்ஸன், ரெண்டையும் மார்புல குத்தி சார்ஜ் ஏத்தினா உயிர் பிழைக்க வைக்கலாம்.... எல்லாம் பயோ பிஸிக்ஸ், பயோ டெக்னாலஜி... தட்ஸ் ஆல். " என்று சொல்லி முடித்தேன்...

எனக்குப் பின்னே ஜெஸி வந்து நின்றாள். உங்க கார் மேல ஹெக்ஸ் கம்பனியோட ரோபோகார் மோதிட்டு குழம்பி நிக்குது. . நீங்க உடனே கான்ஃபிகர் பண்ணா, அந்த ரோபோவை நம்ம கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரலாம்" என்றாள்..... எனக்கு அது ஏழாவது தடவை.. ஏதாவது ஒரு கார் வழுக்கிட்டு வந்திடும்.. நம்ம கார்ல மோதும்.. ஜெஸியைத் தொடர்ந்த வாறு எழுந்து செல்கையில், ராம் மீண்டும் கேட்டான்.. " கதிர், இது ஒத்துவருமா? "

"ராம் நீ ரொம்ப லேட்பா.. இந்த டெக்னாலஜிதான் இப்போ சீப்.. இதுக்குப் பின்னாடி பல மேட்டர் வந்தாச்சி... ஏதோ உன் பட்ஜெட்ல அடங்கட்டுமேன்னு சொன்னேன்.. கவலை விடு, எல்லாம் நாம பார்த்துக்கலாம் "என்று சொல்லிவிட்டு ஜெஸியை நோக்கினேன்...

ஜெஸிக்கு என்னைப் பற்றிக் கேட்கவேண்டுமென்ற ஆவல் பிறந்த தருணம் அது... " உண்மையிலேயே இப்படி பிழைக்கவைக்க முடியுமா சார் ?" என்று கேட்டாள்.. ஜெஸியின் குரல் அவ்வளவு இனிப்பாக இருந்தது.. எப்படி இந்த மாதிரி? ஒரு பொருளை நாக்கு சுவைத்தால் தானே இனிக்கும்?? இங்கே குரலைச் சுவைத்தாலே இனிக்கிறதே!!

" ஹலோ மிஸ்.......?? '

" ஐ ஆம் ஜெஸிகா "

" ஜெஸிகா, இது பழைய மெதட். நீங்க கவலைப்படாதீங்க... இப்ப ஃபைபர் வெச்சு ஹார்ட்ட சார்ஜ் பண்றாங்க.. இன்னும் ஆராய்ச்சி நடக்குது. ஸ்பென்ஸர்ஸ் ஹாஸ்பி போனீங்கன்னா, மலிவு விலைக்கு இதயத்த விக்கிறாங்க... எல்லாம் ஏழைங்களுக்கு........ "

" சார், எங்கப்பாக்கு ரெண்டுதடவ ஹார்ட் அட்டாக் வந்திட்டுது.. அவரை எப்படியாச்சும் நல்லபடியா கொண்டுவரமுடியுமா ?

" வெரி சிம்பிள் ஜெஸி. ஆ.. ஐ ம் சாரி,. உங்களை ஜெஸின்னு கூப்பிட்டுட்டேன்.

" இட்ஸ் ஓகே "

" நீங்க அப்பாவைக் கூட்டிட்டு நேரா நான் சொல்ற ஆஸ்பிடல் போங்க, க்ளீன் செக்கப் பண்ணுவாங்க.. அதிக நேரம் ஆகாது. அப்பவே என்ன ஸ்பேர்ஸ் மாத்தணும்னு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுப்பாங்க. நீங்க அதை எடுத்துட்டு என்னோட செல்லுக்குக் கூப்பிடுங்க... நான் மீதியை அப்பறமா பாத்துக்கீறென்.. " சொல்லிவிட்டு செல் நம்பரைக் கொடுத்தேன்....

" சார் நீங்க எப்படி வீட்டுக்குப் போவீங்க? "

" கவலை வேண்டாம் ஜெஸி.. இதோ பாருங்க ஸ்பெக்ட்ரம். இது வழியா என் வீட்டுக்குள்ள இருக்கிற என் காருக்கு சிக்னல் கொடுத்திடுவேன்.. அது நேரே நான் இருக்கிற இடத்திற்கு வந்திடும்.. அப்படியும் இல்லைன்னா நடராஜாதான்.. எனக்கு நடக்கறதுன்னா ரொம்ப பிடிக்கும்... " சொல்லிவிட்டு சிரித்தேன்..

" சார், நீங்க வேணும்னா என்னோட ஸ்கூட்டரை எடுத்துட்டு போங்களேன்... அப்பறம் நான் எப்படியும் சமாளிச்சுக்குவேன்... "

அவளது இந்தக் கோரிக்கை எனக்குப் பிடித்திருந்தது.. மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பை அவளே வழங்குகிறாள் அல்லவா...

எனக்கும் ஜெஸீக்குமான முதல் சந்திப்பு இப்படித்தான் நிகழ்ந்தது. அவளது அப்பாவுக்கு இருதயக் குழாய்களில் மட்டும் சின்ன அடைப்பாக இருந்தது... அதாவது அது வளரும் சூழ்நிலையில் இருந்தது. அரதப்பழசான ஆஞ்சியோவை விட்டுத்தான் பார்த்தார்கள்... சில டாப்லெட்ஸ், சில செக்கப்புகள், சில ஆலோசனைகள்.... அவ்வளவுதான், ஜெஸியின் அப்பாவுக்கு நல்ல ஆயுள் என்று முத்திரை குத்தி அனுப்பிவிட்டார்கள்.. எனது இந்த உதவிக்குக் கிடைத்த பலன்தான் ஜெஸி.... அம்மாவிடம் கலியாணம் செய்வதாகச் சொன்னேன். ஒத்துக் கொண்டார்கள். இருவரது வீட்டிலும் சம்மதத்திற்குப் பின்னர் ஒரு நல்ல நாளில் நால்வர் புடைசூழ கலியாணம் செய்துகொண்டோம்..

எனது நினைவை கொஞ்சம் அதிக நேரம் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம்தான்... ஜெஸிக்கு எலக்ட்ரா முதல் குழந்தை... ஆஃப் கோர்ஸ், எனக்கும்தான். . சில மாதங்களுக்கு முன் இரண்டு பேருக்கும் பயங்கர போட்டி, எந்த பெயரைக் குழந்தைக்கு வைப்பது என்று.. நான் சொன்னது 'ப்ரோட்டினி' என்பது.. ஆனால் அவளுக்கோ எலக்ட்ரா என்ற பெயர் மீது காதல்.. சரி போனால் போகிறது என்று அவளுக்காக விட்டுக் கொடுத்துவிட்டேன்... என்னதான் சொல்லுங்கள் எலக்ட்ரானைவிட ப்ரோட்டானுக்குத்தானே இன்று அதிக மவுசு...

எனது வீட்டை அடைந்ததும் ஜெஸியை எழுப்பி விட்டேன். குழந்தை இன்னும் தூக்கத்தில்தான் இருந்தது. வீட்டுக்கதவு என் கண்கள் பட்டதும் திறந்துகொண்டது, கதவில் ரெடார் போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதனோடு ஐடெண்டிஃபை என்று ஒரு கருவியும் பொருத்தப்பட்டிருக்கும்.. என் மற்றும் ஜெஸியின் கண்களை இது தானாக ஸ்கேன் செய்து திறக்கும்.. அப்படியும் அதில் கோளாறு ஏற்பட்டால், இரண்டாம் வழியான சாவி உள்ளது...

ஜெஸி நேரே குழந்தையைத் தூக்கிக் கொண்டுபோய் படுக்கையறையில் வாங்கப்பட்டிருந்த தொட்டிலில் கிடத்தினாள்.. அவளைப் பார்த்தவாறே நானும் எனது சட்டைகளைக் கழற்றிப் போட்டு படுத்துத் தூங்கினேன்.... என் வாழ்நாளில் எனக்கு இப்படி ஒரு குழந்தை கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எத்தனையோ டெக்னாலஜிகள் வந்து விட்டாலும் குழந்தை என்ற ஒரு பாசம் நம் மடியில் கிடந்தால்தானே நமக்கு நிம்மதி... அதற்கு முதலில் இந்த டெக்னாலஜிகளுக்கு நன்றி சொல்லவேண்டும்..பின்னே! மிகச் சிறு வயதிலேயே இடுப்புக்குக் கீழே கால் வரையிலும் ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு இன்று செயற்கையாகவே எல்லாவற்றையும் பொறுத்தி வாழும் எனக்கு ஒரு குழந்தை, கிடைக்கிறது என்றால் சும்மாவா?

------------------------------------
தமிழ்மணம் ஓட்டுப்பெட்டி

மந்தைவெளிக்கு அருகே
மங்கை ஒருத்தி இருக்காளாம்.
மச்சமுள்ளவனைத் தொட்டு
பிச்சை போடுவாளாம்
வாருங்களடா செல்லுவோம்.

கையில் ஊறித் திளைக்கிறது
பெற்றவனின் வியர்வைகள்.
இன்னுமென்ன சேஷ்டைகள்?
துண்டு சிகரெட் ஒன்று எடு
எரித்துப் பார்ப்போம் குலைகளை.

காக்கிச் சீனி விற்பவன்
இருந்தால் பிடித்து 
நகநுனியில் சிறைபிடி!
கிராமுக்கு மேலே 
பணம் கொடுத்து
நட்சத்திரங்களைப் பிரிப்போம்.

போகும் வழியில் 
பானம் இருந்தால் 
கொஞ்சம் இடுக்கில் வை
அவளோடு ஊற்றிக் கொள்ள..

இன்னுமென்ன உலகில்
திளைத்துக்கொண்டு இருக்கிறது?
தேர்ந்தெடு. விதைப்போம்.

" போகும் வழியில் 
கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"


அது எதற்கு? போதைப் பொருள்..!!
என்னோடு வா, 
கொஞ்சம் காசு, நிறைய சுகம்

காட்டுகிறேன்.

-------------------------------------------------------------------

இந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருந்தால்.. இங்கே சொடுக்குங்கள்..

இந்தக் கவிதை உங்களுக்குப் பிடிக்காமல் போயிருந்தால் இங்கே சொடுக்குங்கள்

thamizmanam.com 

நடாஷாவும் அவளது அம்மாவும்

எப்படியிருக்கும் எனக்கு!!!!!!!

தொலைபேசி எண்ணை மீண்டும் ஒருமுறை சரி பார்த்தேன் ஆமாம்.. அது சென்னை எண்தான். என்னைத் தவிர வேறு யாருக்கும் நடாஷாவைப் பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை. நண்பர்களிடம் யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு உடலெல்லாம் ஒருவித நடுக்கம் உண்டாயிற்று. எங்கள் வீட்டில் இந்த விஷயம் தெரிந்தால் அடி பின்னியெடுத்துவிடுவார்கள்.

சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாகவும் உடனே என்னை வந்து பார்க்கவேண்டும் என்று சொன்னாள். அவளது குரலை முதல்முறையாகக் கேட்டாலும் நான் பேசிய முதல் வெளிநாட்டுக் காரி நடாஷாதான் (அந்த குரல் எப்படியிருக்கும் என்று வர்ணிக்க இப்பொழுது நினைவிலில்லை.) எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீ இருக்கும் இடத்திற்கும் எனக்கும் ஐநூறு கி.மீ தூரம்.. ஆதலால் கோவை வந்துவிடு என்று சொன்னேன்.. அதை புரியவைக்க நான் பட்ட பாடு இருக்கே... அதை நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அடுத்தநாள் சனிக்கிழமை. எப்போது தொலைப்பேசியை பேசிவிட்டு வைத்தேனோ அப்போதிருந்தே அதன் அருகில் அமர்ந்து கொண்டேன். பின்னே.. என் அம்மா எடுத்துவிட்டால்?? (அம்மாவுக்கு இங்கிலிஷ் தெரியாதுங்கறது வேற விஷயம்) நேராக கோவைக்கு வந்தவள் அங்கேயும் ஒரு விடுதி (ஹோட்டல்) எடுத்து தங்கியிருந்தாள். வந்ததும் எனக்கு போன்.. உங்க ஊருக்கே வந்தாச்சு, சீக்கிரம் வா என்று.. (என்னோட திருமுகத்தைப் பார்க்கணும்னு அவ்வளவு அவசரம்) அடித்துப் பிடித்து பேருந்து ஏறி கோவைக்குக் கிளம்பினேன். அவள் முகவரி கொடுத்திருந்த அதே ஹோட்டலுக்கு..

மனதெல்லாம் பக் பக் என்று அடித்துக் கொண்டே இருந்தது. தொண்டை அடைத்துக் கொண்டது. அவள் பேசிய முதல் நாளிலிருந்து நடுக்கமோ நடுக்கம் அப்படியொரு நடுக்கம்.. தேவையில்லாமல் அரட்டை அடித்து மாட்டிக் கொண்டேனே... என்னை ஏமாற்றிவிட்டான் என்று இவள் போலிஸில் புகார் கொடுத்துவிட்டால்??

அந்த விடுதியில் வரவேற்பாளினியிடம், நடாஷா ஃப்ரம் ரஷ்யா என்று விசாரித்து அந்த அறைக்குச் சென்றேன்.... நண்பர்களே... நீங்கள் அந்த சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். எனக்கு அப்ப்டியொன்றும் பெரிய வயதில்லை. பக்குவமும் இல்லை.. அறையைத் திறந்தாள்...

எனக்காகவே காத்திருந்தவளைப் போன்று என்னை அடையாளம் கண்டு கொண்டாள். எனக்கோ பெருத்த சங்கடம்.. ஒரே அறை, இளைஞன் இளைஞி யாராவது தவறாக எண்ணுவார்கள் என்று... சரி, வந்தது வந்துவிட்டோம்... பேசிவிடுவோம்.. நல்ல சிவப்பு பொம்மையைப் போன்று இருந்தாள். முகத்தில் சிறு சிறு வெடிப்புகள்.. என் கண்ணுக்கு நல்ல அழகான பெண்ணாகத்தான் தெரிந்தாள். என்னை வரவேற்த்தாள் (அவர்களது பாஷையில்) மிகச் சரளமாக ஆங்கிலம் பேசினாள். மொழியை லாவகமாக பயன்படுத்துவதைக் கண்டு அரண்டு போய்விட்டேன். ஆனால், நிறைய ஆங்கிலப்படங்கள் பார்த்திருக்கிறேன். இவள் பேசுகிறமாதிரி ஆங்கில வேறு எவரும் பேசியதில்லை.... அவள் பேசியதில் 60 சதம் எனக்குப் புரியவே இல்லை.

அப்படியும் இப்படியும் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படிதான் கேட்டுக் கொண்டாள். (அதுமட்டும் புரிஞ்சது!!) எனக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது... ஏதோ கேஸ்ல என்னை மாட்டிவிட்டு சென்றுவிடுவாளோ என்று மனம் அடித்துக் கொண்டது. சரி... ஏதாவது சொல்லணுமே...

உன்னைத் திருமணம் செய்ய நான் ஒத்துக் கொள்ளுகிறேன் என்று ஒரே போடு போட்டேன்... (நீங்க நினைக்கறமாதிரி இந்த இடத்தில டூயட் இல்லை!!ஹி ஹி) ஒருவழியாக அவளது ஆங்கிலத்திலிருந்து தப்பித்தேன்... அடுத்தது போட்டாள் ஒரு குண்டு!!! 

இப்பொழுதே விடுதியிலிருந்து என் வீட்டுக்கு வருவதாகச் சொன்னாள்.... ஆஹா... வெச்சுட்டாய்யா ஆப்பு என்று வடிவேல் கணக்காக துள்ளிவிட்டேன்... அப்பறமாக வீடு சரியில்லை, பாதை நொள்ளை என்று சாக்கு, என்னை நம்பு (எல்லாரும் சொல்ற வார்த்தை) என்று சொல்லிவிட்டு அவளைப் பற்றி விசாரித்தேன்..

இந்தியா வந்த காரணத்தைச் சொன்னாள்... ஆனால் எனக்கு என்ன சொன்னாள் என்று ஏறவேயில்லை.. தலையைத் தலையை ஆட்டினேன். பயணிகள் விசாவில் (டூரிஸம்) வந்திருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது. யாருடன் வந்திருக்கிறாள் என்ற விபரங்கள் அவள் சொன்னாளா இல்லை சொல்லவில்லையா என்று தெரியவில்லை... ஹி ஹி...

சரி... இன்னும் ஏதாவது குண்டு பாக்கியிருக்கிறதா???

நான் தான் உங்கள் வீட்டுக்கு வரவில்லை... நீயாவது எங்கள் ஊருக்கு வரலாமே என்று கேட்டுத் தொலைந்தாள்.. நல்லவேளையாக, பாஸ்போர்ட் இல்லை அதனால் வரமுடியாது என்று சொன்னேன்.. பிறகு இந்தியா பற்றியும் பார்க்கவேண்டிய தமிழ்நாட்டுக் கோவில்கள் பற்றியும், முக்கியமாக தாஜ்மகால் பற்றியும் கூறி, நேரம் கிடைத்தால் போய் பார் என்றேன்... இப்படியே அன்று சாயங்காலம் முடிந்துவிட்டது... இனியும் இருப்பது ஆபத்து என்று தோன்றியது. நான் அவளிடம் விடைபெற்றூக் கொண்டு விடிவிடுவென ஊருக்குத் திரும்பினேன்.

அவள் சுமார் ஒருமாதம் கழித்து எனக்கு மடல் அனுப்பினாள்... என்னவோ தெரியவில்லை... அந்த மடலில் காதல் குறித்தெல்லாம் எழுதவில்லை... அப்படியே படிப்படியாக காதல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்... (நம்ம மூஞ்சியப் பார்த்துட்டு வேணாம்னு சொல்லியிருப்பா..) எனக்கு பெருத்த நிம்மதியாக இருந்தது. அவளிடமிருந்து மடல் போக்குவரத்து குறைந்தது.. நாளடைவில் நானும் சுத்தமாக நிறுத்திக் கொண்டேன்... யாருக்கும் தெரியாமல் மறைந்து போனது என்னோடு உண்டான அவளின் காதல்.........

அதில் விட்டதுதான்... அரட்டை அடித்தே ஐந்து வருடங்கள் ஆகின்றன. 

சரி.... இப்பொழுது சில துளிகள்..

1. அவளது புகைப்படம் மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கிறது. (முதல் பதிவிலும் இப்பதிவிலும் கொடுத்திருக்கிறேன்)

2. அவள் என்னைவிட வயதில் மூத்தவள்

3. எப்படி, யாருடன் இந்தியா வந்தாள் என்கிற விபரங்கள் எனக்குக் கடைசி வரையிலும் தெரியவில்லை...

4. ஏன் என்னை வேண்டாம் என்று சொன்னாள் என்பதும் புரியவில்லை... 

5. எங்கிருந்தாலும் என்னை முதன்முதலாக காதலித்த நடாஷாவை என்னால் மறக்க முடியவில்லை...

6. துரதிர்ஷ்டவசமாக அவளது கடிதங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. தொடர்ந்தாற் போல் நான்கைந்து மாதங்கள் யாஹூவை உபயோகிக்காததால் அவர்கள் அழித்துவிட்டனர்.

7. யாஹூ அக்கவுண்ட் உபயோகப்படுத்தியே மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.

இந்த அனுபவத்தைப் படித்த அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றி!!!


ரஷ்யநாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் எப்பொழுதுமே ஒரு இணைப்பு உண்டு. அது நாட்டுறவைப் பொறுத்தவரை எப்படியிருக்கும் என்பது தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அது உண்மைதான்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இன்றைப் போல் வலைப்பக்கங்களோ, தமிழ் தளங்களோ எனக்குத் தெரியாத சூழ்நிலை. அப்போதெல்லாம் மெயில்.யாஹூ.காமும் அரட்டை வசதியும்தான் எனக்குப் பிரதானம். அதைவிட்டால் வேறு தளத்திற்குச் செல்லத் தெரியாது. வீட்டில் இணைப்பு இருந்ததால் கசமுசா தளங்களுக்குச் செல்ல வாய்ப்பு இல்லாமல் இருந்தது. பெரும்பாலும் அரட்டைகளில் பெண்கள் முகவரியாக இருந்தால் பேசுவேன். (அப்பல்லாம் கொஞ்சம் ஜொள்ளந்தான்.. இப்ப மட்டும் வாழுதான்னு கவின் கேட்கிறார்.) அல்லாவிடில் முதல் கேள்வி Asl (Age, Sex, Location) பெண்ணாக இருந்தால் மட்டுமே பேசுவது என்ற தீரமான கொள்கையுடன் அரட்டை அடித்த காலம் அது!.. எனக்கு நல்ல பெண் நண்பர்கள் பல நாடுகளில் இருந்தார்கள்.. ரொம்ப பெருமையாக இருந்தது.

அப்படி ஒரு காலசூழ்நிலையில் ஒரு பெண்ணோடு அரட்டை செய்தேன். பெரும்பாலும் எனக்கு அரட்டை அடிக்கும்பொழுது சின்ன சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும், அவர்கள் ஆணா, பெண்ணா இல்லை பெண் வேஷமிட்ட ஆண்களா என்று சந்தேகத்துடந்தான் அரட்டை செய்வேன். அப்பெண் தான் ரஷ்யா நாட்டவள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவள் பெயர் நடாஷா (Natasha) தினமும் இரவில் வருவாள். என்னால் அரட்டைக்கு வரமுடியாவிடில் மின் மடல் அனுப்புவாள். எனக்கு ஆங்கிலம் தற்குறி. தக்கி முக்கி பேசினாலும் யார் பேசுவதையும் நன்கு புரிந்து கொள்வேன். அவளுக்கு சரிக்கு சமானமாக அரட்டை அடித்து அவள் நெஞ்சில் நான் இடம் பிடித்துவிட்டேன்..... இந்த நட்பு நன்கு தொடர்ந்தது. அப்பொழுது எழுதும் காதல் கவிதைகளை ஆங்கிலப்படுத்தி சொல்வேன். அவளும் ஒரு கவிஞர் என்பதால் ஆங்கிலக் கவிதைகளை அனுப்புவாள் (எங்கிருந்தாவது காப்பி அடிச்சிருப்பாளோ?) நம் மகாகவி பாரதி குறித்தெல்லாம் எழுதியிருக்கிறேன். அதில் "கவிதை எழுதுவதால் மட்டும் அவன் கவிஞன் ஆவதில்லை; அவன் எழுதிய கவிதைபோல் நடப்பவனே கவிஞன் " என பாரதியார் சொன்னதை அவளிட சொல்லியிருக்கிறேன். நானும் அதன்படிதான் நடக்கிறேனென்றும் சொன்னேன் என் கவிதைகளை ஒன்று ," இனம், மதம், மொழி, விழி ஆகியவற்றை கடந்து வருவதே காதல்" என்றும் சொல்லியிருந்தேன்.. இது பிரச்சனையாகும் என்றூ அப்பொழுதெல்லாம் எதிர்பார்க்கவேயில்லை

தமிழ்நாட்டு உணவு முறைகளை எப்படி செய்வது என்று மடல் அனுப்புவேன். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.. ஒருநாள் இருவரும் முகவரிகளை பரிமாறிக் கொண்டோம்.. அப்போது என்னிடம் அலைபேசி இல்லாததால் வீட்டு தொலைப்பேசி எண்ணை அவளுக்குக் கொடுத்தேன். அப்பொழுது இருவரும் பேசிக்கொள்ளவேண்டும் என்று எண்ணவில்லை (பேசினா ஓவரா உளறுவோம்... அதான் நான் முயற்சியே பண்ணலை)

கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் நூறுக்கும் மேற்பட்ட மின்மடல்களை அனுப்பினாள். ஒவ்வொன்றும் பெரிய பெரிய மடல்கள்.. பதில் எழுதுவதற்கே அரைமணிநேரம் ஆகிவிடும். திடீரென்று ஒருநாள் என்னை மணம் செய்யப்போவதாக ஒரு மடல் அனுப்பினாள்.. என் வீட்டாரின் அனுமதியோடு... எனக்குப் பெரிய அதிர்ச்சி என்றாலும் ஒரு பெண்ணின் மனதில் அதுவும் வெளிநாட்டுப் பெண்ணின் மனதில் இடம் பிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி இருந்தது. என்றாலும் இதெல்லாம் விளையாட்டாக இருக்குமோ என்றும் எண்ணினேன். விளையாடுகிறாள் போலிருக்கிறது என்று எண்ணி, காதல் பற்றி எழுதாமல் எப்பொழுதும் போல மடல் அனுப்பினேன். அடுத்த மடலிலேயே, காதல் பற்றி கேட்டிருந்தேன் ஏன் பதில் அனுப்பவில்லை என்று எழுதினாள்.. தடாலடியாக, எனக்கும் உனக்கும் வயது பத்தாது; நீ வேற நாடு நானும் வேற நாடு ; மொழி மதம் என எல்லா வேறுபாடுகளையும் பட்டியலிட்டேன். அவள் உடனே நான் அனுப்பிய பாரதியார் தகவலையும், காதல் குறித்த வசனங்களையும் திருப்பி அனுப்பினாள். நான் அனுப்பியது எனக்கே ஆப்பு வைத்துவிட்டது!!!

அதன்பிறகு அவளுக்கு மடல் அனுப்புவதை நிறுத்திவிட்டேன்.. அப்பொழுதெல்லாம் வெளிநாட்டு வேலை, திருமணம் குறித்தெல்லாம் தேவையில்லாத அச்சம் எனக்குள் பரவியிருந்தது. அவள் தினமும் சலிக்காமல் மடல் அனுப்பினாள்..

திடீரென்று ஒருநாள்... வெள்ளிக்கிழமை எனக்கு சென்னையிலிருந்து அழைப்பு... நல்லவேளையாக வீட்டில் நான் தான் அழைப்பை எடுத்தேன்.. மறுமுனையில் நடாஷா....

எப்படியிருக்கும் எனக்கு!!!!!!!

மீதி அடுத்த பாகத்தில்..

சென்ற பதிவில் கேட்ட கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை... :(

முத்தம்
அதிகம் விரும்பிய மாவீரன் யார்?

செங்கிஸ்கான்


முத்தம்..... குழந்தைகளிடமிருந்து தொடங்கி, முதியவர் வரை, முத்தத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு!!!! தம்பதிகள் முத்தமிடும் பொழுது தன் 

ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்கிறார்களாம்.... எத்தனை சக்தி அதற்கு!!!!!

முத்தங்களில் பலவகை உண்டு.. ஆனால் அவை எல்லாவற்றிற்கும் ஒரே நோக்கம்... அன்பு... 

அதனால..... முத்தம் கொடுங்க.....  

கல்யாணம் ஆனவங்க மனைவிக்கும், குழந்தை பெத்துகிட்டவங்க குழந்தைக்கும்... பொதுவா எல்லோரும் முதியவர்களுக்கும்.....

இது என் பதினைந்தாவது வயதில் நான் எழுதிய கவிதை :

சத்தமொன்று மில்லாமல்
நித்தம் நின்றன் நாவிலே
நானெழுதும் கவிதை
முத்தம்.


இப்போ.... சுடச்சுட....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உதடுகள் வேர்க்குமாம்
கைக்குட்டை என் நாக்கு
துடைத்துக் கொள்ளடி

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

இதழ்களைப் பிரிக்க
அவசரப்படுகின்றன நொடிகள்
அவைகளுக்குத் தெரியப்போவதில்லை
பரிமாற்றத்தின் தடைபாடுகள்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ ஒரு முட்டாளடி..
உனக்கு எத்தனை முறைதான் 
சொல்லித்தருவது
முத்தமிடுவது எப்படி என்று.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

என் உதட்டு எச்சில்
மொத்தமும் காய்ந்துவிடுகின்றன
உன் வெதுவெதுப்பான 
இளஞ்சூட்டு முத்தத்தில்...

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ நாணத்தை 
நழுவிக் கொண்டே போகிறாய்
முத்தங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

கண்கள் மின்னுகின்றன
வாய் இடி இடிக்கிறது
முகம் கறுக்கிறது
அய்யகோ,
முத்தமழை வெடிக்கப்போகிறது!.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

: கையிலிட்ட முத்தம் :

ஒரு சர்ப்பம் போல் மெல்ல 
விரல் படர்ந்து

செறிவில்லா
கைக் காடுகளில்
கால் புதைத்து

நீண்ட பெருவான வீதியில்
தெறித்து விழும் விண்கல் போல்

இதயம் முளைத்த இடத்தில்
சிதறிக் கிடக்கும்

உன்
உதட்டு வேர்களில் முளைத்த
முத்தக் கனிகள்.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

இப்போ எல்லோருக்கும் ஒரு கேள்வி,.

முத்தம் விரும்பிய மாவீரன் யார்?

5.3.09

முகவரி

|

இதழ் திறந்த சிசுவொன்று
இனம் தெரியாமல் சிரிக்கையில்
தொலைந்து போன புன்னகை
தேடி வந்தது

புற அழகு ரசித்திருக்கையில்
மொழி தெரியாத கடலலை
பிணமான மீனைத் தள்ள,
தொலைந்து போன வலி
தேடி வந்தது.

பிரிவின் அர்த்தம் விளங்கும் காலத்தில்
பிரிவொன்று சந்தித்திருக்கையில்
முத்தமிட்ட குழந்தை
தொலைந்து போன பாசத்தைத்
தேடித் தந்தாள்.

உணர்வின் எச்சம் ஒழுகியபோது
பந்தமில்லா பறவைகள்
தொலைந்து போன கவிதையைத்
தேடித் தந்தார்கள்.

இவ்வாறு
ஒவ்வொன்றுமாய் தேடி வருகையில்
முகவரி தொலைத்திடாமல்
காத்துக் கொண்டிருந்தது
அகன்று விரிந்த என் மனம்.

சமர்ப்பணம் : முகவரி தொலைந்து போனவர்களுக்கும், முகவரி தொலைக்கப்பட்டவர்களும், முகவரி தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்...
குளத்துப் படிகளில் மண்டியிட்டு
நீ அள்ளி வீசிய தண்ணீரின்
தெறிப்பை பார்த்து மகிழுவேன்.
குளத்து மீன்கள் வெட்கலாம்
நான் இரைத்த பொரிகளை தின்றுவிட்டு...

கொலுசாணியை சரிபார்க்க
முதல்படியில் நீர் நனைய
கால் பரப்புவாய்.
வெட்கி ஓடும் நீரைக் குடிக்க
அந்த வெட்கமில்லா மீன்கள்
தலைதெறிக்க ஓடும்..

பொரிகளுக்கு ஏங்கிய மீன்கள்
நீ விரித்த
பொறிகளுக்கு மாட்டியது
ஆச்சரியமல்ல...

உன் நனைந்த ஆடைகளைப்
பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு
சுவாசத்தைப் பருகுவேன்.
பாவாடையை முறுக்கி விட்டு
நான் கவனிக்கிறேனா என்று
சிரிப்பாய் வெட்கம் வழிய.........

உன் தோளணைத்து குளக்கரையில்
அமர்ந்திருப்போம்,
துணிகள் ஆதவனின் கதிர்களால்
உலரும் வரை...
நீயும் நினைவுகளோடு பேசுவாய்
அவன் கதிர் வீசுவதை நிறுத்திவிட்டு
உன்னுடன் உளரும் வரை...

எழுந்தோம்; நடந்தோம்.

ஆன்மீகம் குடிகொண்டிருக்கும்
ஒரு சிலையை வணங்குவதற்கு முன்
ஒரு பூக்கடைக்குப் புறப்படுவோம்
ஒப்பனைகள் புரிய..

வண்டுகள் மொய்த்துக்கொண்டிருக்கும்
பூக்களில் எல்லாம் உன் வாசனை
உன் கூந்தல் சுற்றி இப்போது
வண்டுகளின் கூட்டங்கள்

உன் கூந்தலில் ஏறிவிட்டு
உதிறும் பூக்கள் எல்லாம்
உதிரம் கொட்டிக்கொண்டு செல்லும்
கூந்தல் ஏறிய பூக்களோ
கனத்துப்போய் ஏளனமாய் பார்க்கும்.

என் கரம் பிடித்தவாறு
ஒரு குழந்தையாக தவழ்ந்து வருவாய்.
தரிசன வரிசையில்..
உன் வியர்வைகளை
என் ரேகைகள் ருசிக்கும்
உன் ஈரத்தை என் மனம் ரசிக்கும்

இறுதியாக அந்த சிலை வந்ததும்
நான் வணங்குகிறேன் சிலை நோக்கி
நீ திரும்பி நிற்கிறாய் என்னை நோக்கி,,,

ஒரு தெய்வக் குடிலுக்குள்
உயிருள்ள என்னை
தெய்வமாக்குகிறாய்
நானோ உயிரற்ற ஒரு கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறேன்..

2.3.09

பிளவுபட்ட கரைகள்

|

நீர்தேடச் சென்று
தொலைந்து போனவற்றைத்
தேடி மணற்பாலையில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்.

ஊதமுடியா சங்குகள்
அங்கே வெடித்துப் போய்
இருக்கின்றன
திங்கமுடியா பிணங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன
உச்சி வெயில் உக்கிரத்தில்
பாதமும் வெளுக்கிறது

மணல் தொட்ட வியர்வைத்துளி
வீணாக நோகிறது
மனம் தொட்ட நீர்தடங்கள்
காணாமல் போகிறது

தொண்டை அடைத்த
ரணத்தோடு
ஓவியம் படர்ந்த
பாதங்கள் வீடு திரும்ப,
பாதச்சுவடுகளை அழிக்கமுடியா
விரக்தியில்
ஊர் கதைப் பேசி
திரிகுதுகள்
பிளவுபட்ட கரைகள்.

Subscribe