பிளவுபட்ட கரைகள்

நீர்தேடச் சென்று
தொலைந்து போனவற்றைத்
தேடி மணற்பாதைகளில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்.

ஊதமுடியா சங்குகள்
வெடித்துப் போய்
இருக்கின்றன
திங்கமுடியா பிணங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன
உச்சி வெயில் உக்கிரத்தில்
பாதமும் வெளுக்கிறது

பிழிந்த வியர்வைகள்
மகிழ்கின்றன
இன்றாவது இங்கே
இருக்கிறோமே என்று..

தொண்டை அடைத்த
ரணத்தோடு
ஓவியங்கள் படர்ந்த
பாதங்கள் வீடு திரும்ப,
பாதச்சுவடுகளை அழிக்கமுடியா
விரக்தியில்
ஊர் கதைப் பேசி
திரிகுதுகள்
பிளவுபட்ட கரைகள்.

Comments