31.5.07

உறுத்தியதொன்று...

|

துயில் களைந்த
ஆதவன்
தூக்கி எறிந்த
கதிரெல்லாம்
கயல் ஓடிய
கண்மணியைக்
கட்டியணைத்ததுவே

உலர்ந்த மேனியை
நீர்கொண்டு
புலர்த்திய பின்னாலே
முடக்கிய சோம்பலை
முடுக்கிய தென்றலாய்

ரோமங் கலைந்து
நிலைக் கண்ணாடியில்
மேவிச் சீவி
வறத்த வதனத்தில்
பொடியெடுத்துப்
புலர்த்திவிட்டு
நெஞ்சு நிமிர்க்க
நேரம் தவிர்க்க

கண்மணி
ஓடி வந்தாள்.

சில்லறைபெற்று
சிரிப்பொன்று நாட்டினாள்.

ஒருவனிடம் வாங்கியிருந்தால்
மகிழ்வொன்று பூத்திருப்பேன்.
என்று நெக்கிய நெஞ்சத்தை
புதைக் குழியில் புதைத்துவிட்டு
பொய்ச் சிரிப்பை
விடைக்கனுப்பினேன்.
சூத்திரங்கள் அறியாது
போகிறாள் என் மகள்..

வேட்கைகளின்
தொகுப்புக்களோ
கோபக் கனலின்
கொஞ்சல்களோ

என் கண்,
முன்னர்,
வெளிறித் தொங்கிய
அனலிலிருந்து
இன்று
மெளனமாய் நீண்டு
வெறியாடுகிறது
மதக் குருத்துக்கள்

சிந்திய துளிகளுல்
மதச் சூட்டு இருக்குமோ என.
சூள்கொண்டு மாய்ந்த
கண்கள் தேடியது
பார்வையை இழந்துவிட்டு.

இவ் வுலோபிகளின்
உயிர்ச் சடலங்களை
உருவாக்கிய
என்னை

யாரென்று வினவிய
வினாவினால்
குருதி தொய்ந்த
என் சிரத்திலே
சீழ்ந்து ஒழுகியதைத்
தொட்டு ருசித்தேன்
நான்
இந்துவா?
இஸ்லாமியனா?

வெட்டுபட்ட இலைகளால்
வீடிழந்து நிற்கிறார்கள்
பூச்சிகள்.

கோடை வெப்பத்தின் உக்கிரம் பாறையைப் பிளக்கிறது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க திடீரென
உதித்த யோசனைதான் ஊட்டி பயணம்... சென்ற சனி இரவு அலுவல் வேலைகளை முடித்துவிட்டு மன்றத்தில் விடுப்பு
சொல்லிவிட்டு கிளம்பினேன்... நண்பர்கள் சிலர் மீன் கடையில் இருக்கவும், உடனே இரு மீன்களை உள்ளே தள்ளிவிட்டு
பயணத்திற்கு யாரார் வருகிறார்கள் என்று அலைபேசியில் கேட்க, சிலர் குறைந்து இறுதியில் நான்கு பேர் மட்டும் என்று
குறுகிப் போனது.. சரி என்று ஞாயிறு அதிகாலை ஐந்துமணிக்கே எழுந்து (வேதனையான தருணங்கள்) பல்லு விளக்கு
குளித்து முடித்து 5.45 க்கு நண்பர்கள் நால்வரும் ஒன்றிணைந்தோம்.


நண்பர்கள் நாங்கள் யார் யார் எப்படி என்று சொல்கிறேன் ..

நான் ஆதவன் - என்னைப் பற்றி சொல்லவேண்டியதில்லை PJP நான்.
Hell - சிறுவயது முதல் நெருங்கிய நண்பன்... ஒரே வளவள... ஏன் இந்த பெயர் அவனுக்கு என்று தெரிந்ததா?
Be or Scooby - சிறுவயது நண்பன். சென்னையில் இன்னும் படித்துக் கொண்டு அவனோட வேலையான லவ்விக்
கொண்டிருக்கிறான்
Rocky - என்னுடைய வேலை.... இவனுக்கு கவிதை, கதை போன்றவற்றில் விருப்பம்.. விரைவில் மன்றத்திற்கு வருவான்..
அப்போது இன்னும் தெரிந்துகொள்வீர்கள்.

நால்வரில் கடைசி மனிதரைத்தவிர மற்ற மூவரும் PJP. நாலாமவன் ரொம்ப நல்ல பையன் (?!)

ஒருவழியாக வண்டியை முறுக்கிக் கொண்டு கிளம்பினோம். நன்றாக ஞாயம் பேசிக்கொண்டே..... அந்த நேரத்திலேயே
நல்ல வெளிச்சம் இருந்தது. அவினாசி அருகே இரண்டு வண்டிக்கும் பெட்ரோல் ஐந்து லிட்டர்கள் அடித்துவிட்டு
கிளம்பினோம்.... ஒரே மூச்சில் முக்கால் மணிநேரத்தில் பிளாக் தண்டர் வந்து சேர்ந்தாயிற்று. (ஏற்கனவே இங்கு வந்து
அடித்த கூத்துக்கள் எனக்கே மறந்துவிட்டது..) அங்கே ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சிறிதுநேர
இளைப்பாறலுக்குப் பிறகு வண்டியை உசுப்பி ஊட்டி மலையில் ஏற ஆரம்பித்தோம்... நாங்கள் சென்ற நாள்
மலர்கண்காட்சிக்குண்டான நாளாகியமையால் சரியான கூட்டம்... ஊட்டியில் சுற்றுலா பயணிகள் மட்டுமே 2 லட்சம்
பேராம்.... பின் எப்படி மலைப்பாதையில் வேகமாக செல்லமுடியும்..?? ஒரே ட்ராஃபிக்... கிட்டத்தட்ட இரண்டு
மணிநேரங்கள் பிடித்தது.. குன்னூரைத் தொட... அப்படியே மலை அழகுகளை சில இடங்களில் ரசித்துவிட்டு குன்னூர்
தாண்டி ஊட்டியைத் தொட, மணி 10 ஐ நெருங்கியது... ஞாயிறு அன்று ஏக கூட்டம்... சுள்ளென இல்லாவிடினும் ஓரளவும்
வெயில். ஊட்டி டீ அருந்திவிட்டு திட்டம் போட்டோம்... முதலில் பைகாரா நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு பிறகு
பொடானிகல் கார்டன் முடித்துவிட்டு சீக்கிரமே வீடு திரும்பிவிடவேண்டும் என்பது... அடுத்தநாள் வரை நாங்கள் திட்டம்
போடவில்லை.. ஊட்டியிலிருந்து பைகாரா கூடலூர் செல்லும் வழியில் இருக்கிறது. கிட்டத்தட்ட 20 கி.மீ மேலே.. மலை என்பதால் இயற்கையின் அழகு அற்புதமாக இருந்தாலும் பாதை மிக மோசமாக இருந்தது.. வெறும் கற்களே தாருக்கு மேலே இருந்தன.. வண்டியை ஓட்டிக் கொண்டு போவதில் மிகச் சிரமமாக இருந்தது. சிலசில இடங்களில் வண்டியை நிறுத்திவிட்டு மிக மெதுவாக அழகை ரசித்துவிட்டு பைகாரா சேர்ந்தோம்...

வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு பைகாரா படகு இல்லத்திற்கு வந்து பார்வையிட்டோம்... அங்கங்கே சில படங்கள் எடுத்துவிட்டு சில பெண்டுகளை ரசித்து ஜொல்லிவிட்டு நேரே நீர்வீழ்ச்சிக்குச் சென்றால், அங்கே வறண்டு போயிருந்தது. இருந்தாலும் விடுவதாக இல்லை. அதையும் படம் பிடித்துவிட்டோம்... அங்கே ஜொல்லமுடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது... ஒரு பக்கம் இயற்கை அழகு வறண்டு போயிருந்தாலும் இன்னொருபக்கம் இயற்கையாகவே அழகிகளின் அழகு ஊறிக் கொண்டிருந்தது... பாதிக்கும் மேற்பட்டவர்கள் வடநாட்டவர்கள். சில வெளிநாட்டவர்களும் கூட.... மறக்க முடியாத தருணங்கள். செய்த கூத்துக்களை நான் வெளியிடவும் மாட்டேன்

இப்படியாக மதியம் சென்றுவிட்டது. அப்படியே நடந்துவந்து பஜ்ஜி சொஜ்ஜிகளைத் தின்றுவிட்டு கிளம்பினோம்... நேரே ஷூட்டிங் ஸ்பாட்... ஊட்டிக்கும் பைகாராவுக்கும் நடுவே இருக்கிறது.. மிக அழகிய பசுமை பிரதேசம். அங்கே கண்ட காட்சிகளை நான் சொல்லவா ? ஜொல்லவா? மதியம் 3 வரை தத்தளித்துவிட்டு பல படங்களை பல கோணங்களில் எடுத்துவிட்டு மீண்டும் வண்டியேறினோம்... இடையிடையே தின்றதையெல்லாம் சொல்லமுடியாது... கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தின்று தீர்த்தோம்...

ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் ஏரி ஒன்று இருந்தது... மரங்களுக்கு ஊடான பாதையில் நடந்து சென்று ஏரியைக் காணும்போது.. அடட்டா!!!! என்னே அழகு!!!! அங்கேயும் சில படங்களை எடுத்துத் தள்ளிவிட்டு வண்டியில் கிளம்பினால், ஊட்டிக்கு 8 கி.மி இருக்கையில் மழை பின்னி எடுத்தது.... மணி கிட்டத்தட்ட 4 ஆகிவிட்டது. சீக்கிரமே பொடானிகல் கார்டன் ரசித்துவிட்டு வீடு திரும்பவேண்டும். மலைப்பாதை என்பதால் 7 மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் மழை பின்னி எடுத்தது. கிட்டத்தட்ட 5 மணி வரை..... என்ன செய்ய???

யோசித்துக் கொண்டிருந்தோம்... காரணம் அன்று சீசன் காலம் என்பதால் அறை வாடகைக்குக் கிடைக்காது. இரவுக்குள் வீடு திரும்பவேண்டும்... வீட்டுக்கு கிட்டத்தட்ட 100 கி.மி இருப்பதாலும் மலைப்பாதையே 40 கி.மி என்பதாலும் பல சிக்கல்... மாட்டிக் கொண்டோம்..... இந்த சூழ்நிலையில் ஊட்டியை இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை....
---------------------------------
சரி இது இப்படியே இருக்கட்டும்.. வரும் வழி முதல் இதுவரை செய்த லூட்டிகள் என்ன?? நிச்சயமாக அசிங்கமாக ஏதும்
செய்யவில்லை. ஊட்டிக்கு ஏறும் வரை எங்களது வழக்கமான பேச்சுக்கள் மட்டுமே இருந்தன. அங்கே சேர்ந்ததும்
நாங்கள் மாறிவிட்டோம். எங்கள் கண்கள் எங்களிடமே இல்லை.. பைகாரா செல்லும் வரை நாங்கள் நல்லவர்களாக
இருந்தோம்.. பைகாரா அடைவதற்கு முன்பாக ஒரு கேரட் விற்கும் பெண்மணி எங்களை அழைத்து கேரட் வாங்கச்
சொன்னார். நாங்கள் கொஞ்சம் தூரம் சென்று நிறுத்தினோம்... அவசரம் வேறு.. அந்த பெண் ஓடிவந்து கேரட்டுகளை
எங்களுக்கு விற்றுச் சென்றாள்... ஹி ஹி. அந்த பெண்மணி மிக அழகாக இருந்தாள். ஆனால் கை மட்டும் சூம்பிப் போய்
ஆகாரம் திங்காத கோழிமாதிரி இருந்தாள்... மற்றபடி அவளுக்கு பெரிய மனசு.. இல்லாவிடில் எங்களுக்காக சுவை
மிகுந்த கேரட் வழங்க ஓடி வந்திருக்கமாட்டாள்.. சரி சரி. ரொம்ப ஓவரா போறேன். பைகாரா அடைந்ததும் வாலிபம்
வேலை செய்ய ஆரம்பித்தது. எங்கு திரும்பினாலும் கண்கள் பெண்களிடமே நின்றது. படகு இல்லத்தில் ஏகப்பட்ட
இளசுகள்.. கையில் பாப்கார்ன், மாங்காய், ஐஸ்கிரீம் என்று இஷ்டத்திற்கு செலவு செய்துகொண்டு
திரிந்துகொண்டிருந்தார்கள் சரி எதற்கு மொபைல் வைத்திருக்கிறோம்? படமெடுக்கலாம் என்று பார்த்தால் மொபைல்
குறிப்பிட்ட தொலைவு வரை ஜூம் ஆகவில்லை. படகு இல்லத்தில் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருக்கும்
காதலர்கள் முதல் தம்பதியவர் வரை ஒருவரையும் விடவில்லை. இதில் உச்சகட்டமாக ஒரு தம்பதியரின் கொஞ்சலை
படமெடுத்து சாதனை புரிந்தோம்... ம்ம்... மனைவியோடு இம்மாதிரி இடங்களுக்கு வந்தால் அது அலாதி சுகம்.. நமக்கு
இன்னும் காலம் இருக்கிறது ... அந்த படகு இல்லத்தில் பயணம் செய்ய நாங்கள் திட்டமிடவில்லை... ஊட்டியில் சென்று
பார்த்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டிருந்தோம்.. சில ஊடல்களையும் அங்கே காணமுடிந்தது.

அப்படியே பைகாரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றால் ஒரே அழகிகளின் அணிவகுப்பு. எங்களுக்கு திக் திக் என்று இருந்தது.
(ஒரு போலீஸ் காரியைக் கூட விடாமல் ஜொல்லினோம். ) வெளிநாட்டவர்கள் வேறு வந்திருந்தார்கள்... சிலதுகள்
பஞ்ச உடை.... நாங்கள் எங்களையே படமெடுக்கிறோம் பேர்வழி என்று சிலரை படமெடுக்க முயன்றோம்... ஆனால்
முடியவில்லை.. எங்களுக்குண்டான நாகரீகமே தடுத்துவிட்டது. அங்கே சிறிது நேரம் அமர்ந்து இயற்கையை
ரசித்தோம்.. கூடவே பலவும்.. மெல்ல கடைக்குச் சென்று வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி என்று
ஒரு ஐயிட்டம் விடாமல் துரத்தித் துரத்தித் தின்றோம். ஒரு பெண் அருகே அமர்ந்திருக்கிறாள் என்பதற்காகவே ஒரு
மினரல் வாட்டரை வாங்கி அதில் முகம் கழுவி நாங்கள் அதிசுத்தமானவர்கள் என்று உணரவைத்தோம்...ம்ம்ம்ம்ம் அந்த
பெண் எங்களைப் பார்ப்பதாகத் தெரியவில்லை. மெல்ல நடந்து வந்து அந்த போலீஸ் காரியை மீண்டும் ரசித்துவிட்டு
பைகாராவிலிருந்து இறங்கினோம்... ஹி ஹி மீண்டும் அதே கேரட் வாங்கலாம் என்று நினைத்தோம்... எங்கள் நினைவில்
யாரோ மண்ணை அள்ளி போட்டுவிட்டார்கள். அட குரங்குகளைக் கூட விடவில்லை. பல சேஷ்டைகள் செய்துவிட்டு
நேரே ஷூட்டிங் ஸ்பாட் இறங்கினால், அங்கே ஆரம்பமே அமர்களம்.

நாம் ரசிப்பதற்காகத்தான் பெண்கள் மேக்கப் செய்கிறார்கள் என்பது என்னுடைய கருத்து... வெறும் ரசிப்போடு இருப்பது
ஒன்றுதான் சாலச் சிறந்தது. அளவுக்கு மீறிய ரசிப்புத் தன்மை என்னிடம் விட்டு விலகியிருந்தது நான்
அறிந்துகொண்டேன். இதில் கொடுமை என்னவென்றால் பல பெண்கள் எங்களையும் ரசித்தார்கள். ஊட்டியில் சேலை
கட்டிய பெண்களை நான் பார்த்தது மிக மிக குறைவு.. ஆனால் அதற்கு நேரெதிரே ஆடை குறைந்த பெண்களையே
பார்க்க முடிந்தது. இம்மாதிரியான இடங்களுக்கு முழு சுதந்திரம் எடுத்துக் கொண்டு இப்படி செய்கிறார்களா அல்லது
அவர்கள் வாழ்க்கை முறையே இப்படித்தானா என்று சந்தேகம் எழும்புகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் செல்வதற்கு
முன்பாகவே இரு மாங்காய்களை வாங்கி கொறித்துக் கொண்டே இருவரை பின் தொடர்ந்தோம்... ஒரே மேடாக
இருந்தமையால் என்னால் அவ்வளவாக ஏற முடியவில்லை. மெல்ல மெல்ல ஏறினால் அய்யோ... அப்படி ஒரு அழகுக்
கூட்டமாக ஊட்டி மலைகள் இருந்தன,, எல்லாவற்றையும் மொபைல் படம் பிடித்துக் கொண்டது.. நாங்கள் ஒரு ஓரமாக
நின்று/படுத்துக் கொண்டு பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் செல்ஃப் டைமர் வைத்து நாங்களே
படமெடுத்தோம்.. அது ஒரு அழகிய அனுபவம்./ அப்படியே நடந்து சென்று குதிரை ஏற்றத்தைக் கண்டு ரசித்தோம்..
ஏனோ எனக்கு குதிரை ஏறவேண்டும் என்று தோணவில்லை. அங்கே மொபை டவர் கிடைத்தது என்பதால் அவரவர்கள்
தன் உட்பிக்கு அலை(ழை)த்தார்கள்.. நான் மட்டும் இயற்கையோடு காதல் புரிந்துகொண்டிருந்தேன். உடன் ஓடி
விளையாடும் சில பெண்களையும் குழந்தைகளையும் சந்தோசமாகவும் அதேசமயம் நாம் குடும்பத்தோடு வந்திருந்தால்
இந்த சந்தோசம் மேலோங்கியிருக்கும் என்றும் வருத்தப்பட்டேன். சிலருக்கு எல்லாமே அமைந்துவிடாதல்லவா? சரி.

மெதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து இறங்கிக் கொண்டிருக்க, அதையும் விடாமல் படம் பிடித்து வைத்திருக்கிறார்கள்..
அதில் என்னென்னவோ பேசினேனே!!! இறங்கும்போது யாரும் ஏறவில்லை.. அதனால் மனம் சூட்டிங் ஸ்பாட்டிலேயே
சுற்றீக் கொண்டிருந்தது. அப்படியே வண்டியை உசுப்பிவிட்டு கொஞ்ச தூரம் சென்று ஸ்கூபி வண்டியை நிறுத்தி ஏரி
ஒன்று இருப்பதாகவும் அதைக் கண்டுவிட்டு செல்லலாம் என்றும் சொன்னான். கொஞ்சம் இறக்கமாக செல்லவேண்டும்.
அங்கிருந்த நீளமான மரங்கள் எங்களை வசீகரப்படுத்தின.. அந்த ஏரியை அடைந்ததும் ஒரு பெண்ணிடம் சொல்லி
எங்கள் நால்வரையும் படம் எடுக்கச் சொன்னோம்... அவர்கள் சிரித்துக் கொண்டே படமெடுத்தார்கள். பின்னர் பஞ்சு
மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டிக் கொண்டே ஏரியிலிருந்து பாதைக்கு ஏற முற்பட்டால் சத்தியமாக முடியவே இல்லை.
இதற்கு இரு காரணங்கள் உண்டு.. ஒன்று இறங்கிவரும் பெண்கள் கூட்டம்,. அடுத்து உயரமான மேடு... நடக்க
முடியவில்லை. எப்படியோ ஏறி வண்டியில் ஊட்டிக்குச் சென்றால் பாதி தூரத்தில் மழை. வண்டியை ஓரம் கட்டிவிட்டு
மழை நின்றதும் கிளம்பினோம். இடைப்பட்ட சம்பாசணைகளை ஏற்கனவே படித்திருப்பீர்களே!!
பைகாராவிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. அந்த மலைபிரதேசங்களில் எப்போதுமே வானிலை மழை வரும்படியாகவே இருக்கும் ஆதலால் நாங்கள் மழை பிடித்ததும் ஒரு இடத்தில் ஒதுங்கிக் கொண்டோம். மழையென்றால் சாதாரண மழையல்ல. பனிக்கட்டிச் சாரல்.. ஒவ்வொருதுளியும் சுள் சுள்ளென பிடித்தது. அதோடு பனிக்கட்டி மழை பார்த்து வெகு நாட்களாகிவிட்டமையால் ரொம்ப சாலியாக இருந்தது. அருகே இருந்த டீக்கடையில் பிஸ்கோத்துகளும் டீயும் சாப்பிட்டோம்... வெகு நாட்களுக்குப் பிறகு அருமையான தேநீர். மழை மிகவும் வழுத்தது. அதோடு மண்வாசனையும் சேர்ந்து பனிக்கட்டிகள் தாளமிட எனக்கு மட்டும் அந்த நேரத்தில் ஒரு நோட்டும் பேனாவும் இருந்திருந்தால்........
வேறவழியில்லை... பொடானிகல் கார்டன் சுற்றிப் பார்க்க இயலாது. ஆக அடுத்தநாள் தங்கி இருந்து பார்த்துவிட்டு போக முடிவு செய்தோம். ஸ்கூபியின் மாமாவுக்கு போன் செய்து ஊட்டியில் இருக்கும் சித்தப்பாவை அறை வாடகைக்குப் பிடிக்கும்படி ஏற்பாடு செய்யச் சொன்னோம்... அதற்குண்டான ஏற்பாடும் நடந்தது.. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் மழைக்குப் பின் வண்டியை எடுத்து கிளம்பினோம்... நேரே ஊட்டி..
ஊட்டியில் பொடானிகல் கார்டன் செல்லும் வழியில் ஒரு திரையறங்கு உள்ளது. அதனருகே வண்டியை நிறுத்திவிட்டு நால்வரும் ஸ்கூபியின் சித்தப்பா வருகைக்குக் காத்திருந்தோம். அப்போதே மாங்காய்களையும் மசாலா கடலைகளையும் சோளக்கருதுகளையும் வாங்கித் தின்று வயிறு உப்பிப் போய்,,,, இடம் தேட வேண்டிய சூழ்நிலைக்கு வந்து அப்பறமாக வயிறை சுத்தம் செய்துவிட்டு வந்து நிற்பதற்குள் மணீ ஆறாகிவிட்டது. பிறகு வேறொரு இடத்திற்கு சித்தப்பா வந்து சேர்ந்தார்.. வண்டியை உசுப்பி விட்டு ஸ்கூபி ராக்கி சித்தப்பா மூவரும் ஒரு ஹோட்டலுக்குச் செல்ல நானும் ஹெல்லும் நடந்துவந்தோம்... இரு கி.மீ தாண்டி அந்த ஹோட்டல் இருந்தது. வாடகை எவ்வளவு என்று கேட்டால் ஆயிரத்தி இருநூறு என்றார்கள்... எங்களுக்கு பக் பக் என்று இருந்தது.. அவ்வளவு பணமும் கொண்டுவரவில்லை.. ஆனால் ஸ்கூபி அந்த பணத்தை தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான். சரி என்று ஒருமனதாக ஊட்டியில் அறையில் தங்க முடிவு செய்தோம்... இதற்கிடையே கொண்டு சென்ற கேமிரா போன்களின் பேட்டரி லோ என்று காண்பித்தது... பேட்டரி சார்ஜரும் கொண்டு செல்லவில்லை. இன்னும் அறையும் பதிவு செய்யப்படவில்லை.. வேறு யாரோ அறையைக் காலி செய்ய இருப்பதாகச் சொல்லி வரவேற்பறையிலேயே தங்க வைத்தார்கள். சரி இந்த விஷயத்தைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம் என்று சரியாக 7 மணிக்கு சாப்பிட கிளம்பினோம். செல்லும் வழியிலேயே எங்களுக்கு மனம் நிலைகொள்ளவில்லை. கண்கள் பாதையைக் காணாமல் பேதையைக் கண்டது. ஒருவழியாக மூன்று கிமீ வரை நடந்து வந்து ஏதாவது பொருட்கள் வாங்கலாம் என்று ஒரு கடைக்குச் சென்று நாங்கள் செய்த கூத்து இன்னும் நினைவிருக்கிறது.
ஸ்கூபி பைனாகுலர் வாங்குவதாக விலை விசாரித்தான்.. 300 க்கும் மேலே விலையைச் சொல்ல, அவன் குறைக்கச் சொன்னான்.. கடைக்காரனும் வாங்குவதாக இருப்பின் நிச்சயம் குறைப்பேன் என்றும் பைனாகுலர் ஜூம் 2 கி.மீ தாண்டும் என்றான்... நான் வாங்கிப் பார்த்தேன். அது 50 அடியைக் கூட உறுப்பிடியாக ஜூம் செய்யவில்லை.. ஆதலால் 160 ரூபாய்க்குக் கேட்டான்.. கடைக்காரனும் ஒத்துக் கொண்டான்.. இருப்பினும் எங்களுக்குத் திருப்தி இல்லை.. கடைசிக்கு 1 கி.மீ ஜூமாவது ஆகவேண்டும்.. இது பக்கதிலிருக்கும் ஒரு பலகையைக் கூட ஒழுங்காக காண்பிக்கவில்லையாதலால் நாங்கள் வேண்டாம் என்று ஒதுங்க, அவனோ பெரும் வாக்குவாதத்தில் இறங்கிவிட்டான்.. நான் அமைதியாக இருந்தேன்.. ஸ்கூபி திட்ட, அவன் திட்ட, இறுதியில் நாங்களே வெளியேறினோம்.. நேரே இசைக்கச்சேரி நடந்த இடத்திற்குச் சென்றோம். மனம் நிலைகொள்ளவில்லை.. சாப்பிட்டுவிட்டு அறைக்குச் செல்ல முடிவெடுத்து திரும்புகையில் ஒரு சம்பவம்.
ஒரு ஆள் நடைபாதையில் நடந்துகொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணை இடித்துவிட்டுச் சென்றான்... எங்களுக்கோ ஒரே ஆச்சரியம். ஏனென்றால் சில பெண்களே வேண்டுமென்றே எங்களை இடித்த சம்பவம் நடந்தது அங்கேதான்.. ஆனால் அந்த ஆசாமி இடித்த முறையும் கைபட்ட இடமும் அறுவறுக்கத் தக்கவகையில் இருந்தது. அந்த பெண் மிகவும் சோகமாக இருந்தாள். அவளோட அப்பா அவனைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்... அவனோ எப்படியோ தப்பி அடுத்த பெண்களை இடிப்பதற்குச் சென்றுவிட்டான்... பெண்களை ரசிக்கலாம் கமெண்ட் அடிக்கலாம்.... ஆனால் இப்படி தகாமல் புண்படும்படி நடப்பது வேதனை.. அநாகரீகம்..
இப்படியே சிறிது நேரத்தில் அதாவது 9 மணி அளவில் ஹோட்டலுக்குச் சென்றால் அறைக்கு வாடகை 1500 என்றும் அதற்கு வேறு ஆள் வந்துவிட்டார்கள் என்றும் சொல்லவே, எங்களுக்கு திக் என்று ஆகிவிட்டது.. ஊட்டியில் 9 மணிக்கு அதுவும் அந்த கடும்குளிரில் வண்டியை எடுத்து 100 கி.மி தொலைவில் உள்ள எங்கள் வீட்டுக்குச் செல்வது நடக்கக் கூடிய காரியமா? நினைக்கும்போதே நடுக்கமாக இருந்தது.. ஹோட்டலைவிட்டு வெளியே நின்றோம்... ஒருவித பயம் எங்களைத் தாக்கியது...

19.5.07

மறந்துவிட்டதாய்

|

கிண்ணச் சோறுகளில்
எண்ணை பூசிய உணவுகள்
அடமற்ற பிள்ளையாகி
அன்பூட்டத் தின்றேன்.
நிலவு கோபிக்கவில்லை
பூச்சாண்டிகள் தோன்றவில்லை.

காலத்தை நீராய்
ஒழுக்கிய அரக்கனால்
ஊட்டல் குறைந்து
ஊட்டம் மிகுந்து
காளையன் நான் அவள்
கழுத்தைத் தாண்ட
பிடி விலகிய கயிறாய்
நழுவல் கண்டேன்.
உண்டவைகள்
செருக்கெடுத்து ஓடியது.

நித்திரைக் கனவுகள்
தாண்டிப் போய்
நிஜக் கனவுகளைத்
தோண்டி
வாழ்விலொருத்தி
வந்து சேர்ந்தாள்
வாழ்விலொருத்தி
இழக்கக் கண்டேன்

முன்பெல்லாம் பசிக்கையில்
அம்மா என்பேன்.
இன்று தேடுகிறேன்
மனைவியை!

தேகங்களில் நீர்படர்ந்தவாறே
வர்ணக் கலவைகளை
அப்பிக் கொண்டு
மிதக்கும் கனவுகளில்
தூரிகைகள் துடைக்கப்படுகிறது
ஓவியனின் எச்சிலில்..

கூர் விழுதுகளால்
நேர் பார்க்கப்பட்ட
வர்ணக் கோலங்களைத்
தூக்கிக் கொண்டு செல்லும் முன்
மனம் கனக்க
பார்வையிடுகிறான்
கனவுகள் ஒடிந்த
கண்களில்

விட்டுப் போன தூரிகைகளை
பிணமாக்கி ஓடுகிறது
எலிக் குஞ்சுகள்.
வர்ணப் பெட்டிகளை
விசிறியடித்துச் செல்லுகிறது
பூனைக் குட்டிகள்

எல்லாம் எழுதியவை
வாங்கித் தருமோ?

கனவுகளை
வாங்குவார் யாருமில்லை
கனவெனப்பட்ட கைங்கரியங்களை
வாங்குவாருண்டோ?

என்றாவது ஒருநாள்
விற்கப்படும் அந்த ஓவியம்
அதுவரை தூரிகைகள் அற்ற
ஓவியக் கூடத்தை
எலிகளின் புழுக்கைகள்
நிரப்பிக் கொண்டிருக்கும்..

16.5.07

பிளவுபட்ட கரைகள்

|

நீர்தேடச் சென்று
தொலைந்து போனவற்றைத்
தேடி மணற்பாதைகளில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்.

ஊதமுடியா சங்குகள்
வெடித்துப் போய்
இருக்கின்றன
திங்கமுடியா பிணங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன
உச்சி வெயில் உக்கிரத்தில்
பாதமும் வெளுக்கிறது

பிழிந்த வியர்வைகள்
மகிழ்கின்றன
இன்றாவது இங்கே
இருக்கிறோமே என்று..

தொண்டை அடைத்த
ரணத்தோடு
ஓவியங்கள் படர்ந்த
பாதங்கள் வீடு திரும்ப,
பாதச்சுவடுகளை அழிக்கமுடியா
விரக்தியில்
ஊர் கதைப் பேசி
திரிகுதுகள்
பிளவுபட்ட கரைகள்.

நிலவெடுத்துப் பண்படுத்திச் சிக்கிய கூந்தல்
உலகெடுத்துக் கொத்திய ஏந்திழை - ஈசன்
வலமிருந்து போற்றும் மறத்தி மனதை
சிலைபடுத்தி சிற்பிகள் அப்பிய சிற்பம்
அலைநிறுத்தி ஆழ்படுத்தி வங்கத் துமைநீ
முலைநிறுத்தி ஊண்தரு வாயே உனையே
கலைமகளே காண்பேனோ நான்.

12.5.07

எங்கே என் காதலி?

|

எங்கே என் காதலி?
விழித்திரையை மூடியெழும்போது
முன்னே நிற்பவர்களின் ஒருத்தி
என் காதலியா?

விரல்கள் அழுத சில வார்த்தைகளில்
நிஜமாய் உதித்தவள்
என் காதலியா?

இருள் படர்ந்த விண்ணுக்குள்
இன்னும் புலப்படாத
தூரத்தில் நகைத்துக் கொண்டிருப்பவள்
என் காதலியா?

எங்கே என் காதலி?
உடல்களை விரும்பும்
உணர்வற்றவர்கள் மத்தியில்
உலவும் என்னையும்
தவறாய் நினைத்துக் கொண்டாளோ
என் காதலி?

சொற்களைப் பிடித்து
பாடல்கள் எழுதினேன்
உணர்வுகளைப் பிடித்து
கவிதைகள் எழுதினேன்
எவளைப் பிடித்து
வாழ்க்கை எழுத?

எங்கே என் காதலி?

- காதலின்றி வாடும் கவிஞன்.(:D)

சுள்ளுனு காத்து அடிக்குது ஊருக்குள்ள,
மே மாசம் வேறயா, வெயிலு கொளுத்துது. கண்ணு திறந்து சனத்தைப் பார்த்த போதும்ல, ஒரே வலியாத்தான் இருக்கும். செருப்பு இல்லாம அங்கிட்டு இங்கிட்டு நெகர முடியாதே மண்ணா இருந்தாலுஞ் சரி தார் போட்டு இருந்தாலுஞ் சரி. வெளுத்துப் புடும்.
கருங்குதிர காயைப் பொறுக்கறதுக்கு கிளம்பினான் காலாங்காத்தால. பல்லு வெளக்கல, வாயைக் கொப்புளிக்கல, இஸி கூட பேழல, என்ன செய்யறது. கிழவி காத்தால இருந்தே கத்துச்சு,
டேய் கிறுக்குபைய மவனே! கவுண்டர் ஊட்டுல ஊருக்காரய்ங்க மேஞ்சுபுடுவாங்கய்யா! வெல்லனே போய் காயைப் பொறிடா!, இல்லனா காண்டி அள்ளிட்டு போய்டுவாங்க,
இரு த்தா, இப்பொதான் சிம்பரன் கூட கூத்து கட்டியிருக்கேன். இப்ப போய் எழுப்பீட்டு
அடி த்தா, செருப்பால, அவனவன் ஊருல உசிரில்லாம திர்றான், உனக்கு மார்ல மசுறு வேணுங்குதா, எந்திர்றா,
சொன்ன கிழவி, சீவக்கட்டைய தூக்கிட்டு வந்துட்டா, கருங்குதிர இதுக்குமேலயும் கனவு கண்டான்னா, நாளப்பண்ண புது வெளக்குமாரு வாங்கோனும்.
பொறுங்க ஆசாமிகளா, இவேன் பேரு கருங்குதிர இல்ல. வேலைச்சாமி. எப்படி இந்த பேரு வந்துச்சுனு கேக்கிறீங்களா? இருங்க சொல்லுறேன்.
வேலைச்சாமியோட பாட்டன் காலத்துல இவனோட பாட்டனுங்க பொய்கால குதிர ஆடிப் பொழச்சவனுங்க, அந்த காலத்துல தேவய்யா கூத்துன்னா, கூழுக் கம்பக் கூட கீழ ஊத்திட்டு வருவாய்ங்க, அத்தன பேமசு, தேவய்யா ஒரு நாளு செத்துப் போனாரு, மனுசன் பொறந்தா செத்துதான போகனும். அவன் மகன் வந்தான், கருமூஞ்சி னு பேரு.. தேவய்யா அந்த காலத்துலயே கலப்பு கலியாணம் புடிச்சாரு. அதனால அவன் சாதிக்காரங்க ஒதுக்கிப்புட்டாங்க, தேவய்யா சம்சாரத்தில இப்படித்தான் பேரு வெப்பாங்களாம்ல, கருமூஞ்சி, வெள்ளைப் பன்னி, பணியாரம், இப்படித்தான் பேரு இருக்கும். சரி, கருமூஞ்சி ஓரளவுக்கு குதிரக் கூத்து ஆடினாலும் அவனுக்கு இதுலெல்லாம் இஷ்டமில்ல. இவிங்க ஊரு நத்தம் பக்கதுல கொத்தம்பட்டி கிராமம். கயிறு திரிக்கிறதுதான் இங்க தொழிலே. கட்டுக் கயிறு ன்னு சொல்லுவாங்க. மக்க ஒரு பக்கத்துல தென்னைமட்டைத் திரியை வெச்சுக்குட்டு நீளமா இழுப்பாங்க, எடையிடையே திரிய வச்சு தேச்சுக்கிட்டே திரிக்கணும்.. அந்த தொழில்லதான் கருமூஞ்சிக்கு நாட்டஞ் ஜாஸ்தி. இவன் காலத்துலயே எம்சிஆரு படமெல்லாம் திருவிழாவுல ஓட்டுவாய்ங்க,. சனங்க அதப் பாக்க வெள்ளமாட்டம் ஓடுங்க. பொய்கால் பொய்ச்சுப் போச்சு அப்பவே! கருமூஞ்சி மவன்ந்தான் கருங்குதிரயோட அப்பன். இவனுக்கு கோடிசாமினு பேரு.. ஊரு கோடியில இருக்கற சாமிய வேண்டி மகன் பொறந்ததால கருமூஞ்சி, கோடிசாமினு பேர வெச்சான்..
கோடிசாமி நல்லா கருகருன்னு காக்கா மாதிரி இருப்பான். இழவு சாதி பிரச்சனை மட்டும் இல்லாங்காட்டி பயபுள்ள விசயகாந்த் மாதிரி கும்ம்னு ஆயிருப்பான்... சாதி சாதின்னு இவன அடக்கியே போட்டாய்ங்க,. பாவம் கோடிசாமி, சிறுத்து கருத்து போய்ட்டான்.. அப்படி இப்படியுமா காசச் சேத்து பொண்டாட்டி மூக்கி ய கட்டிகிட்டான். இதுகளுக்குப் பொறந்து தொலைச்சுது வேலைச்சாமி. கோடிசாமிக்கும் கொடுத்து வெக்கல.. வெள்ளனே போய்ச் சேந்துட்டான்.
அம்புட்டுத்தான். வேலைச்சாமி பரம்பரை கத. ஆளும் ஒசரமா கருப்பா இருப்பான் பாருங்க, அதனால ஊருக்காரங்க கருங்குதிரன்னே கூப்பிட்டாங்க.. இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, அந்த காலத்தில இருந்தே அய்யாரு முதக்கொண்டு குதிரக் கூத்துத் தான் ஆடுவாங்க, வேலைச்சாமி காலத்தில அங்கிட்டிங்கிட்டு ஏதோ நடக்கும். அதுக்கே பக்கத்து கிராமத்துல போட்டி வேற..
இப்படித்தான் பாருங்க, மகமாயி கும்பாபிசேகம் ஒருநா நடத்திச்சி. கிழவி இவன மேக்காப்பு போட்டு பொய்க்கால் குதிரயை ரெடி பண்ணி அனுப்பி வெச்சுது. இவனும் ராசாவாட்டம் போனான்.. குதிரைய தூக்கிட்டுத்தான் போகோணும். கூட ஆடறதுக்கு, இளத்தி, வெங்காயி, முனிம்மா அதுகூட சம்புலி, கடப்பாரை எல்லாம் போவாணுங்க,, எல்லாருமே கயிறு திரிக்கிறவனுங்கதான்.. கூத்து நடக்கறப்ப ஊருக்குள்ள சனங்க யாருமே வேலக்கி போகமாட்டாங்க.. ஆத்தா கோயிலுக்குள்ள இவனுங்கள தூர நிக்கவச்சே பாக்க உடுவானுங்க. ஏதோ பாத்தமா கும்புட்டமான்னு கிளம்பிப் போயிருவானுங்க..
ஆட்டம் போடற அன்னிக்கி, கம்பு, சிலம்பு, ஒயிலாட்டம், நாட்டுப்புற கெழவி பாட்டு அதுகூட குத்துப்பாட்டு கூட பாடுவாங்க.. ஊடால பொய்க்கால் குதிரையை இவங்க ஆட்டோனும். ஊடால பாட்டு பாடுவாங்க பாருங்க, அடா அடா.... நம்ம தமிழ்நாட்டுல நல்லது செத்துப்போவுது, உள்ளது வெளங்காம போவுது... ஒரு பாட்டோட நாலுவரி எடுத்து உடறேன் பாருங்க ஆசாமிகளா..
மச்ச முள்ள புள்ளக் காரி நீஉச்சங் காட்ட ஆட வாடிகுருவி ரெண்டும் ஆடக் கண்டுஊருக்குள்ள அலம்பல் தாண்டீ..
வயிர நிரப்ப ஆச மச்சான்எனக்குமானம் ரோசம் கூட வெச்சான்.மானம் ரோசம் இல்லாட்டினா நானும்ஓங்கூட வே பாசம் வெப்பேன்..
ஓங் கூட வே பாசம் வெப்பேன்...
பருவம் வந்த சின்னப் புள்ள நீயும்உருவம் கொஞ்ச சின்ன புள்ள.ஊரு சனங்க உன்னைப் பாக்கஆறு வருசம் ஆகுமடி..மூனு நாளா கஞ்சி இல்லமூஞ்சப் பாத்து சொல்லு புள்ளதேரு இழுக்க தெம்பில்லாமகூத்து கட்டப் போறேன் புள்ளகூத்து கட்டும் ஆளை நீயும்பாத்துக் கட்டுடி கூண்டுக் கிளியே!
இப்படி இடையிடையில வரிக வரும்.. எழுதுன ஆசாமி எப்பவோ செத்துப்போய்ட்டான், இன்னமும் பாட்ட மாத்தல.. இப்படி ஆடிட்டிருந்தவன் சும்மா இல்லாம, குதிரையை வெச்சு மேல்சாதி புள்ளைய இடுச்சுப் புட்டான். அதுக்கு வந்தது பாருங்க கோவம். ஓடிப் போய் அப்பன்கிட்ட சொல்லிப்பிடிச்சு. அவன் சும்மா உடுவானா? ஆள இழுத்து வந்த நாலு சாத்து சாத்தி குதிரையை ஒடச்சிப் போட்டுட்டானுங்க...
பாவம் கருங்குதிர, அத வெச்சுத்தா ஆட்டம் போட்டுட்டு திரிவான்.. அதையும் ஒடச்சி போட்டுட்டானுங்களே!
கவுண்டர் ஊட்டுல காயைப் பொறிக்கரதுக்கு போனான்.. கவுண்டரைப் பார்த்தான். அவர் காலுமேல காலு போட்டு இங்கிலீசு பேப்பரு படிச்சுட்டு இருந்தாரு. போய் நடுங்கிட்டு நின்னான்...
" அய்யே. காயி பொறிக்கிறதுக்கு வந்தேஞ் சாமி.."
கவுண்டர் வேலைக்காரியப் பாத்து, " ஏலா! தா, இவன் காயி பொறிக்கனுமா, தோட்டத்துக்கு கூட்டி போ, கிலோ போட்டு வித்துரு. டேய் குதிர காசுகீசு ஒழுங்கா குடுத்துரனும்டா, இல்லா நாளப்பண்ண பொறிக்கப்படாது.
" சரி சாமி"
கவுண்டச்சி ஊட்டு வேலைக்காரி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனா,. நல்லா விதவிதமா காய்கறி வானத்துல நட்சத்திரத்த அப்பி போட்ட மாதிரி இருந்திச்சி. பொறிச்சுட்டு கவுண்டர்கிட்ட போனான்..
" சாமி, வர பங்குனியில நம்ம ஊரு திருவிழா வருதுங். எனக்கு அன்னிக்கி குதிர வாங்கித் தரன்னு சொன்னீக. செஞ்சுபுடலாங்க்லா?"
" இருலா, பங்குனிக்கு உன்னு மாசக்கணக்கு கெடக்கு. இப்போ செஞ்சா அடுத்த கிராமத்துல போய் ஆடிப்புட்டு ஒடச்சுட்டு வருவ. எவன் வாங்கிக் கொடுப்பான்?"
" ஏதோ அன்னிக்கு வர வருமானத்த வெச்சு கலியாணம் பண்ணிப் புடலாம்னு இருக்கேனுங்க சாமி."
" தோ பார்றா, கலியாணமா?" வெளங்கிப்புடுமடா/// சரி சரி மண்டைய சொறியாத. அடுத்தவார வாக்குல வா. காசு தாரேன்.. ரெண்டு வட்டிடா..... பாத்து வாங்கு..
" சரிங்க சாமி"

கவுண்டச்சி ஊட்டு வேலைக்காரி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனா,. நல்லா விதவிதமா காய்கறி வானத்துல நட்சத்திரத்த அப்பி போட்ட மாதிரி இருந்திச்சி. பொறிச்சுட்டு கவுண்டர்கிட்ட போனான்..
" சாமி, வர பங்குனியில நம்ம ஊரு திருவிழா வருதுங். எனக்கு அன்னிக்கி குதிர வாங்கித் தரன்னு சொன்னீக. செஞ்சுபுடலாங்க்லா?"
" இருலா, பங்குனிக்கு உன்னு மாசக்கணக்கு கெடக்கு. இப்போ செஞ்சா அடுத்த கிராமத்துல போய் ஆடிப்புட்டு ஒடச்சுட்டு வருவ. எவன் வாங்கிக் கொடுப்பான்?"
" ஏதோ அன்னிக்கு வர வருமானத்த வெச்சு கலியாணம் பண்ணிப் புடலாம்னு இருக்கேனுங்க சாமி."
" தோ பார்றா, கலியாணமா?" வெளங்கிப்புடுமடா/// சரி சரி மண்டைய சொறியாத. அடுத்தவார வாக்குல வா. காசு தாரேன்.. ரெண்டு வட்டிடா..... பாத்து வாங்கு..
" சரிங்க சாமி"
கருங்குதிர ஆகாசத்துல பறந்தான்... பின்ன,, புதுக்குதிர வருதுல்ல... கெழவிகிட்ட சொன்னா அது சிரிக்கும்... நல்ல சோறு நாலு நாளைக்கு கெடைக்கும். மிச்ச காசு இருந்திச்சினா, மதுர போய்ட்டு வரணும். கெழவி ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்திச்சி.. அது மண்டையபோடரதுக்குள்ள மீனாச்சி அம்மனை கண்ணுல காமிச்சரனும்... பாவம்.. அப்பன் இருந்தப்பவும் அழுகுது. மகன் இருந்தப்பவும் அழுகுது. சந்தைல காயை வித்துட்டு வூட்ட நெருங்கினான்..
கெழவி கயித்துக்கட்டில்ல படுத்துகிட்டி இருந்துது. காதுல வெசயத்த போட்டுட்டம்னா கொஞ்சம் சந்தோசப்படும்னு கருங்குதிர வெசயத்தைச் சொன்னான்.. கெழவி அன்னிக்கித்தான் பொறந்துச்சு போல... மூஞ்சி இளசாயிருச்சு..
அன்னிலிருந்து கருங்குதிரைக்கு அயிரமீனுதான்,வெள்ள சோறுதான், ஒரே கூத்து தான் போங்க.. கவுண்டரு சொன்ன நாளு வந்திச்சி. நல்லா மாப்ள கணக்கா துணியைப் போட்டுட்டு கவுண்டரு ஊட்டுக்குப் போனான்.
" சாமி. குதிரைக்கு காசு கொடுக்கம்னு சொன்னிங்க.. "
" ம்ம்.... வட்டிப் பணம்டா... வெள்ளனே கொடுத்துடு. இல்லாட்டி ஊட்டை எழுதி வாங்கிப்புடுவேண்டா.... "
" இல்லசாமி. சரியா கொடுத்தறேன்."
" ஏ தேவி.. இந்த கருவாயன் வந்து நிக்கான். அந்த பணத்தைக் கொடுடி.."
தேவி கவுண்டரு சம்சாரம்.. நல்லா கொழுகொழுன்னு இருக்கும் கழுத... கவுண்டரு நல்லவரு. இந்தம்மா நேரெதுக்கே. காசை அவன் கையில லொட் டுனு திணிச்சுட்டு மொறைச்சுட்டு போயிருச்சு..
" தோ பார்றா... அடுத்தவன் காலை மிதிச்சேன், கைய மிதிச்சேனுட்டு குதிரய ஒடச்சுப் போடாதடா.. அம்புட்டுத்தான் சொல்லுவேன்."
" வரேங் சாமி"
கையில் காசு, கண்ணுல கனவு... கருங்குதிர இப்ப நெசமாவே குதிர ஆயிட்டான்.. ஒன்னும் புடிக்க முடியல. பயபுள்ள கெழவிகிட்ட போய் காசக் கொடுத்தான்.. கெழவி அம்புட்டு காசப் பாத்ததே இல்ல.. ரொம்ப இல்லசாமி, ரெண்டாயிரம் ரூவா. எங்கிட்டு போய் சம்பாரிக்க,? எப்படி அடைக்க?.. குதிரை ஆயிரம் ரூவாக்கு வாங்கிப்புடலாம். மீதி என்ன செய்யறது?.
" கெழவி. என்னை நம்பி கவுண்டரு ரெண்டாயிரம் ரூவா கொடுத்தாரு தெரியும்ல.. நம்ம பேரைக் கேட்டாலே கவுண்டரு நடுங்குறாரு தெரியுமா.. சரி சரி. சந்தையீல மாடன் இருப்பான். அவண்ட சொன்னா குதிர செஞ்சு கொடுப்பான்.. என்ன, கொஞ்சம் காசு செலவாகும். தண்ணி வாங்கி கொடுத்தா கொள்ள அழகா செஞ்சு கொடுப்பான்.. என்ன சொல்ற கெழவி?"
" தே, நேரா மதுரைக்கு போவோம்டா. அங்கிட்டுதான் நல்ல கட்டை விக்கிறானுங்க. மாடஞ் சொன்னான், மண்ணாங்கட்டி சொன்னான்னு காச கரியாக்காதே. "
" அதுவுஞ் சரிதான். "

கெழவி கூட கருங்குதிர போனான்... மதுரைக்கி. மீனாச்சி அம்மாவை பாத்துப்புட்டு, நல்ல பொய்க்கா குதிர வாங்கிட்டு ஊருக்கு வந்தாங்க... மனசெல்லாம் ஒரே சந்தோசந்தான். ஒன்னும் சொல்றாப்டி இல்ல... மதுரைக்கு போனப்போ ஆத்தாவ கூட்டிட்டுபோய் ஓட்டல்ல புரோட்டா வாங்கிக் கொடுத்தான்... கெழவி இதுக்கு முன்னாடி தின்னதே இல்ல. நமுக்கு நமுக்குனு ஒரே மூச்சுல தின்னுபுடுச்சு.. ம்ம்.... இதுகளுக்கு இப்படியும் ஒரு சந்தோசந்தான்..
உன்னும் ஒருவாரந்தான் இருக்கு. பங்குனி திருவிழாவுக்கு... பதினாலு நாளு ஊரே கலகலனு இருக்கும்.. தெனமும் கூத்து கட்டுவாங்க... பொய்க்கால் குதிர ஆட்டம் ஒருவாரமாவது நிக்கும்.. எப்படியும் ஐநூறு ரூவா அடிச்சுப்புடலாம்.. கருங்குதிர நல்லா கணக்கு பன்னீட்டு இருந்தான்.
திருவிழா வந்திருச்சி,. புது சட்டை, புதுவேட்டி, புது பொய்க்கா குதிர. எல்லாமே புதிசு. சம்புலி ஊட்ல போயி குதிரைக்கு அலங்காரம் பண்ணீட்டு இருந்தான். ரெண்டு பேருமா சேந்து கடப்பாரையைக் கூட்டிட்டு போனாங்க.. விழா கமிட்டிக் காரனுங்க திடீர்னு இவனுகள தனியா கூப்புட்டானுங்க..
" ஏ! இந்த தடவ கூத்து இல்லப்பா, "
" என்னா சாமி. இப்படி சொல்லி வயித்துல ஆசீட்டு ஊத்துறீங்க.. இத வெச்சுதானே எங்களுக்கு பொழப்பே நடக்கி."
" ஏ என்ன வெளயாடரயா? என்னிக்காச்சி கூத்து நடக்கும். அது உனக்கு வருசம் பூராவா கஞ்சி ஊத்துது. வெலங்காத பயலுகளா... இந்த வருஷம் சினிமா ஓட்டறம்டா..""
" அப்பறம் எதுக்கு சாமி எங்கள வரச்சொன்னீங்க"
" வந்திட்டீங்கல்ல.. அன்னதானம் நடக்கும். போய்த் தின்னுட்டு ஊட்டுக்குப் போற வழியப் பாருய்யா... "
" சாமி.."
போய்ட்டாரு... கருங்குதிரைக்கு இப்படி ஒரு சோதனை வரும்னு யாருமே எதிர்ப்பாக்கல. பாவம். கவுண்டரு கொடுத்த ரெண்டாயிரத்த அப்படியே செலவு பண்ணிப்புட்டான்... ஏதோ கடை கன்னி வெச்சிருந்தா பொழச்சிருப்பான்.. எழவு கூத்து கூத்துனு இப்படி வாழ்க்கையில கூத்து அடிச்சுப் புடிச்சே இந்த பாழாப் போன சினிமா... அசராம எப்பவும் இருக்கற கடப்பாரை அழுதே போட்டான்.
மெதுவா நடந்து ஊட்டுக்கு வந்தானுங்க.. கருங்குதிர கெழவிகிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தான்...
" கெழவி, தா கெழவி,, இந்த வருஷம் கூத்து இல்லியாம்.. சினிமா ஓட்டறானுங்களாம். ஏமாத்திப்புட்டானுங்க படுபாவிங்க" அப்படின்னே அழுதுட்டான்... கெழவி கயித்துக் கட்டில்ல படுத்திருந்துச்சு..
" கெழவி, சோறு போடு , அந்த நாய்ங்க அன்னதானம் பண்றாங்க. என்னால அது சாப்பட முடியாது. எந்திரி கெழவி."
கெழவி அசரவே இல்ல. இவன் போய் உலுக்குனான்.. அது நிரந்தரமா போய்ச் சேந்திருச்சு..
கெழவி சந்தோசமாத்தான் செத்துருக்கு... பாவம் கருங்குதிர. அத நம்பிதான் இருந்தான். போய்ச் சேர்ந்திருச்சி.. அதோட கையில பழைய குதிரையோட மேல்துணி கெடந்திச்சி.
கருங்குதிர குதிரக்கட்டையே வெறுத்துப் பார்த்தான்.

அன்று
வென்றவர்களை
அநியாயமாக
கொன்றார்கள்
இன்று
கொன்றவர்கள்
அநியாயமாக
வென்றார்கள்...

3.5.07

விதிகள்

|

விதிகளை வென்றதாகச்
சொல்லப்பட்டது.
இலக்கணங்கள்
செத்துக்கொண்டிருக்கின்றன....

3.5.07

கவிதை

|

நாட்டிலே நூறு கவிகள்.
ஆளுக்கோர் புத்தகம்
ஆயிரம் அச்சிட்டனர்.
நூறு புத்தகங்கள்
விற்று தீர்ந்தன.!!

2.5.07

விதிகளை உடைக்கவா?

|

நொடிகள்
மழையிலழிந்த கோலமாய்
உருகிக்கொண்டிருந்தன.
காலங்கள் வழிந்துகொண்டிருந்தன.

பெருக்கெடுத்து ஓடும்
வியர்வைகள்,
முகச்சுருக்கத்தைக்
காணாமல் ஓவியமாய்த்
திகழ மறுத்தன.
குங்குமத்தைக் கலைப்போமா
என்று இல்லாத பொருளைத்
தேடி அலைந்தன.

கண்கள்
கண்டவர்களைத் தேடின.
காட்சி பிழையானது.
நெஞ்சம் பெருத்து இறங்கியது.
காற்றோ சுவைத்து மகிழ்ந்தது.

ரணம் சூழ்ந்த காலத்தை
மறந்துபோய்
மீண்டுமொரு மீண்டெழுதல்
கிட்டுமா என்று
படபடக்கிறது இமைகள்.

ஏழாவதாக கிட்டய சுவை
மீண்டும் வருமா
என்று தவிக்கிறது அதரம்.

வீணில் கழிகிறது
தேகம்
கனவுகள்
வெடிக்கிறது இரவில்..

என்ன செய்வது?
உறவுகள் சொப்பவில்லை
மறுஉறவுக்கும் ஒப்பவில்லை.

உணர்வுகளைப் புதைத்து
அதன் மீதமர்ந்திருக்கிறார்கள்.

நான் எழுந்திடவா ?
தூங்கிவிடவா ?

நானும் கெல்லி கிளார்க்ஸனும்

சிறு பிராய பொழுதினில்
மழைத்துளி கண்டு
ஒதுங்குவேன்.
கிரகண காலத்தைக்
கண்டஞ்சி ஜன்னலின்
உட்புறம் அமர்ந்து ரசிப்பேன்.
வானவில்லின் நிறங்களை
எண்ணி வர்ணக்கலப்பு செய்வேன்.
தூக்கம் வந்தால்
வேப்பமரத்தின் மடியில்
நித்திரை ஆட்கொள்ளுவேன்

இன்றோ,
முகிலெடுத்து
என் மனதில் ஒளித்து
மழையின் கண்ணீரைக்
கண்டு ரசிக்கிறேன்
சந்திரனை நிறுத்தி
கிரகணத்தைக் கொஞ்சம்
தள்ளிப் போடுகிறேன்
வானவில்லைக் குடைந்து
அதைப் பூவாய் சூட்டிக் கொள்ள
வில்லெடுத்து புறப்படுகிறேன்.


பிராயமாற்றத்தில்
ஏக மாற்றங்கள்.
என் கண்களில் விழுந்த
மழைத்துளி இன்றும்
நினைவிருக்கிறது எனக்கு,.
எளிதில் மறக்கக் கூடியதல்ல
சிறுவயது காதலனை...
இன்று நான் எத்தனையோ
கனவுகளில் கன்னியாக
இருந்தாலும்..

2.5.07

Mr.Bean's Holiday

|

மிஸ்டர் பீன் பட வரிசைகளை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் வயிறு குலுங்கச் சிரிக்கும்படியான முழுநீள காமடிப் படம் கொடுத்திருக்கிறார்கள்...
ரோவன் பற்றி சொல்லவேண்டியதில்லை.. என் வாழ்நாளில் ஒரு நடிகரைப் பார்த்ததும் சிரிப்பு வருகிறது என்றால் அது ரோவனை மட்டுமே குறிப்பிடுவேன்... இனி அவர் பீன் என்றே அழைக்கப் படுவார்..
அதே கார் ; அதே கோட்டு சூட்டு... எல்லாம் அதே! லண்டனில் ஒரு பரிசுப் போட்டியில் வெற்றி பெரும் பீன் அதன் பரிசாக ஒரு டிஜிட்டல் வீடியோ கேமிராவையும் பாரீஸிலுள்ள கான்னஸ் பீச்சுக்கும் செல்ல தேர்வாகிறார்.. கிறுக்குத்தனமான நடவடிக்கையால் ஒரு பயணியையும் அவரது மகனையும் பிரித்துவிடுகிறார். அந்த மகனும் பீனும் அடுத்த ஸ்டேசனில் இறங்கி நிற்கும்போது அந்த பயணி அடுத்த ரயிலில் செல்கிறார்... அந்த ரயில் நிற்காமல் சென்றாலும், அவர் எழுதிவைத்த போன் எண்ணை கண்ணாடி வழியே காண்பிக்க, பீன் , தான் கொண்டுவந்த கேமிராவின் உதவியால் அதை வீடியோ எடுக்க, இறுதியில் அந்த போன் எண்களின் கடைசி எண்ணை வீடியோவில் சரிவர பதிக்காமல் போனார்... பின்னர் இருவரும் அடுத்த ரயில் ஏறுவதற்குள் மறந்தவாறு போன் செய்யும் இடத்தில் தனது பர்ஸையும் பாஸ்போர்ட்டையும் வைத்துவிட்டு ஏறிவிடுகிறார் பீன்.. டிக்கெட் இல்லாததால் அடுத்த ஸ்டேசனில் இறக்கிவிடப்படுகின்றனர், பின்னர் இருவரும் மிகவும் சிரமப் பட்டு பணம் சேகரித்து ஓரிடத்தில் இருவரும் பிரிந்து பின் கதாநாயகியுடன் சேர்ந்து, ........ இறுதியில் அந்த பயணியிடம் அவர் மகனை ஓப்படைத்தலும் கான்னஸ் பீச்சுக்குப் போய் சேர்தலுமே கதை...
இடையிடையே நடக்கும் கூத்துக்கள் அடேயப்பா!! நான் மூன்றுமுறை பார்த்தேன்... எல்லா இடத்திலும் சிரிப்பு மீண்டும் மீண்டும்.... பட ஆரம்பத்தில் பரிசுப் போட்டி அறிவிப்புகளோடு ஆங்கில டயலாக் முடிந்துவிடுகிறது.. பிறகு வசனமே இல்லை. முழுவதும் இசைதான். காமிரா கையில் கிடைத்ததும் பீன் செய்யும் லோலாயங்களுக்கு அளவே இல்லை.. ஒவ்வொரு காட்சியும் அதிரடி சிரிப்பை வரவழைக்கிறது.
ரயிலை மிஸ் செய்வதும், ரெஸ்டாரெண்டில் பிடிக்காத உணவை சாப்பிடுவதுபோல நடித்து அடுத்தவர் கைப்பையில் உணவைப் போடுவதும், அந்த பயணியிடம் காமிராவைக் கொடுத்து படமெடுக்கச் சொல்லுவதும், அப்பப்பா!! என்ன ரகளை!!! அதோடு விட்டாரா? ஒரு எண் விடுபட்டுவிட்டது என்பதால் இருக்கும் எல்லா எண்களுக்கும் போன் செய்து யாரென்று கேட்பது... தவறிப்போய் பாஸ்போர்ட்டையும் பர்ஸையும் விட்டுவிட்டு, பாட்டுப் பாடி பணம் சேகரிப்பதும் காமடியில் கலக்கல்...
ஒரு பஸ் டிக்கெட் தவறி கீழே விழுந்து அது ஒரு கோழியின் காலில் ஒட்டிக்கொண்டு அதைத் துரத்தப் போய் கோழிப்பண்ணைக்கே செல்வதும் அதைப் பிந்தொடர்ந்து சாலையோரத்தில் யாராவது தன்னை ஏற்றிக் கொள்ளமாட்டார்களா என்று கைகாட்ட, வெகுதூரத்தில் ஒரு வண்டி மிகமிக மெதுவாக வர, அதற்க்காக காத்திருந்து காத்திருந்து, ஒருவழியாக அந்த வண்டி வந்துசேர,, அதையும் பீன் விடாமல் லவட்டப் பார்க்க, வண்டியின் உரிமையாளர் நடந்துவந்தே அந்த வண்டியைப் பிடுங்குவார் பாருங்கள்..... காமடியின் உச்சம் இது... கண்களில் தண்ணீர் வர சிரித்துப் பார்த்தோம்... அத்தனை காமெடி... இப்படியொரு காமடியை கண்டதே இல்லை யாம்..
கதாநாயகி.... என்ன ஒரு அழகு... (சூப்பர் ஃபிகரு மச்சி) திரைப்படத்தில் நடிக்கும் நடிகையாக வருகிறார்... பீனின் காரில் இருவரும் பயணிக்க ஒரே கூத்து... இறுதியில் தான் நடித்த படத்தில் ஒரு முத்தக் காட்சி இடம்பெறவில்லை என்று வருத்தமாய் இருக்க (ப்ரிவியூவில்) பீன் தான் கொண்டுவந்த காமிராவில் ஏற்கனவே எடுத்த கதாநாயகியின் மூவி க்ளிப்புகளை ஆப்பரேட்டர் அறைக்குள் சென்று ஓட்டி விடுகிறார்... இதன்காரணமாக அந்தப் பையனை அவனுக்குரிய பெற்றவனிடம் ஒப்படைப்பதும் இங்கேதான்... அருமையாக கதை முடிந்து இருக்கிறது.. பீனின் கனவுப் பயணமான கான்னஸ் பீச்சும் தியேட்டருக்கு அருகே இருக்கக் கண்டு அவர் செல்லும் விதம் கூட அருமை...
படம் பார்க்க இருப்பவர்கள் கைக்குட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டும்... சிரித்து சிரித்து கண்களில் நீர் வரும் நிச்சயமாக... வயிறுவலி மாத்திரை அவசியம் வேண்டும்...

தூறல்களில்
தொலைந்துபோனது
துவண்டு கிடக்கும்
துற்வாசர்களின்
துஞ்சல்கள்.

Subscribe