கல்லறைகூவல்

தேய்ந்துபோன வானத்தினடி
தேயத்துடிக்கிறது
தேனிலா

முட்டி மோதி விருட்சமாய்
மலர நினைக்கும் மேகத்தை
விலக்கிவிட்டு புணரத் துடிக்கிறது
பகலவனும் பல்லவியும்.

இடையிடையே உதிர்ந்த
ரத்தங்களைப் பொறுக்கி
எடுத்துக் கொண்டு
பொத்தி வைக்கிறது
நிலமெனும் அரக்கி.
நெஞ்சில் புண்களை விதைத்து
அறுவடை செய்யும் கிழத்தி



புற்களுக்கூடான பாதையில்
நடை தளர்ந்து
போய் நிற்கிறது
ஒரு ஆவி
அதன் கையில் விண்ணை
வெடிக்கச் செய்யும்
ஒலிப் பெருக்கி.

அறைகூவலுக்குத் தயாரான
நிலையில், சொறிந்துகொண்டிருந்த
இரத்தப் பிழம்புகளை
வெறித்துப் போய்
பார்த்துக் கொண்டே
கண்களை மிரட்டுகிறது
கல்லறையை வாடகைக்குப்
பிடித்துத் தொங்கும் பேய்.

முருங்கை மரத்து நண்பர்களும்
நெஞ்சு பிளந்து தின்னும் எதிரிகளும்
உறங்கியே உடைந்துபோகும்
உறவினர்களும்,
இன்னும் பல இத்யாதிகளும்
இரைக்கும் கூவலை
எதிர்நோக்கி இருந்தார்கள்

பூச்செண்டு பறித்த கதையுண்டு
கரமிழந்தவர்கள் காதல் கேட்டதுண்டு
கணவன் இழந்து சிரித்தவர்கள் பார்த்ததுண்டு
இதை மொண்டு எடுக்க பலருண்டு

ஒரு சொல் சொல்லிற்று.
ஏற்கனவே இறந்துபோன பேய்

வாழ்வது சாவது மேலது.

முட்ட முடியாமல் -கைகள்
வெட்டு பட்ட வீரர்கள்
ஒற்றைச் சூரியனாய்
உள்நுழைகிறார்கள்
கல்லறைக்கு...
புதிய உறுப்பினர்கள்
கூடிவிட்டது சுடுகாட்டில்..

Comments