மந்தைவெளிக்கு அருகே
மங்கை ஒருத்தி இருக்காளாம்.
மச்சமுள்ளவனைத் தொட்டு
பிச்சை போடுவாளாம்
வாருங்களடா செல்லுவோம்.

கையில் ஊறித் திளைக்கிறது
பெற்றவனின் வியர்வைகள்.
இன்னுமென்ன சேஷ்டைகள்?
துண்டு சிகரெட் ஒன்று எடு
எரித்துப் பார்ப்போம் குலைகளை.

காக்கிச் சீனி விற்பவன்
இருந்தால் பிடித்து
நகநுனியில் சிறைபிடி!
கிராமுக்கு மேலே
பணம் கொடுத்து
நட்சத்திரங்களைப் பிரிப்போம்.

போகும் வழியில்
பானம் இருந்தால்
கொஞ்சம் இடுக்கில் வை
அவளோடு ஊற்றிக் கொள்ள..

இன்னுமென்ன உலகில்
திளைத்துக்கொண்டு இருக்கிறது?
தேர்ந்தெடு. விதைப்போம்.

" போகும் வழியில்
கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"

அது எதற்கு? போதைப் பொருள்..!!
என்னோடு வா,
கொஞ்சம் காசு, நிறைய சுகம்
காட்டுகிறேன்.

18.4.07

கல்லறைகூவல்

|

தேய்ந்துபோன வானத்தினடி
தேயத்துடிக்கிறது
தேனிலா

முட்டி மோதி விருட்சமாய்
மலர நினைக்கும் மேகத்தை
விலக்கிவிட்டு புணரத் துடிக்கிறது
பகலவனும் பல்லவியும்.

இடையிடையே உதிர்ந்த
ரத்தங்களைப் பொறுக்கி
எடுத்துக் கொண்டு
பொத்தி வைக்கிறது
நிலமெனும் அரக்கி.
நெஞ்சில் புண்களை விதைத்து
அறுவடை செய்யும் கிழத்திபுற்களுக்கூடான பாதையில்
நடை தளர்ந்து
போய் நிற்கிறது
ஒரு ஆவி
அதன் கையில் விண்ணை
வெடிக்கச் செய்யும்
ஒலிப் பெருக்கி.

அறைகூவலுக்குத் தயாரான
நிலையில், சொறிந்துகொண்டிருந்த
இரத்தப் பிழம்புகளை
வெறித்துப் போய்
பார்த்துக் கொண்டே
கண்களை மிரட்டுகிறது
கல்லறையை வாடகைக்குப்
பிடித்துத் தொங்கும் பேய்.

முருங்கை மரத்து நண்பர்களும்
நெஞ்சு பிளந்து தின்னும் எதிரிகளும்
உறங்கியே உடைந்துபோகும்
உறவினர்களும்,
இன்னும் பல இத்யாதிகளும்
இரைக்கும் கூவலை
எதிர்நோக்கி இருந்தார்கள்

பூச்செண்டு பறித்த கதையுண்டு
கரமிழந்தவர்கள் காதல் கேட்டதுண்டு
கணவன் இழந்து சிரித்தவர்கள் பார்த்ததுண்டு
இதை மொண்டு எடுக்க பலருண்டு

ஒரு சொல் சொல்லிற்று.
ஏற்கனவே இறந்துபோன பேய்

வாழ்வது சாவது மேலது.

முட்ட முடியாமல் -கைகள்
வெட்டு பட்ட வீரர்கள்
ஒற்றைச் சூரியனாய்
உள்நுழைகிறார்கள்
கல்லறைக்கு...
புதிய உறுப்பினர்கள்
கூடிவிட்டது சுடுகாட்டில்..

காற்றோடு வாளேந்தி
குருதி வடிக்கப்
போராடுகிறது
என் மைத்துளிகள்

ஈரக் குமிழ்களை
எச்சிலில் அடக்கிவிட்டு
நமட்டுச் சிரிப்போடு
சூரியனைத் துளைத்தெடுக்கும்
என் வியர்வையின் பலன்கள்

உள்ளூர அடக்கியிருக்கும்
உறுப்பிடியில்லா பசியை
ஓர் எழுத்தில் அடக்க
முயற்சிக்கும்
என் காகிதத்தின் கோடுகள்

பின்னிரவை பின்னி
சரமாக்கி நெஞ்சில் இட்டு
சந்திரனைத் தேடியலையும்
என் கற்பனைச் சிறகுகள்

பிரபஞ்சத்தை தாளில்
அடைத்துவிட்டு
எல்லை தேடிக் கொண்டிருக்கிறது
என் பேனாவின் முனைகள்

ஓர்விழிப் பார்வையும்
ஓராயிரம் கைதட்டல்கள்
நிமிர்ந்த நெஞ்சு
முரண் பட்டு உதிக்கும்
வடக்குச் சூரியன்கள்

எத்தனையோ எழுதிக்
கிழித்துவிட்டு
இது கவியோ என்று
நினைத்தேகுகிறது
புடைத்துப் போட்ட
மனப் புற்கள்.

அரங்கத்தில் நுழைந்துவிட்டான்
அந்த நடிகன்
அவன் நடிப்பு மிக அருமை
துடிப்பு மிக்கது. அல்லது
துடிக்கச் செய்யும் நடிப்பு.

கைகள் தட்டி வரவேற்கலாம்
முடியவில்லை
எழுந்து நின்று பாராட்டலாம்
வலுவில்லை
களித்தவர்கள் காணலாம்
இரவலில்லா இன்ப லோகத்தை..

நாடு போற்றும் நடிகனாகிவிட்டான்
திரைப்படங்கள், விளம்பரங்கள்
பேனர்கள், பலகைகள்
இல்லாத இடமில்லை
இவனும் இவன் பிரச்சாரமும்.
ஒரே வாணவேடிக்கை தான்

இவன் திரைப்படங்களைக்
கண்டு களித்தவர்கள் சிலர்
படம் பார்க்கவில்லை என
சாதிக்கும் சிலர்
இதற்கிடையே
சிரித்துக் கொண்டே பலரை
அரங்கத்தினுள் நுழையவைக்கிறான்
இந்த நடிகன்

பயணங்கள் தொடர்கிறது
அரங்கங்கள் நிறைகிறது
கணக்கெடுப்புகள் தொடர்கிறது
இவனை வெல்ல யாருமில்லை
இரண்டு ரூபாய் செலவும்
கட்டுப்பாட்டுணர்வும் தவிர..

14.4.07

ஆறா ரணம் - செவிகள்

|

கழிநெடிலடிவெண்பா

புள்ளிசை கேட்டறிந்த காதிலே நீயும்தான்
உள்ளிருந்து ஊற்றுகிறாய் ரத்தக் குழம்பு
கமழக் கமழச் கவிகள் படித்ததை
என்செவி உற்று அறிந்ததே கேளாயோ
உன்வார்த்தை கண்டென் செவிமுடி எல்லாம்
நடனங் களித்த கதைமாறி யின்று
சடலமாய் போனது வெந்து அவைகள்
அதரவில் லாலே குதறவும் கொண்டாய்
பதமொரு காதல் பிழியவும் கண்டாய்
நிதமொரு காவியம் காதுகள் கேட்கும்
தொளைத்து விடுவாயோ நீகாதல் கொண்டு
செவிகளை மீறி நுழைகிறது அன்று
புவியைச் சருக்கிய வார்த்தைக ளாலே
கவிதைகள் கண்ணீர் விடுமேபார் காகிதம்
சாகும் குருதி படியுமடி வற்றி
கதையை நிறுத்தடி சற்றே!

ஊருக்குள்ள ஒண்ணுமில்ல
ஊத்திக்கவோ தண்ணியில்ல

பல்லுங் காஞ்சி பதிநாளு ஆச்சு
பத்துங் கரஞ்சி போயாச்சு

என்ன எழவுக்கு இந்த கொண்டாட்டம்?

மீசை முறுக்கி வாயோரம்
காச மெரட்டி கழுத்தோரம்
ஓச இல்லாம கத்தி வெச்சாப்ல

வேணுமோடா எனக்கு?

வெளக்குத் திரிக்கு லோல்பட்டு
பக்கத்து வீட்டுக் காரன்கிட்ட
பத்து ரூபா கடன் நான் வாங்க,

வட்டியில்லாம எங்கிட்ட
தருமகர்த்தா அன்பளிப்பா?
வேணுமோடா எனக்கு
சித்திரைக் கனி
நிறுத்துக்கோடா
பணம் பொறட்றது இனி.

9.4.07

நாளைய காலை....

|

அமரப்பட்ட இடத்தில்
பல நினைவுகள் அமர
கண்கள் குளித்தது;
தேகமும் கூட.

என்னுள் இருந்து
பயிர் செய்தவன்,
தப்பிவிட்டான்.
இனியென் கண்களுக்கு
முத்தமில்லை;
வெறும் கனவுகள் வருமோ?

என் கரங்களின் கணையாழிகள்
ஆவேசமாக பிடுங்கியெடுக்கப்படுகிறது
இதயக் குழாய்கள் பிடுங்குவதைப்போல..

ஊற்றிய தண்ணீரில்
என் கோலம்
அலங்கோலம்.
புள்ளி வைத்த பொடிகள்
கரைந்து போன கோலம்.

கழுத்தோடு
அணைக்கப்பட்டிருந்த என்னுயிர்
கொலை செய்யப்பட்டது.
கவனித்துக் கொண்டிருந்த
மரண ஜீவன்
கண்ணீர் விட்டது.

திருப்தியாக சென்றுவிட்டார்கள்
புண்ணிய வதிகள்.
திருப்தியற்று கிடக்கிறேன்
புண்பட்ட விதிகள்.

நாளைய காலை,
வாசலில் கூவிக் கொண்டிருக்கும்
பூக்காரியிடம் வாங்கி
சொறுகிக் கொண்டேன்
இருமுழ மல்லிகைப் பூக்கள்!

5.4.07

வேவுகணைகள்

|

உன் மீது எனக்கு
அதீத அன்பு
தின முத்தங்களால்
மனம் நிறைந்து
புதுமலராய் நிற்கிறேன்.
என் முகம் பார்க்கும்
இத்தனை பேர் மத்தியில்
உன் சிலரால் மட்டுமே
காதல் புரிய முடிகிறது.

உனக்கெனவே
ஒதுக்கப்பட்ட இடத்தில்
எனக்காக கவியெழுதுகிறாய்
கதை பேசுகிறாய்.
சில சமயங்களில் கிண்டலாக
கொஞ்சுகிறாய்.
ஏதாவதொரு நொடியில்
கோபம் வந்தால்,
என் கண்ணசைவில்
நிறுத்திக் கொள்கிறாய்!

அவ்வப்போது
விண்கற்கள் தாக்கும்.
உனக்கும் எனக்குமுண்டான
ஈர்ப்புவிசை அறியாமல்.

வேவு பார்க்கும்
சில கழுகுகள்,
நம் உறுதியறியாது
கண்கள் பொசுங்க
ரணப்பட்டு போகிறது.

நம் பந்தம் பிரிக்க முடியாதது.
வேவுகணைகள்
எத்தனை வந்தபின்னும்....

யாருமற்ற அநாதை வினாடிகளில்
உதறப்பட்ட அங்கத்தால்
சிதறப்பட்ட பொருள்கள்
ஒரு குப்பைக்கூளமாய் கிடந்தது.

யோனியிலிருந்து குருதி வடிந்து
தொடைக்குக் கீழ் படிந்து
காய்ந்து போய்க்கிடந்தது.
ரணத்தையும் ரத்தத்தையும்
தாங்காமல் இழுத்து, போயிருக்கிறாள்.
பிதுக்கிய பிண்டத்தை
விட்டெறிந்திருக்கிறாள்.

குருதி படிந்தவாறு கிடந்த
உயிருள்ள ஒரு பிண்டம்
ஊளையிட்டது.
காற்றை வெறுத்துப் போய்
அலறியிருப்பது அறிகிறேன்.

வெடத்துப்போன உள்ளத்தால்
கிடத்திய சடலத்தை
வெளிவந்த கரு முன்னே
எரிக்க முற்படுகிறேன்.
முன்னதாக
அந்த பிண்டம் மீண்டும் அழுதது.

இம்முறை
காற்றுக்காக அல்ல
வயிற்றுக்காக.

என் செய்ய?

என் மடி கிடத்தி
முலை எடுத்து
தின்னச் செய்கிறேன்.
மென்காற்றின் ஓசை
என் செவிக்குள் அலையாக...

யாரும் பார்த்துவிடக்கூடும்
வெகுவாக பசியடக்கு என்று
நடுக்கத்தோடு சுற்றியது சிரம்.
மெல்ல அருகினில் வந்து
தன் கையை எடுத்து
கும்பிட்டது ஒரு கரம்.

நித்திரை ஆழ்ந்த
பிண்டத்தின் தலைமுகர்ந்து
கண்களில் நீர்கோத்தேன்.
வணங்கிய கரங்களின்மேல்
துளிகள் விழுந்தன...

3.4.07

ஆறா ரணம் - கண்கள்

|

ஊறிக்கொண்டிருக்கும்
சேற்றுத் தாமரையைக்
கண்ணால் காண சகிக்காமல்
முற்கள் பொருந்திய மலராகச்
சென்று விடுகிறாய் பார்வை குருடாய்...

ஆற அமர்ந்து
கண்கள் பேசட்டுமே என்று
நினைத்தாலோ நீ
விழிகளை மூடிவிட்டு
மெளனம் பேசுகிறாய்
இதனால்
என் கண்களில் குருதி வடிவது
உனக்குத் தெரியும் என்றாலும்
உறுதியாக ஒரு வார்த்தை சொல்
இருக்கவா ? போய்விடவா ?

பார்த்த சமயங்களில்
கணைகளைத் தொடுத்தாய் கண்ணுக்கு
பாராத சமயங்களில்
அமிலம் ஊற்றுகிறாய் அதே கண்ணுக்கு

ஆடி அணிந்து பார்த்துக்கொள்ள
என் இதயமொன்றும்
பார்வை இழக்கவில்லை
அதனால் இரணத்தைத் தீர்க்க
உன் எச்சிலை என் விழிகளுக்குள்
ஒரு முறையாவது ஊற்றச் சொல்லுகிறேன்

நீ விழிகள் திறக்கும் போது
என் இதயம் இயங்குகிறது
மூடும்போது
குழாய்களில் கொழுப்பு சேருகிறது.
என்றுமே என் கண்களுக்கு முன்
நீ மூடியே கிடக்கிறாய் உன் மனம் போல

விக்கலோடு இயங்குகிறது
உன் பார்வை படாத என் இதயமும்
ஒரு சோடி கண்களும்...

குருதியைக் குடித்துக்கொண்டு
இறுதியைத் தேடி அலையும்
அகோர நெஞ்சம் இவனுக்கு..
களத்திலே எதிர்க்க வலுவில்லை ;
மறைமுகமாய் தாக்கிவிட்டு
தான் யாரென்று அறியாமலிருக்கிறான்..

தன் வீடு நன்று என்றாலும்
எதிர் வீட்டை சேதப்படுத்துகிறான்
எதிரியைக் கூட மன்னிக்கலாம்
என்று சொல்வார்கள்
எதுவும் இல்லாதவனை
எப்படி மன்னிப்பது?

மதில்களில் கீறல் ஏற்படுத்தி
வீட்டைக் காயப்படுத்தும்
வீணனுக்கு வேலையே
தென்படும் இதயங்களைப்
பிழிவதுதான்..

மென்மை என்ற அர்த்தம்
நெஞ்சில் இல்லை.. ஆனால்
வேசம் மட்டும் மென்மையாகப்
போடத் தெரிகிறது
இந்த கூனிக்கு..

தன் வீட்டுப்பிள்ளைகளுக்கு
பண்டம் வாங்கித் தருகிறான்
தெருவில் சுற்றித் திரியும்
மலர்களை, பிண்டம் இல்லாமல்
நசுக்கத்தான் பார்க்கிறான்..

இலக்கு என்பது இங்கே
இல்லை என்றாலும்
போட்டிக்கு வந்து
புறமுதுகிடப் போகிறான் பார்!

நானும் ஓவியாவும்

விழுதுகளின் நீளமும்
வேர்களின் ஆழமும்
இலைகளின் பசுமையும்
இதமாகக் கொண்டு
கிளைகளைப் பரப்பி
எண்ணற்ற விழுதுகளைப்
பெற்றிருக்கிறது
தன்னலமில்லா ஆலமரம்

ஆழ ஊன்றி நிற்குமிந்த
ஆல மரத்தின்
அடிவேர்களை
நோண்டப்பார்க்கிறது
நெஞ்சமில்லா உயிர்கள்

மரத்தைச்
சாய்ப்பதாக நினைத்து
இடுக்குகளில் படர்ந்திருக்கும்
அழகிய பூக்களையும்
கொத்தப்பார்க்கிறது
வஞ்வம் மிகுந்த வண்டுகள்..

வேர்களைப் பிடுங்க இருக்க
பூக்களைக் கொத்துவது
எந்த விதத்தில் ஞாயம்?

புன்னகையை மறந்து
தன்னிலையைத் துறந்து
கொத்தும் வண்டுகளுக்கு
விழுதுகளின் ஒரு அடி போதும்//

ஆலமரம் விழித்துக்கொண்டால்
துச்சமான இவ்வண்டுகளின் கதி
என்ன என்று யாருக்குத் தெரியும்?

விழுதின் ஒரு நுனி
கண் விழித்துக்கொண்டது,
கணைகள் தொடுக்க புறப்பட்டுவிட்டது.

இனியும் வேர்களை நோண்டினால்
அக்னிக்குஞ்சுகளுக்கு
பலியாகவேண்டியதுதான்...

Subscribe