தொங்கவிடப்பட்ட மானம்

பின்னலாடைகளுக்கு
உயிர் கொடுக்கும் தேர்ந்தவள் நீ

வேகமாக இயங்கும் கரங்களினால்
காணக் கூடாதவைகளைக்
காணத் துடிக்கிறது
என் கருவாட்டுக் கண்கள்
உன் மேனியின் ஈர்ப்பும்
அதன் மேல் படர்ந்திருக்கும்
ஆடையின் விலகலும்
என் நெருப்புக்குத் தீனியாக
மாறிவிட்டிருந்தது,

என் கரங்களின் தீண்டலால்
எழுந்து வருவாய்
நமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில்.
பஞ்சுக் கொடோனுக்குள்
பிஞ்சு மனதாய் நுழைவாய்.
பணிக்காகத்தான் என்று நீயும்
எனக்காகத்தான் என்று நானும்
நினைத்திருப்போம்.

அலைகழிக்கப்பட்ட
காற்று அறியும், அங்கே
அரங்கேறக் கூடாதவைகள்
அரங்கேறியது என்று.
உன் முனகலுக்குப் பூட்டாக
வெட்டுபட்ட துணிகள் கிடக்கின்றன.
இல்லையேல் வெட்டுபடும் சம்பளபாக்கி.

ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்ததும்
ஏற்பட்ட சலசலப்பில்
ஒரு லோகத்தை விட்டு
கலைந்து எழுவோம்.
கலைந்துபோய் நீயும்
கலையாக நானும்.

எனது அடுத்த இலக்கெல்லாம்
ஆடைகளை ஏற்றுமதி செய்வதுவும்
கூலியாக ஆடைகளைக் கலைப்பதுவும்////

என்றாவது ஒருநாள்
உன் மனம் பதறினால்
வீதியில் நடந்து செல்.
'சிங்கர், கைமடி*
ஆள்தேவை' என்ற
அட்டை தொங்கவிடப்பட்டிருக்கும்
உன் மானம் போல...

* சிங்கர் - துணியைத் தைப்பவர்,
கைமடி - ஒரு ஆடையின் மேல்பாகமும் கைப்பாகமும் இணைத்துக் கொடுப்பவர்...

Comments