அகர முதலி, காதலி, பேதலி..

அறிந்திருக்கிறேன்
அழகு வாய்ந்தது காதலென
அறியாமற் போனேனே
அதன் மற்றுமொரு
அகத்தினை!

ஆதிமுதல் அந்தம்வரை
ஆவரும் செய்வதுவும் காதல்
ஆயின்
ஆவருக்கும் வெற்றியுண்டோ?
ஆதலினாற் காதல் செய்வீர் என்று
ஆற்றலுற்றவர் சொன்னதும் ஏனோ?
ஆண்மையும் பெண்மையும்
ஆளும் காதலில் சில
ஆழத் தோல்விகள் தவிர்க்கமுடியாதே!

இயல்பாய் பாடுவோம் நாம்
இன்பமாய் உருகுவோம்
இனியவை யாவும்
இவ்வுலகில்
இல்லாதவாறு அனுபவித்து மகிழ்வோம்
இல்லையடா நீ எனக்கு என்றவுடன்
இருதயம்
இனியும் துடிக்குமா?
இல்லை வெடிக்குமா?

ஈயாகப் பறந்து அமர்ந்து
ஈசலின் பெருக்காய் ஊற்றெடுத்து
ஈரம் மிகுந்த உன் இதயத்தில்
ஈடுபாடாய் வளர்த்தினோம் காதல்.
ஈரல்குலை ஏதுமின்றி சொல்லுகிறாய்
ஈரிதயம் பிரிந்து போனதென!
ஈரம் மிகுமே என் கண்களில்.

உடைந்து போன இதயத்தை
உளமாறு ஒட்ட நினைக்கிறேன்
உற்றவள் வார்த்தை ஒவ்வொன்றும்
உன்னதமில்லாதவைகள்
உலகக் காதலில் பல
உயிர் போகக் காரணமும்
உப்பில்லாத இவ்வார்த்தைகளோ?

ஊரறிய உள்ளம் தொட நினைத்து
ஊடகங்கள் வழி சொல்ல நினைத்து
ஊதிய காதல் வெடித்துப் போனதே!
ஊமைக் குரலொன்று அறிந்திலேன்
ஊடலின் போது தெரியாதிலேன்.
ஊற்றெடுத்த காதல் இன்றெனக்கு
ஊறு விளைவித்துவிட்டதே!

எம்மீது ஆட்கொண்ட இவைகள்
எப்படித்தான் நீங்கும்?
எப்பிழையும் பொறுத்தலுண்டு, ஆயின்
எங்கனந்தான் பொறுப்பது நீ செய்தவை?
எளிமையாக்கிவிட்டது
என் முகத்தை இக்காதல்
எருமையாக்கிவிட்டதே!!!
எலும்புகளில் இன்றேனோ
எரிச்சலாகி விட்டதே!

ஏழ்கடலும் ஒப்பாகாது எம் காதல் என
ஏலம் விட்டுச் சொன்னவைகள்
ஏறத்தாழ கேவலந்தான் ஆகிப்போனது
ஏவிய எம் காதற்கவிகள்
ஏழ்புறமும் விசிறியடிக்கப்பட்டது..

ஐக்கியம் நிச்சயமில்லையெனினும்
ஐந்திணைகள் சுற்றினோம்
ஐம்புலன்களில் ஓர் புலனான வாயாலே
ஐயகோ எனும்படி செய்துவிட்டாய்...

ஒடுங்கிய எம் மனது
ஒருக்காலும் இறந்தே போகாது
ஒருவேளையும் என்னை நானே
ஒழித்துக்கொள்ளும் நிலையும் வாராது
ஒரு சேர என்னை நினைப்பவளாய்
ஒருத்தி எனக்கமைவாள்.. என் வாழ்வும்
ஒளிரும் பார்!

ஓலை ஒன்று அனுப்புவேன்
ஓட்டை மிகுந்த மனம் கொண்ட உனக்கு
ஓடோடி வந்துவிடு -அன்று நான்
ஓலமிட்ட கண்களைப் பார்ப்பதற்கு
ஓர்புறம் நீ அழுவாய் என்னை விட்டதற்கு
ஓர்நாளும் உன்னை நினையமாட்டேன்
ஓரவிழியால் நீ என்னை சுட்டதற்கு....

Comments