நம் மனதின் குழப்பம் அவள்
நம் வயதின் குழப்பம் அவள்
நம் எண்ணமே குழப்பமாய்
என்று உறுதி படுத்திக்கொண்டான்.

அன்றைய இரவு....
கழிந்தது காதலாய்...
இல்லை இல்லை
காதல் கழியுமா?,,,,, வேறு???
கழிந்தது ஒரு கனவாய்...

"இன்னும் என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?
நான் காவல் துறையை அணுகட்டுமா?"

பூங்குழலியின் இனிய ராகம்
அவன் செவியில் ஒலித்தது.
அவன் கனவே என்று நினைத்துக்கொண்டான்.

குழலி ஒரு மருத்துவச்சி அல்லவா?
அதிலும் மனம் குன்றியவர்களுக்கு
மருத்துவம் பார்ப்பவளல்லவா?
ஆகையால்,
மெல்ல சில கேள்விகள் எழுப்பினாள்..
அவனும் பதில்கள் சொன்னான்..
உடன் பாடின்றி குழலி எழுந்து
காவலை அணுகப் போகிறேன்
என்று தொலைப் பேசியை
எடுக்க முற்படுகையில்.....

அவளால் எடுக்க முடியவில்லை
அவளின் கைகள்
தொலைப் பேசியின் உள்ளே
ஒரு மென் காற்று போல
நுழைந்து செல்கிறதே தவிர
எடுத்து பேச முடியவில்லை
அவளால் எந்த பொருளையும்
தொடக்கூட முடியாது.

அவளென்ன அதிசயமா?

கதிரவன் கொஞ்சம் யோசித்தான்
ஒருவேளை ஆல்கஹால் காரணமோ?
பதிலுக்காக யாசித்தான்..

மனிதன் எதையும் நம்புவதில்லை/
அதிசயங்கள் பல இங்கே
நிகழ்வதை அவன் அறியவில்லை...

என்ன காரணம்?
அழகிய பெண்ணொருத்தி,
அவளால் பொருளும் தொடமுடியாது..
பிரம்மையா?
கனவா?
போதையா?

நண்பனின் புத்தக் கடைக்குச்
சென்று, புத்தியைத் தீட்டினான்.
புத்தகங்களில்
புதையாத பொருளுண்டா?
ஆவியோட்டும் மந்திர
புத்தகங்கள் பல...
காவி ஆடைக்காவது ஓடும்
ஆவிகள் இவை என்று
பல நூல்களைப் பிரித்தான்..

இல்லத்தில் தீபமேற்றி
பாடல் பாடினான்.
இறைவனைத் தூது வேண்டினான்,

ஆனால் அதற்கெல்லாம்
சளைத்தவளல்ல பூங்குழலி..
மீண்டும் தோன்றினாள்.
இம்முறை கதிரவன்
இவளின் பெயர் கேட்டான்.
இனிப்பு ததும்பும்
இதழால் சொன்னாள்
"பூங்குழலி"

" வேறு யாரிடமாவது கடைசியாக
என்னைத் தவிர பேசினாயா?"

"என்ன உளறுகிறாய்?"

" நீ இங்கு
இருந்த காலத்தில்
என்ன என்ன செய்தாய்?"

" உன்னைவிட மேலாக.."

கேள்வியின் உச்சமாக
கேட்டான்...

"நீ இறந்ததைப் போன்று
உணர்ந்திருக்கிறாயா?"

" சுத்தப் பேத்தல்..."

கதிரவன் மெல்ல
கைகளை அவள் தோளில்
தொட்டு பேச நினைக்கிறான்....
காற்றிடம் பேசியது போல
அவளைத் தொட முடியாது போனது..
அவளுக்கு
அது புரியவில்லை.
அவள் இறந்துவிட்டாள் என்று
அவன் சொன்னான்.....
அது தவறு என்று
அடித்துக் கூறினாள் குழலி...

மெல்ல நகர்ந்துகொண்டே
மேஜை அருகே வந்தார்கள்..

" நீ இறந்துவிட்டாய் "

"இல்லை"

"குனிந்து பார் குழலி..
உணருவாய்
உண்மையை"

அங்கே..........

(இனி பொதுப்படையாக கவிதை செல்லும்...)

ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அவள் இதழ் எழுப்பிய சத்தத்தில்
கோலா தவறி சிதறியது..
குழலி கத்தினாள்...
கதிரவனை திருடன் என்று நினைத்தாள்.
அவனோ இல்லை என்று தப்பித்தான்..
சிறு சங்கடம்தான்..

அவன் சொன்னான்.....
இனிமையான
இந்த
இல்லம் என்னுடையது என்று..

அவள்
அதைத் திருப்பி ஒப்பித்தாள்.
இந்த கட்டில்கள், ஜன்னல் வளைவுகள்
சரிகைகள், அலங்கார விளக்குகள்
பூந்தொட்டிகள், பூஜை அறைப் பூக்கள்
இன்னும் இன்னும்.....
என்னுடையது என்றாள்...
உடனே வீட்டை விட்டு வெளியேறு
என்றாள்...
ஆவேசமாய்

கதிரவன் அவளைப்
பைத்தியக்காரி என்று நினைத்தான்...

மெல்ல சமையல் அறை நோக்கி
ஆவேசமாய், நுழைந்தாள்...................

கூட சென்றான் கதிரவன்.
அங்கே அவள் இல்லை...

கனவாக இருக்குமோ?
சில சமயங்கள் நம் எண்ணங்களின்
ஓட்டத்தினால் பாதை சறுக்கி
இம்மாதிரி நிகழ்வதுண்டு..
மனம் ஒரு மாயம்.
அதன் வேலைகள் சில சமயம்
தோற்றுவிக்கும் பல காயம்..
இது அம்மாதிரிதானா?
விடு..........

குளியலறையில்
ஷவரின் மழைத் தூறலில்
ஒடுங்கிப் போயிருந்த
தலை முடிகளை சீவிவிட்டு,
பஞ்சு போன்ற துண்டை எடுத்து
முகத்தை ஒற்றி வைத்து
மெல்ல கண்ணாடியை நோக்கி
நின்றவனுக்குப் பின்னே..........
அவள்.....
சொல்கிறாள்

"உன்னை வெளியேறச் சொன்னேனே?"

அவன் கண்ணாடியைத் துடைத்துவிட்டு
திரும்பவும் பார்த்தான்...
எல்லாம் மாயை./.....

அன்றிரவு சில முடிவுகளாய்
மனதை ஒரு அலையாய் இல்லாமல்
ஒருமுகப் படுத்தினான்...
வீட்டிற்குச் சென்று
அவள் இருக்கிறாளா என்று பார்த்தான்.
இல்லை..
சமயலறையில்
இல்லை
குளியலறையில்
இல்லை......
நிம்மதி.

கவிதைநாயகன் கதிரவன் வாயிலாக.....

என் அம்மாவை அழைத்துக்கொண்டு
புதிதாக தங்கப் போகும்
வீட்டைப் பார்வையிட
சென்றேன்.
நம் உள்ளம் அழகென்றால்
வீடும் அழகாகவே அமையுமல்லவா?
பூவின் அழகு முள்ளிலே இருக்கிறது.
முற்கள் என்றும் அழகானவை.
இல்லம் எனக்கு
இஷ்டமில்லை..
இல்லாத வசதிகள் ஏராளம்..

காற்று இன்றி நாமேது ?
மென் காற்றின் சுகம் அறியாத
மனிதனும் இருக்கிறான உலகில்?
எதிர் அபார்ட்மெண்ட்டில்
ஒரு அழகிய வீடு இருப்பதாக
ஒரு காகிதம் சொல்லியது
காற்றின் உதவியால்
நன்றி காற்றே!
உன்னால் எனக்கு ஆகப் போகும்
மாற்றம் என்னே!!

காகிதத்தின் செய்தியறிந்து
அடுத்த வீட்டை வாடகைக்கு
எடுக்கச் சென்றேன்.

முகப்பிலே தொங்கும் ஆனை
முகனின் தோற்றம்
முகம் மலர்ந்து வரவேற்றது...
இது போதுமே ஒரு உதாரணம்
இடது மூலையில் சோபா!
வலது மூலையில் வெற்றிடம்
அனேகமாய் தொல்லைக் காட்சி
வைப்பதாக இருக்கலாம்.
மத்திய தரையில் கோலங்கள்..
மேலே சிற்பியும் சொக்கும் வர்ணங்கள்
அங்கங்கே அடுக்கப் பட்ட பூந்தொட்டிகள்
சற்று தள்ளி குளியலறை..
அழகூட்டப்பட்ட சன்னல் அறைகள்
இத்யாதி இத்யாதி
மேலே மாடி.....

மாடி என்றாலே
கவிஞர்களுக்கு குஷிதான்.
வானம் இன்றி கவிதைகள் பிறக்குமா?
மிகச் சுத்தமாக டைல்ஸ் பொதிக்கப்பட்ட
மேல்மாடியின் இடது மூலையில்
வானுயர்ந்த கட்டிடங்களும்
நேர் எதிரே அமைதியான கடலும்
மனம் குன்றிய மனிதர்களையும்
நேர் செய்திடும் தோற்றங்கள்.
இயற்கையின் படைப்புகளுக்கு
ஈடாக செய்திட்ட கட்டிடங்களும்
வானும் கடலும்
காற்றின் மெல்லிய கீதங்களும்.....

அட! இந்த வீட்டை விட வேறென்ன வேண்டும்?

அதீத சுகத்தில் ஆட்கொண்ட
நான், சோபாவில் சுகமாய் அமர்ந்து
எதிரே தொல்லைக் காட்சியைக்
காணுகையில்
மனம் கோக் குடிக்கச் சொல்லுகிறது..
தனிமையான வாழ்க்கைதான்
இனிமையான இல்லத்தில்//
குளிரூட்டும் பொட்டியில்
அடுக்கி வைக்கப்பட்ட
கோக்குகளில் ஒன்றை
எடுத்து திறந்தவாறே மெல்ல நிமிர்ந்தேன்...
அங்கே......... அவள்...........

கவிதைநாயகன் கதிரவன்
கவிதைநாயகி பூங்குழலி....

கற்பனைக்கு எட்டாத சில
கவிதைகளில் புனைவதுண்டு.....
இக்கவிதையும் கற்பனைக்கு எட்டாத
ஒரு நிஜமாம்.....
முதலில் பாத்திர அறிமுகங்கள்......

கவிதைநாயகி பூங்குழலியின் வாயிலாக......

மேகக்கூட்டங்களின் ஊடான இடைவெளியில்
மெல்ல பறந்து கொண்டு
தரை இறங்குகிறேன்.
செந்நிறப் புழுதிகளுக்கிடையில்
வர்ணப் பூக்களின் சகதியில்
மெல்ல கண்ணயர்ந்து
உணர்வுகள் கசங்கிய நிலையில்
மெளனியாக பயணம் செய்கிறேன்
என் தோழியின் கை பட்டு
கனவு கலைக்கப் பட்டு எழுந்தேன்
ஒரு மருத்துவமனைப் பூங்காவில்

நிமிட நேரச் சிமிட்டல்கள்
பறவையின் சிறகுகளுக்கும்
தாளாத வாறு பறக்க,
நித்திய கனவைக் கலைத்துவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறது விழிகள்.

என் வீடு
என் உலகம்
என் வாழ்க்கை
எல்லாமே இந்த மருத்துவமனைதான்.
தேன்மொழி இனிய நண்பி
குறிப்புகளில் தவறு நேர்ந்தால்
குட்டும் தோழி..

என் மருத்துவமனை வேலைகளில்
குறிப்பானது கவனித்துக்கொள்ளல்.
அனைவரையும் ஆதர்சனத்தோடு
அன்பாக விளாச வேண்டும்
மனம் இழந்த விலங்குகளுக்கிடையில்
மனம் குன்றிய மனிதர்களின்
உலாவலை செவ்வனே சரி செய்வது
என் தலையாய பணி.

மருத்துவமனை யிலொருவன் சொன்னான்
நீ உயரப் போகிறவள்;
நீ சிறந்தவள்;
உன் கைகள் கடவுளின் கரங்கள்;
உன் வியர்வைகள் இரத்தம்;
உன் உணர்ச்சிகள் அன்புக் கடல்" என்று
எனக்கு உச்சி குளிர்ந்தது.

கண்களின் மிரட்டலில் சொக்கிப்போய்
முன்னம் கண்ட நித்திய கனவில் மூழ்கினேன்
வாழ்விலே நான் நினைத்த படிகள்
கரைசேரும் என் ஓடங்கள்
விளக்கொளியாய் என் மருத்துவக் கறைகள்.
நினைத்துப் பார்க்கவே
நெஞ்சில் ஊறுது சர்க்கரைத் துளிகள்.

கறையில்லாத பற்களில் நகைத்துக்கொண்டே
நகர்ந்து சென்று என் தோழி தேன்மொழியிடம்
சொன்னேன் என் பணி மாற்றத்தை..

மெல்ல சிரித்துக்கொண்டிருக்கும்
இதயத்தோடு பயணம் செய்கிறேன்.
என் உள்ளத்துச் சிரிப்புகளில்
ஊறிப்போகிறது ரத்தமுற்ற இதயம்.
அக்கா மலர்விழியை அழைத்தேன்
என் ஆறாம் விரலாகிய கைப்பேசியிலிருந்து.
என் உள்ளக் குமுறலைச் சொல்லி சிரித்தேன்
அக்கா குழந்தைகள்
அக்காவின் கணவன்.
எல்லாரிடமும் இன்பம் பகிர்ந்தேன்.

என் உறவுகளின் சந்தோசத்தில்
இன்றே இறந்துவிடலாமோ?

கண்கள் மெல்ல கார் கண்ணாடியில்
பயணிக்க,
அங்கே எனக்கெதிரே எமனாய்
ஒரு நீளமான வாகனம்..................

நானும் டிடோவும் (Dido)

சுடப்பட்ட சில வரிகளுடன் என் சொந்த கவிதை இது. கருவில் அவளுடைய தாக்கங்கள் இருக்கலாம். ஆனால் முழுமையாக என்னால் சொந்தம் கொண்டாட முடியாது....

தேநீரின் ஆறிய நிலையும்
படுக்கைகளில் கசங்கிய
பூக்களையும் தளர்வோடு
பார்த்துவிட்டு மெல்ல எழுகிறேன்.
கதிரவனின் கீற்றுகள்
என் ஜன்னலில் அமர
மறுத்து நிற்கிறது.
மழைக்கான அறிகுறியாய் மேகங்கள்
தொய்வான நிலையில் இருக்கின்றன.
என் கண்களுக்கு நேரே
மாட்டப்பட்டிருந்த
உன் புகைப்படம் சொல்கிறது
"கலக்கமுறாதே காதலியே!".


குளியலறையில் தண்ணீர்
வர மறுக்கிறது
நீ தொட்ட விரலில்
ரேகைகள் செல்ல மறுக்கிறது.
ஒட்டாத உடைகளுடன்
அலுவலகம் செல்லுகிறேன்.
என் கைப் பேசியில் பொதியப்பட்ட
உன் அழகு முகம் சொல்கிறது
"கலக்கமுறாதே காதலியே!"


சொத்துப் பிரச்சனையில்
வீட்டை இடிக்கக் காத்திருக்கின்றன
கேட்டர் பிள்ளர்கள்.
கடைசியாக இறுக்கி தாளிட
கைகள் கதவுகளைத் தேடுகிறது.
ஒரு பூங்கொத்தில் ஒளிந்திருந்த
உன் விழிகள் சொல்கிறது
"கலக்கமுறாதே காதலியே!"


வாழ்க்கை வசதிகளும்
இயற்கை நியதிகளும்
என்னை விட்டு நீங்குகின்றன.
என்னை விட்டு நீங்கிய உன்
நாவில் விழைந்த அந்த வார்த்தைகள்
தனித்துவிடப்பட்ட எனக்கு தைரியங்கள்.


நன்றி காதலனே!

சிலகாட்சிகளுக்கு நான் மரியா கரேவுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டவன்...கவிதை என்னுடையது; கரு அவளுடையது.

சர்ச் வாசலில் புடைசூழ
பேண்டு வாத்தியங்களின்
இசையில், காது செவிடாக
என் கண்கள் குருடாக்கப்பட்டு
தயாராக நிற்கப் படுகிறேன்
முற்றிலும் புதிதான
வெள்ளை கவுனோடு!

என் கைகளில் பூத்த வியர்வைகள்
சூடேறத் தொடங்குகிறது.
உன் வருகையில்
மேலும் என்மனமானது
நொந்து போகிறது..
பொய்யான சிரிப்பால்
கரையான பற்களைக்
காட்டி விட்டு
என்னருகே நிற்கிறாய்
நாற்றங் கலந்த பிணமாக..

பாதிரியாரின் வார்த்தைகளுக்கு
உதடுகள் மட்டும் பதில் சொல்கிறது
உள்ளம் முற்றிலும் மறுக்கிறது.
நீர்த்துளி விழுகையினை
காதலன் பிரிவு என்றெண்ணாமல்
பொய்யான பவுடர் பூசிக்கொண்டு
சுற்றி நிற்கிறார்கள்
சுற்றத்தார்கள்.

உள்ளத்தின் மறுப்பு
உதடு வரை வருவதற்கும்
மேல்கையில் துடைத்துவிட்ட
கண்ணீரின் வெப்பம் ஆறுவதற்கும்
சற்று நேரம் பிடித்தது,

தூரத்தில் சிவப்பு வண்ணக்
காரில் அதோ! வருகிறான்
என் மனதை முற்றிலும் அறிந்தவன்
உன் நெஞ்சு மாறுகிறதா
காட்சி மாற்றத்தால்?
காரிலிருந்து இறங்கியவன்
காதல் கண்களைக் காட்டி
கை நீட்டி
என்னை அழைக்கிறான்.

உன்னோடு வாழ்வதும்
அவனோடு சாவதும் ஒன்றுதான்
என் பாவாடைக் கவுனை
இழுத்து பிடித்தவாறு
அவன் நீட்டிய விரல் நோக்கி
ஓடுகிறேன்..
நீர்த்துளிகளைத் துடைத்துவிட்டு..

அவன் சிரிப்பில்
என் உலகமே மாறிவிட்டது.
கர்த்தர் இன்னும்தான் இருக்கிறார்.

உன் ஏமாற்றம் இப்போது
உனக்குத் தெரிகிறது.
பெண் ஏமாற்றம் எப்பவும்
இப்படித்தான் இருக்கும்....

விழுந்து விட்டோம் என
எழுந்திடாதா இருக்கிறோம்?
தொலைத்து விட்டோம் என
துலாவாதா இருக்கிறோம்?
விழுந்த இடத்தில் துலைத்திருப்போம்
தொலைத்த இடத்தில் விழுந்திருப்போம்..

அறிந்திருக்கிறேன்
அழகு வாய்ந்தது காதலென
அறியாமற் போனேனே
அதன் மற்றுமொரு
அகத்தினை!

ஆதிமுதல் அந்தம்வரை
ஆவரும் செய்வதுவும் காதல்
ஆயின்
ஆவருக்கும் வெற்றியுண்டோ?
ஆதலினாற் காதல் செய்வீர் என்று
ஆற்றலுற்றவர் சொன்னதும் ஏனோ?
ஆண்மையும் பெண்மையும்
ஆளும் காதலில் சில
ஆழத் தோல்விகள் தவிர்க்கமுடியாதே!

இயல்பாய் பாடுவோம் நாம்
இன்பமாய் உருகுவோம்
இனியவை யாவும்
இவ்வுலகில்
இல்லாதவாறு அனுபவித்து மகிழ்வோம்
இல்லையடா நீ எனக்கு என்றவுடன்
இருதயம்
இனியும் துடிக்குமா?
இல்லை வெடிக்குமா?

ஈயாகப் பறந்து அமர்ந்து
ஈசலின் பெருக்காய் ஊற்றெடுத்து
ஈரம் மிகுந்த உன் இதயத்தில்
ஈடுபாடாய் வளர்த்தினோம் காதல்.
ஈரல்குலை ஏதுமின்றி சொல்லுகிறாய்
ஈரிதயம் பிரிந்து போனதென!
ஈரம் மிகுமே என் கண்களில்.

உடைந்து போன இதயத்தை
உளமாறு ஒட்ட நினைக்கிறேன்
உற்றவள் வார்த்தை ஒவ்வொன்றும்
உன்னதமில்லாதவைகள்
உலகக் காதலில் பல
உயிர் போகக் காரணமும்
உப்பில்லாத இவ்வார்த்தைகளோ?

ஊரறிய உள்ளம் தொட நினைத்து
ஊடகங்கள் வழி சொல்ல நினைத்து
ஊதிய காதல் வெடித்துப் போனதே!
ஊமைக் குரலொன்று அறிந்திலேன்
ஊடலின் போது தெரியாதிலேன்.
ஊற்றெடுத்த காதல் இன்றெனக்கு
ஊறு விளைவித்துவிட்டதே!

எம்மீது ஆட்கொண்ட இவைகள்
எப்படித்தான் நீங்கும்?
எப்பிழையும் பொறுத்தலுண்டு, ஆயின்
எங்கனந்தான் பொறுப்பது நீ செய்தவை?
எளிமையாக்கிவிட்டது
என் முகத்தை இக்காதல்
எருமையாக்கிவிட்டதே!!!
எலும்புகளில் இன்றேனோ
எரிச்சலாகி விட்டதே!

ஏழ்கடலும் ஒப்பாகாது எம் காதல் என
ஏலம் விட்டுச் சொன்னவைகள்
ஏறத்தாழ கேவலந்தான் ஆகிப்போனது
ஏவிய எம் காதற்கவிகள்
ஏழ்புறமும் விசிறியடிக்கப்பட்டது..

ஐக்கியம் நிச்சயமில்லையெனினும்
ஐந்திணைகள் சுற்றினோம்
ஐம்புலன்களில் ஓர் புலனான வாயாலே
ஐயகோ எனும்படி செய்துவிட்டாய்...

ஒடுங்கிய எம் மனது
ஒருக்காலும் இறந்தே போகாது
ஒருவேளையும் என்னை நானே
ஒழித்துக்கொள்ளும் நிலையும் வாராது
ஒரு சேர என்னை நினைப்பவளாய்
ஒருத்தி எனக்கமைவாள்.. என் வாழ்வும்
ஒளிரும் பார்!

ஓலை ஒன்று அனுப்புவேன்
ஓட்டை மிகுந்த மனம் கொண்ட உனக்கு
ஓடோடி வந்துவிடு -அன்று நான்
ஓலமிட்ட கண்களைப் பார்ப்பதற்கு
ஓர்புறம் நீ அழுவாய் என்னை விட்டதற்கு
ஓர்நாளும் உன்னை நினையமாட்டேன்
ஓரவிழியால் நீ என்னை சுட்டதற்கு....

|

எனக்கென்று
ஒரு வயிறு
அதை
முழுவதுமாய் நிரப்ப
மூன்று வேளையும்
முழு சாப்பாடு

இரவு இரவியின்
வெளிச்சத்தில்
அன்னமூட்ட
அன்னை
அவளுக்குப் பின்

தலையணை மந்திரங்கள்
தலையில் மையிட
தலைவி ஒருத்தி

பூமிக்குத் துரோகஞ் செய்யும்
கால்களும், உடம்பும்
தங்க
தங்கமான இல்லம்

கொலுசுகளின் ஓசையில்
தூங்கும் இதயத்தை
தூண்டிவிடும் கற்பனை
என

இது போதும் எனக்கு
இத்தனை தேவைகள்
இருக்க
எதற்குத் தேவை
பணம்?

எனது பார்வையில் சினிமா:

சிறுவயதுமுதல் நான் பார்த்ததெல்லாம், என் அப்பா கூட்டி போனதெல்லாம் 100 நாட்களைத் தாண்டி ஓடும் படங்களுக்கு மட்டும்தான். அதிலும் 100 நாட்கள் கழித்துதான் நாங்கள் எல்லாரும் போவோம். எங்கள் இருக்கைக்கு அருகில் யார்மே இருக்கமாட்டார்கள்.... என் அப்பா சின்ன வயதிலும் சரி இப்போதும் சரி மிக அருமையான படங்களையே பார்ப்பார்.. இப்போ வருகிற வெட்டு குத்து கொலை ஏய்ய்ய்ய்ய் போன்ற திரையைக் கிழிக்கும் படங்களை எல்லாம் விரும்பமாட்டர்.. இதைவிட தெலுங்குப் படம் அறவே பிடிக்காது. தமிழைவிட மோசமானது... தியேட்டர் விட்டு வெளியே வரும்போது காதில் ரத்தம் வழியும், அந்த அளவிற்கு ஓவர் சவுண்டு.... அதன்படியே வளர்ந்து வந்து தற்சமயம் எனக்கும் இந்தமாதிரி போக்கிரித்தனமான , ஆழ்வாரென்ற போர்வையில் தாமிரபரணியில் பொய் பேசிக்கொண்டு கொலை செய்யும் பட்ங்களை பிடிப்பதில்லை. இருந்தாலும் நண்பர்கள் வர்ப்புறுதலில் சில விஜய் படங்களைப் பார்த்தேன்... இல்லையென்றால் வீட்டு திருப்திக்கு இணையத்திலிருந்து இறக்கவேண்டியதுதான். ஆங்கிலப் படங்கள் பார்க்கத் தூண்டியதும் தந்தையே!
முதன் முதலாக நான் அவருடன் பார்த்த ஆங்கிலப் படம் Broken Arrow நன்றாக நினைவிருக்கீறது... (என் அம்மா கூட திட்டினார்கள். என்னை கெடுப்பதாக........ தற்போது ஸ்டார் மூவிஸ் படங்கள் பெயர் முதற்கொண்டு தெரிந்து வைத்திருக்கிறார்... ) ஆரம்ப காலத்தில் Action படங்களை மட்டுமே விரும்பிப் பார்த்த நான் முதன் முதலாக எந்த ஆக்ஸனும் இல்லாமல் பார்த்த படம் E.T. அதிலும் கூட பிரம்மாண்டம் இருந்ததால்....

திருப்பூரில் ஆங்கிலப் படத்திற்கென்றே விசேச தியேட்டர் இருக்கிறது. கம்பனி கொடுக்க நண்பர்களும் இருப்பதால் நிறைய படங்களைப் பார்த்து தள்ளிவிடுவேன். எல்லாமே வெள்ளிக் கிழமைதான் ரிலீஸ். அன்று இரவு இரண்டாம் ஆட்டத்திற்கு நாங்கள் தயாராக இருப்போம்/ ஒரு தகவல் கூட இருக்காது.. எல்லாரும் கிளம்பி வந்துவிடுவோம் (கவனியுங்கள்... கிட்டத்தட்ட 25 பேர் வரை நாங்கள் )
இங்கே டிக்கெட் விலை 35 வரை மட்டும்தான். (தப்பிச்சோம்) எந்த காரணத்திலும் பாக்ஸிலும் கீழ்டிக்கட்களிலும் உட்காரமாட்டோம்... பால்கனிதான்........ ஆனால் பாருங்கள் நான் சொன்ன அந்த விசேச தியேட்டரில் பால்கனியே இல்லை........ தியேட்டர் சிறப்பு 70MM, DTS.. முதல்நாள் படம் என்றால் ரவுசுக்கு அளவே கிடையாது........... நாங்கள் செய்த விவாகரம் தியேட்டர் முதலாளிவரை எட்டி, எங்கள் கூட்டத்தைப் பார்த்து சும்மா இருந்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..........

தற்போது தமிழில் படங்கள் வருவதால் நன்றாக புரிகிறது................... ஒருதடவை இப்படித்தான் கான்ஸ்டைண்டீன் என்ற பேய் படம் ஆங்கிலத்தில் வந்தது... எம் நண்பர்களில் சிலருக்கு சுத்தமாக ஆங்கில தெரியாது......(எனக்கே கூட) இருந்தாலும் நான் எனது நண்பன் ஒருவனுக்கு மொழிமாற்றம் செய்து கொண்டிருந்தேன்.... சற்று கிண்டலாக...... எனக்குக்கிழ் உள்ள ரசிகர் ஒருவர் சண்டைக்கே வந்துவிட்டார்... ஏகப்பட்ட கெட்டவார்த்தைகள் பேசி ஏசினார். நாங்கள் ஒரு படையல்லவா? இருந்தாலும் முதலாளியிடம் போய் குறை சொல்ல, அவரும் மெல்ல இங்கே வந்து என்னையும் இன்னும் சிலரையும் அழைத்து பதமாக, சில அறிவுரைகள் சொல்ல, எங்களுக்கு அவமானம் வேறு........... படத்தை பார்க்காமல் எங்களையே பலர் பார்த்தனர்.........

இப்படியாக ரவுசு செய்தாலும் அதே முதலாளியை நாங்கள் நன்றாக அறிவோம்...அவரும்தான். தற்சமயம் அவரது மகன்களின் கட்டுப் பாட்டில் தியேட்டர் வந்ததாலும் எங்களுக்கு சற்று முதிர்ச்சி வந்ததாலும் பெரும்பாலானோர் வேலைக்குச் சென்று விட்டதாலும் கலையிழந்து இருக்கிறது அந்த தியேட்டர்...

அதுசரி........... நான் ரெம்ப அதிகம் முறை பார்த்த படம் independance Day ரெம்ப வியந்து பார்த்தது Ben-Hur........ நான் இன்னும் இந்த படத்தை எத்தனை முறை போட்டாலும் பார்ப்பேன்.... பழைய படங்கள் பல எனக்கு தந்தை அறிமுகம் செய்தார். குறிப்பாக The Good Bad and Ugly, Fist full of dollers, Where Eagles Dare , Ten commandments Ben-Hur, The Bridge in River Kwai போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை...

God father படங்களை கட்டாயப் படுத்தி பார்த்தேன்..... இப்போதெல்லாம் புரிகிறது....பல படங்களை என்னால் குறிப்பிட முடியவில்லை.......... இருப்பினும் Spirit, lola runnt, Saving private Ryan, Shindler's List இன்னும்பல, படங்கள் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றன.... சமீபத்தில் DVD யில் பார்த்தது 50 First Dates. நம்மாளுங்க காதல் கீதல்னு எடுத்து குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறார்கள் தமிழ் சினிமாவை.......... அங்கங்கே நல்ல தமிழ்படங்களால்தான் ஏதோ தமிழ் சினிமாவே பிழைத்துக்கொண்டு இருக்கிறது....

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்......... எனக்கு தூக்கம் வேறு வருகிறது... இத்தோடு முடித்துக் கொள்ளலாம்.........

|

என் சின்ன வயதில் எனக்கு பாட்டி சொல்லிக்கொடுத்த கதை இது.....

முன்னொரு காலத்தில் விளாத்திகுளம் என்ற ஊரில் ராக்கையன், மூக்கையன் என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர்.. அண்ணன் ராக்கையனும் தம்பி மூக்கையனும் கடுமையாக வேலை செய்து முன்னேறினர். சிலகாலம் கழித்து ராக்கையன் ஒரு பெரும் பணக்காரியைப் பார்த்து கலியாணம் செய்து கொண்டான். மூக்கையனோ ஒரு ஏழையைப் பார்த்து கலியாணம் செய்து கொண்டான்.
ராக்கையன் பொண்டாட்டி தன் புருஷனை மதிக்கவே மாட்டாள். சரியான சிடுமூஞ்சி. பணக்காரி என்ற திமிரு..
மூக்கையன் பொண்டாட்டியோ ரெம்ப நல்லவள். கோபப்படமாட்டாள். அன்பே வடிவானவள்.. இருந்தாலும் என்ன செய்ய? ஏழையாச்சே! ரெம்பவும் கஷடப் பட்டார்கள்.. அண்ணனிடம் மூக்கையன் போய் பணம் கேட்டால் அடித்து துரத்துவான். வேலையிலும் பெரும் பங்கு பணம் அவனுக்கே போய்விடுகிறேதே என்று எண்ணீ மனம் நொந்து போனான் மூக்கையன். என்ன செய்வதென்றே தெரியாமல்
ஒருநாள்-
அந்த ஊர் எல்லையிலுள்ள ஒரு குளத்தில் விழுந்து தற்கொலை செய்ய முயன்றான். அப்போது அந்த வழியாக வந்த தென்னை தேவதை மூக்கையனைப் பார்த்து தடுத்தாள். எதற்காக தற்கொலை செய்யப் பார்க்கிறாய் என்று கேட்டாள். அவனோ தன் வறுமையக் கொட்டித் தீர்த்தான். சரி! உனக்கு மூன்று தேங்காய் தருகிறேன். வெள்ளிக் கிழமை அன்று காலை நேரமாக எழுந்து சாணியால் வீட்டை மொழுகி பூஜை செய்து, இந்த தேங்காயை உடை... உடைக்கும் முன் நீ என்ன கேட்கிறாயோ அது கிடைக்கும் என்றது அந்த தேவதை.. மூக்கையனும் அதை வாங்கிக் கொண்டு சென்றான்
வெள்ளிக்கிழமை அன்று தேவதை சொன்னமாதிரியே எல்லாம் செய்து முடித்து அவனும் அவன் மனைவியும் கடவுளை வேண்டிக்கொண்டே "நல்ல அழகான வீடு வேண்டும்" என்று கேட்டு ஒரு தேங்காயை உடைத்தார்கள். அதன்படியே அழகான வீடு அந்த வினாடியில் தோன்றியது.. மூக்கையனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் ஆச்சரியம்... அடுத்து இன்னொரு தேங்காயை எடுத்து " பை நிறைய பொன் வேண்டும் என்று கேட்டார்கள். அதன்படி அடுத்த வினாடியே தங்கம் கொட்டோ கொட்டுன்னு கொட்டியது. அடுத்து மூன்றாவது தேங்காயை எடுத்து வீட்டு சாமான்கள் எல்லாம் வேண்டும் என்று வேண்டினார்கள். அதே மாதிரி நடந்தது... இருவரும் சந்தோசமாக குடித்தனம் செய்தார்கள்..

எல்லா பொன்னயும் தாமே வைத்திருப்பதற்கு பதில் ஏழைக்கு கொடுக்கலாமே என்று இந்த இரண்டு பேரும் நினைத்தார்கள்.. பொன்னை கொஞ்சம் கொஞ்சமாக அளந்து கொடுக்க படி வேண்டும்... ஆனால் இவர்களிடம் படி இல்லை.. உடனே மூக்கையன் தன் அண்ணன் ராக்கையனிடம் போய் படி கேட்டு வரலாம் என்று கிளம்பினான்.. அண்ணன் வீட்டுக்குப் போய் அண்ணியிடம் படி கேட்டான்.,. அவளுக்கோ சிறு சந்தேகம். படி வைத்து அளக்கும் அளவிற்கு இவர்கள் சம்பாதிக்கிறார்களா ? என்று நினைத்தாள். உடனே படியின் அடியில் புளியை கொஞ்சம் அப்பி வைத்து மூக்கையனிடம் கொடுத்தனுப்பினாள். மூக்கையனும் தன் வீட்டுக்குச் சென்று அந்த படியை வைத்து அளந்து ஊருக்கெல்லாம் பொன்னை அள்ளிக் கொடுத்தான். திரும்பவும் அந்த படியை அண்ணியிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் சென்றான் மூக்கையன். ராக்கையன் பொண்டாட்டி உடனே படியில் ஒட்டிய புளியை எடுத்துப் பார்த்தாள். அதில் தங்கம் சிறிதளவு ஒட்டியிருந்தது. அவளுக்கு ஆச்சரியம் தங்கத்தை படியில் அளக்கும் அளவுக்கு தங்கம் வைத்திருக்கிறார்களா? என்று. உடனே ராக்கையனை வரச்சொல்லி எல்லா விபரத்தையும் சொல்லி, நீங்களும் அதே அளவிற்கு தங்கம் கொண்டுவந்தால்தான் வீட்டுக்குள்ளே விடுவேன் என்று மிரட்டினாள்... ராக்கையனும் வேற வழியில்லாமல் தம்பி வீட்டுக்குப் போய் நீலிக் கண்ணீர் வடித்தான்... தம்பியும் தான் எப்படி வரம் பெற்றேன் என்று விபரம் சொல்லி அனுப்பினான்...
ராக்கையன் அதேமாதிரி குளத்தில் விழ பார்க்க, தென்னை தேவதை தடுத்து நிறுத்தியது,, தன் கஷ்டத்தை தேவதையிடம் சொன்னான். உடனே தேவதை மூன்று தேங்காயைக் கொடுத்து அனுப்பியது.. இவனும் சந்தோஷமாக வீட்டுக்கு வந்தான்..
வீட்டில் அவன் பொண்டாட்டி மிகுந்த கோபம் கொண்டாள்... பொன் எடுத்துக்கொண்டு வரச் சொன்னால் தேங்காய் வாங்கிக்கொண்டு வந்து ஏதோ வரம் கிரம் என்றூ சொல்கிறாயே என்று கரிச்சுக் கொட்டினாள். ராக்கையனோ எப்படியோ அவளை சமாதானப் படுத்தி வெள்ளிக் கிழமை அன்று பூஜை செய்து தயாராக நின்று கொண்டிருந்தார்கள்... ராக்கையன் மனைவிக்கு சரியான கோபம்.. இந்த மனுசனையெல்லாம் கட்டிட்டு ரெம்ப மாரடிக்கவேண்டியதா போச்சே என்று புலம்பினாள்..
ராக்கையன் முதல் தேங்காயை எடுத்து உடைத்துவிட்டு தன் மனைவியிடம் என்ன வரம் வேண்டுமோ கேள் என்றான்.... கடும் கோபத்தில் இருந்த அவளோ "ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!! மயிரு வேணும்" என்றாள்.. உடனே அவர்கள் வீடெல்லாம் மயிராக (முடி) காட்சியளித்தது.. அதைவிடக்கொடுமை அவர்கள் உடம்பெல்லாம் முடியாகவே இருந்தது. அவள் பயந்து கொண்டே அடுத்த தேங்காயை எடுத்து உடைத்தாள். " மயிரெல்லாம் போகவேண்டும்" என்று கேட்டாள்... அடுத்த வினாடியே எல்லா முடியும் போய்விட்டது.. கூடவே ராக்கையன் தலைமுடியும், அவளோட தலைமுடியும் போய்விட்டது. பின் அலறியடித்துக்கொண்டு கடைசி தேங்காயை உடைத்தாள். தலை முடி மட்டும் வரவேண்டும் என்று கேட்டாள். அதன்படியே தலைமுடி மட்டும் வந்துவிட்டது..
தன் கோபத்தால் நல்ல வரங்களைக் கூட பயன்படுத்தத் தெரியாமல் சிறிது காலம் வாழ்ந்துவிட்டு இறந்து போயினர் இவர்கள்..
தானம் தர்மம் ஆகியவை செய்து நீண்டநாட்கள் ஆயுளோடு வாழ்ந்து சரித்திரம் படைத்தனர் மூக்கையனும் அவன் மனைவியும்

குழந்தைகளே ! இதிலிருந்து நாம் அறிவது:
 • கோபம் கொள்ளக் கூடாது
 • பொறாமை கொள்ளக் கூடாது
 • அன்பும் பக்தியும் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி
 • பாசமான குடும்ப வாழ்வு வாழ வேண்டும்
 • தானம் தர்மம் ஆகியவை செய்ய வேண்டும்
 • ஒவ்வொரு செயலையும் சிந்தித்தே செய்யவேண்டும்

முன்னொரு காலத்தில் சிவமலைக்கு அடிவாரத்தில் உள்ள நாடான நேசபுரத்தை மன்னன் தடந்தோழன் ஆண்டு வந்தான். ஆட்சியில் எந்த பங்கமும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. அமைச்சர்கள் புலவர்கள் வியாபாரிகள் ஆகிய எல்லோரும் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.
மன்னம் தடந்தோழனின் தந்தையால் உருவானது இந்த அரசு. அதனால் மன்னன் எந்த ஒரு போரிலும் பங்கேற்காமலும் வீணாக போருக்குப் போகாமலும் ஆட்சி செய்தான். இருப்பினும் கத்திச் சண்டை, வில் சண்டை, போன்ற எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தான்.

ஓர்நாள், எதிர் நாட்டு மன்னன் விஜயசேடனுக்கு அரசை விரிவுபடுத்தும் எண்ணம் வரவே பக்கத்து நாடான நேசபுரத்தை மடக்க திட்டமிட்டான்.. அதன்படி ஒரு புறாவின் காலில் ஓலையைக் கட்டி தூது விட்டான்.. அந்த புறா பறக்கும் வழியில் ஒரு வேடனால் வேட்டையாடப்பட்டது.. இதனால் செய்தி போய்ச் சேரவில்லை.. விஜயசேடனுக்கோ கோபம்.. அதனால் படையெடுத்து வந்து நேசபுரத்தை முற்றுகையிட்டு அங்குள்ள பசுக்களை இழுத்துச் சென்றான்.. தடந்தோழனுக்கு அப்போதுதான் விசயமே தெரியும். ஆகையால் பதறியடித்து ஓடி வந்து செய்தி அனுப்பிப் பார்த்தான். ம்ஹூம்... போர்தான் என்று முடிவாய் சொல்லிவிட்டான் விஜயசேடன்.
தட்ந்தோழனுக்கோ எல்லா கலையும் தெரிந்திருந்தும் போர் அனுபவமில்லாத அச்சம் பீடித்துக்கொண்டது. போர் உடை தரிக்கவே பயந்துகொண்டான். அவனின் பயத்தைக் கண்டு மற்ற அமைச்சர்களும் பயம் கொண்டார்கள். தளபதிகள் அரசனின் உத்தரவுக்காக காத்திருந்தார்கள்.. குழப்பங்கள் நெடுநேரமாக நீடித்தது.
அதுவரையிலும் ஊருக்கு வெளியே காத்திருந்த விஜயசேடனால் தாக்கு பிடிக்கமுடியவில்லை.. படைகளுக்கு உத்தரவிட்டான். அவனின் படைகள் ஆராவாரத்துடன் கோட்டைக் கதவுகளை உடைத்தெரிந்து உள்ளே போனது.. சற்றும் எதிர்பாராத நேசபுரத்து அரசனோ தளபதிகளை ஏவிவிட்டு படைகளை அடக்குமாறு உத்தரவிட்டான். ஆனால் தளபதிகளின் உத்தரவுக்கும் நேரமில்லாமல் விஜயசேடன் படைகள் துவம்சம் செய்து நாட்டைக் கைப்பற்றியது. மேனியெல்லாம் நடுங்க நடுங்க நின்று கொண்டிருந்த தடந்தோழனை ஒரு கேவலமான பார்வை பார்த்துவிட்டு அவனை அரசவைக்கு கொண்டு சென்றான்.. தலை கவிழ்ந்து நின்று கொண்டிருக்கும் தடந்தோழனைப் பார்த்து விஜயசேடன் சொன்னான்" மன்னா! என்னதான் நீ போருக்கு வரவில்லை என்றாலும் உன் ஆட்சி மிக நன்றாக இருந்ததாக கேள்விப் பட்டேன். என்னதான் திறமையாக போர் செய்தாலும் எனது ஆட்சி உன்னைப் போல் இல்லை.. ஆக மக்களின் தலைவனான உன்னையே மீண்டும் அரசனாக்கிச் செல்லுகிறேன்.. ஆனால் ஒரு விபரம்! என்னுடைய அடுத்தடுத்த போர்களுக்கு நீ தலைமை தாங்கவேண்டும்" என்று உத்தரவிட்டான்.
தடந்தோழன் மனம் நெகிழ்ந்தான். போதிய போர் அனுபவம் நாட்டைக் காக்கும் என்பதை புரிந்துகொண்டு உத்தரவுக்கு கீழ்படிந்தான். மன்னரும் அன்றைய பொழுதையும் சிறப்பாக கழித்துவிட்டு தம் நாட்டுக்குச் சென்றார்.....

குழந்தைகளே! மேற்கண்ட இந்த கதையில் தெரிவது.........
 • நம் பொறுப்புகளை நாம் சரிவர செய்யவேண்டும்
 • போதிய அனுபவத்தை சிறுவயதிலிருந்தே வளர்த்திக் கொள்ளவேண்டும்
 • அச்சம் தவிர்க்கவேண்டும்
 • நம்மை விட வேறொருவன் சிறப்பாக செயல்களை செய்யும் போது அதற்கு மதிப்பளிக்கவேண்டும்

முன்னொரு காலத்தில் வாஞ்சி எனும் ஊரில் தம்புடையான் என்ற முதியவர் வசித்துவந்தார். அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் பெயர் விக்கிரமாதித்தன் இன்னொருவன் பெயர் வாங்கிரமாதித்தன்.
பெயருக்கேற்றார்போல் விக்கிரமாதித்தன் எந்த பொருளையும் உருப்படியாக வைத்திருக்கமாட்டான். அப்போதே விற்று காசை கரியாக்குவான். ரெம்ப சோம்பேறி. தொடைநடுங்கி வேறு......
இவனுக்கு நேர்மாறாக இருந்தான் வாங்கிரமாதித்தன். நல்ல புத்திசாலி..

ஒருநாள்-இரவு
இருவரும் காட்டில் பேசிக்கொண்டே நடந்தார்கள். அடுத்த ஊருக்குச் செல்லவேண்டும். ஏதாவது சத்திரம் இருந்தால் நல்லது என்று துலாவிக் கொண்டே வந்தார்கள். ஓர் இடத்தில் வெளிச்சம் கண்ணுக்குப் படவே, இருவரும் வேகமாக அந்த இடத்திற்கு அடைந்தனர். அது பாழடைந்த சத்திரமாக இருந்தது. உள்ளே சிலர் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். இரு மாதித்தர்களும் குளிரால் நடுங்கினர்.அப்படியே உட்காரும் போது ஒரு சத்தம்..

"டேய் என்னங்கட பண்றீங்க"
குரல் தடித்து காணப்பட்டது.. இருவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது
இருந்தாலும் வாங்கிரமாதித்தன் மட்டும் தைரியமாக குரல் கொடுத்தான்..
" யாருங்கண்ணா? "
"சத்திரத்தோட முதலாளிடா நானு"
"அண்ணா! இங்க கொஞ்ச நேரம் தங்கிக் கொள்கிறோம் விடியலைக் கண்ணில் காணா முன் நாங்கள் சென்று விடுகிறோம்" என்றான்
" சரிசரி ரெண்டுபேரும் மாடியில இருக்கிற உதவியாளர்கிட்ட பேரக் கொடுத்து பதிவு பண்ணிக்கோங்க.. நெறய திருட்டு நடக்குது இங்க.. "
"சரிங்கண்ணா!" இருவரும் கோரஸாக சொல்லிக் கொண்டு நடந்தார்கள்

மாடிக்குச் சென்றால் அங்கே ஒரு பெருங்கூட்டமே நின்றுகொண்டிருந்தது... அது கொள்ளைக் கூட்டம். இருவரையும் வளைத்துப் போட்டது. தொடை நடுங்கி நடுங்கிக் கொண்டே இருந்தான்.. வாங்கிரமாதித்தனோ எப்படி தப்பிப்பது என்று யோஜனை செய்தான். இருவரின் உடமைகளை சோதனை செய்தார்கள் ஒன்றுமே அகப்படவில்லை. அதனால் கொள்ளைக்கூட்டத் தலைவன் இருவரிடமும் மிகுந்த கோபமாய் இருந்தான்.. அந்த நேரத்தில் வாங்கிரமாதித்தன் ஒரு காரியம் செய்தான். தான் மறைத்து வைத்திருந்த சில நாணயங்களை தானாகவே வந்து கொடுத்தான் கொ.கூட்டத் தலைவனிடம்..
அப்படியே, "அண்ணா என்னிடம் மட்டுமே பணமுள்ளது. அவனை விட்டுவிடுங்கள் அவன் எனது தம்பிதான். அவனுக்கு நான் எப்படியாவது பணம் ஏற்பாடு செய்து தந்துவிடுகிறேன். என்னை நம்புங்கள் " என்றான்.
தலைவனோ கொஞ்சம் யோசித்துவிட்டு. எப்படியும் தம்பிக்காக இவன் வந்துதானே ஆக வேண்டும் என்று வாங்கிரமாதித்தனை மட்டும் விட்டுவிட்டான். விக்கிரமாதித்தனோ கொஞ்சமும் யோசனையில்லாமல் கூச்சல் போட்டான். அண்ணனைத் திட்டித் தீர்த்தான்.. அதோடு அவர்களிடம் உதையும் வாங்கிக் கொண்டான்.
வாங்கிரமாதித்தன் உடனே வெகுவேகமாக் ஓடினான். பக்கத்து ஊரில் உள்ள ஊர்காவல் படைக்கு விபரம் சொல்லி கூட்டி வந்தான். சத்திரத்தில் சப்தமில்லாமல் படையினர் நுழைந்தனர்.. முதலில் சத்திர முதலாளி என்று சொன்னவனை பிடித்து கட்டினார்கள் பின் மாடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கொள்ளைக் கூட்டத்தினரை அப்படியே வளைத்துப் பிடித்தனர்.
அண்ணன் நம்மை ஏமாற்றவில்லை என்று தம்பி சந்தோசமாக கட்டி பிடித்துக்கொண்டான். ஊர்காவல் படையினர் வாங்கிரமாதித்தனை நன்றாக பாராட்டினர். கொ.கூ. தலைவன் நொந்தவாறே கைதியாய் சென்றான்.
பின் நிம்மதியாக தூங்கி அடுத்தநாள் காலை எழுந்து பக்கத்து ஊருக்குச் சென்றனர்கள் இந்த சகோதரர்கள்....

குழந்தைகளே இந்த கதையிலிர்ந்து நீங்கள் அறிவது:
 • தொடைநடுங்கியாக இருக்காமல் தைரியமாக இருக்கவேண்டும்
 • சகோதரனை சந்தேகப் படுதல் கூடாது
 • எந்த சூழ்நிலையிலும் நன்றாக யோஜனை செய்யவேண்டும்
 • முன்பின் தெரியாத ஒரு இடத்தில் இரவு நேரத்தில் தங்குவதற்கு முன் யோசனை செய்யவேண்டும்..

Subscribe